பிரச்னை ஜாதியல்ல, ஜாதீயம்!

கௌரவக் கொலைகள் நிகழ்த்தப்படும்போதெல்லாம் அரசியல் தலைவர்கள் கோபம் கொள்கிறார்கள்; கொதிப்படைகிறார்கள்; சமூகத்தையும் ஆளுங்கட்சியையும், காவல் துறையின் பொறுப்பின்மையையும் குறை சொல்கிறார்கள். அவர்களை கொலைக்கு காரணமாக்குகிறார்கள். ஊடகங்கள் சிறப்புப் பேட்டிக்கு முந்துகின்றன.
Updated on
2 min read

கௌரவக் கொலைகள் நிகழ்த்தப்படும்போதெல்லாம் அரசியல் தலைவர்கள் கோபம் கொள்கிறார்கள்; கொதிப்படைகிறார்கள்; சமூகத்தையும் ஆளுங்கட்சியையும், காவல் துறையின் பொறுப்பின்மையையும் குறை சொல்கிறார்கள். அவர்களை கொலைக்கு காரணமாக்குகிறார்கள். ஊடகங்கள் சிறப்புப் பேட்டிக்கு முந்துகின்றன. வாதாட வழக்குரைஞர்கள் போட்டி போடுகிறார்கள்.... என்னவெல்லாமோ நடக்கிறது. ஆனால் எதனாலும் பயனில்லை.
 எல்லா இடங்களிலும் ஜாதி முன்வைக்கப்படுவது தொடர்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு முதல், வீடு வாடகைக்கு விடுவது வரை ஜாதி நேரிடையாகவும் மறைமுகமாகவும் கேட்கப்படுகிறது. கூச்சமில்லாமல், எந்தெந்த தொகுதியில் எங்கள் ஜாதியினர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதைப் பட்டியலிடும் அளவுக்கு ஜாதிச் சங்கங்கள் களத்தில் இறங்குகின்றன. தொழிற்சங்கங்கள்கூட ஜாதியால் பிரிவுபட்டுள்ளன.
 இவை ஒருபுறம் இருக்க, எல்லா ஜாதியினரும் இடஒதுக்கீட்டில் மேலும் சலுகை பெற விழைகிறார்கள். இதையும் அரசியல் கட்சிகள் பின்புலமாக நின்று ஆதரிக்கின்றன. இந்திய அரசியலில் ஜாதி என்பது வாக்கு வங்கி அரசியலாக மட்டுமன்றி, இடஒதுக்கீடு அரசியலுக்கும் பயன்படுகிறது. தனியார் பெருநிறுவனங்களிலும் இடஒதுக்கீடு தேவை என்று கேட்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்புடைய நிறுவனங்களிலும்கூட, இத்தகைய இடஒதுக்கீடு அமலில் இல்லை என்றாலும், அவர்கள் இத்தகைய கோரிக்கையை முன்வைக்கத் தயங்குவதில்லை.
 ஜாதி ஒழிய வேண்டும் என்று சொல்கிற, விரும்புகிற, முழக்கமிடுகிற அரசியல் கட்சித் தலைவர்களில் பெரும்பாலோர் வேறு ஜாதியில் பெண் எடுப்பதில்லை; பெண் கொடுப்பதில்லை. ஆனாலும், ஜாதி ஒழிய வேண்டும்; கெளரவக் கொலைகள் தடுக்கப்பட வேண்டும்; அதற்குப் புதிய சட்டங்கள் இயற்ற வேண்டும் என்றெல்லாம் அக்கறையுடன் பேசுகிறார்கள். இத்தகைய அரசியல் போலித்தனத்தால்தான் தமிழகத்தில் ஜாதிகள் ஒழியவில்லை. தெருப் பெயர்களில் பின்னொட்டாக இருந்த ஜாதிகளை அழிக்க முடிந்ததைப்போல, திருமணப் பத்திரிகைகளில் ஜாதியை அழிக்க முடியவில்லை. "ஜாதிமறுப்புத் திருமணம்' என்று சொல்லும் தைரியமில்லாமல், கலப்புத் திருமணம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
 தமிழகத்தில் வெளியில் தெரியாத கெளரவக் கொலைகள், வீட்டுக்குள்ளாகவே வெறும் தற்கொலைகளாக நடந்து கொண்டே இருக்கின்றன. பல கொலைகள் குடும்பத்துக்குள்ளாகவே நடைபெற்று மறைந்து போகின்றன. வெளிப்படையாகத் தெரியவரும் சில கௌரவக் கொலைகளும் அரசியலாக்கப்பட்டு, தீர்வு காணப்படாமல் மறக்கப்படுகின்றன.
 தருமபுரியில் திவ்யா-இளவரசன் ஜோடி கலப்புமணம் மிகப் பெரிய அரசியலானது. ஆனாலும், திவ்யா அவரது தாய்வீடு செல்லவே நேர்ந்தது. இப்போது திவ்யா என்னவானார் என்பது குறித்து யாருக்கும் அக்கறையில்லை. தற்போது கவுசல்யா-சங்கர் தம்பதிக்கு நேர்ந்த கொடுமை பேசப்படுகிறது. தேர்தல் முடிந்ததும்...கொலைகளும் கடந்துபோகும்!
 கலப்புத் திருமணம் (ஜாதிமறுப்புத் திருமணம்) செய்வோருக்கு அரசு அளிக்கும் சலுகைகள் மிகச் சிலவே. இதற்காகவெல்லாம் யாரும் கலப்பு மணம் செய்து கொள்ள மாட்டார்கள். காதலால் மட்டுமே கலப்பு மணங்கள் நடக்கின்றன. அத்தகைய திருமணங்களிலும்கூட, வாழ்க்கையின் அடுத்த கட்டமாக அவர்கள் பெற்றோர் ஆகின்ற தருணத்தில், இருவருடைய ஜாதிகளில் ஏதோ "ஒரு ஜாதி' மறையாமல் ஆதிக்கம் செலுத்துகிறது. குழந்தைகளுக்கும் அடையாளமாகிறது; அங்கும் ஜாதி ஒழிவதில்லை.
 ஜாதிமறுப்பு திருமணம் செய்வோர் தங்கள் ஜாதி அடையாளங்களை இழக்கவும், தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போது, ஜாதி என்ற இடத்தைப் பூர்த்தி செய்யும்போது - ஜாதி அற்றவன் என்று எழுதும் துணிவு கொள்ளாமல் இருப்பது ஏன்? ஜாதி அற்றவர்கள் சமூகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகாமல் போனது ஏன்?
 மகாத்மா காந்தி சொன்னார் என்பதற்காக பல கோடி இளைஞர்கள் இந்த தேசம் முழுவதிலும் தங்கள் படிப்பை, பட்டங்களை உதறிவிட்டு வந்தனர். அதேபோன்று, ஜாதிகளை உதறிவிட்டு வாருங்கள் என்று சொல்லும் தலைவர்கள் இன்று இல்லை. ஜாதிமறுப்பு திருமணம் செய்த பின்னர், ஜாதியை ஏன் தக்க வைக்கிறீர்கள்? என்று புத்தி சொல்லும் அரசியல் தலைவர்கள், அரசியல் ஆளுமைகள் இன்று இல்லை.
 கல்விச் சான்றுகள் உள்பட அனைத்திலும் ஜாதியைத் துறந்துவிடுவதால் ஒருவர் இழக்கப்போவது இடஒதுக்கீட்டுச் சலுகைகள் மட்டுமே. அத்தகைய செய்கையினால் காலப்போக்கில் ஜாதி அற்றவர்களின் எண்ணிக்கை பெருகும். இடஒதுக்கீடு என்பது கௌரவக் குறைச்சலாக மாறும். அன்னதான வரிசையில் நிற்பதற்குக் கூச்சப்படுவதைப் போன்ற மனநிலை உருவாகும். ஆனால், அது அரசியலுக்குப் பயன்படாது. தேர்தல் வெற்றிக்கு அந்தத் தொகுதியின் ஜாதி எண்ணிக்கை அவசியம்.
 "ஜாதிகளற்ற சமுதாயம் படைப்போம்', "ஜாதி வன்கொடுமை ஒழிய வேண்டும்,' "கெளரவக் கொலைகள் நடைபெறக் கூடாது' என்றால், கலப்புத் திருமணங்கள் அனைத்தும் ஜாதிமறுப்புத் திருமணங்களாக மாற வேண்டும். அந்தக் குடும்பங்கள் மீண்டும் ஜாதிக்குள் புகாமல், ஜாதியற்ற பரம்பரைகளாகவும் கிளைத்தால் மட்டுமே ஜாதிகளற்ற சமுதாயம் உருவாகும்.
 ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்னாலும் ஜாதிகள் இருந்தன. அவர்களுக்குள் நெருக்கமான நட்புறவும், ஒருவரை சார்ந்து மற்றவர் வாழும் சூழலும் இருந்தது. ஆனால், ஜாதீயம் இருக்கவில்லை. ஜாதிச் சங்கங்களும், கட்சிகளும் இப்போதுபோல அரசியல் நடத்தவில்லை. சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது...?
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com