பாராஒலிம்பிக்கில் மாற்றுத்திறனாளிகள் இந்தியாவுக்கு விருதுகள் பெற்றுத் தந்தபோது ஏற்பட்ட உற்சாகம், விழிப்புணர்வு, ஆங்காங்கே நடைபெறும் பாராட்டுதல்கள் என அவர்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு ஊக்கங்களுடன், அவர்களது கல்வி குறித்தும் அதிக அக்கறை கொண்டாக வேண்டும்.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் 5 முதல் 19 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை 65.7 லட்சம் பேர். இவர்களில் 40.2 லட்சம் பேர் மட்டுமே, அதாவது, 61 விழுக்காடு மாற்றுத்திறன் சிறார்கள், சிறப்புப் பள்ளிகளில் படிக்கின்றனர். இதில் சிறுமிகளைவிட சிறுவர்களே அதிகம். 22.8 லட்சம் மாற்றுத்திறன் சிறார்கள் பள்ளி செல்கிறார்கள்.
இவர்களிலும்கூட, நகரங்களில் உள்ள மாற்றுத்திறன் சிறார்களுக்கு படிக்கும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன. கிராமப்புறத்தில் இந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை. நகர்ப்புறங்களில் 19 லட்சம் மாற்றுத்திறன் சிறார்கள் இருந்தால், இவர்களில் 12 லட்சம் பேருக்கு சிறப்பு பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. கிராமப்புறங்களில் 46 லட்சம் மாற்றுத்திறன் சிறார்கள் இருக்கின்றனர். இவர்களில் 19 லட்சம் பேர் மட்டுமே கல்வி வாய்ப்பைப் பெற முடிகிறது.
இன்னும் நுட்பமாகப் பார்த்தால், இந்த மாற்றுத்திறன் சிறார்களிலும் கல்வி வாய்ப்பு அதிகம் பெறும் வாய்ப்பு உள்ளவர்கள் பார்வைக் குறைபாடு உள்ளவர்களும் அதற்கு அடுத்த நிலையில் கேட்புத்திறன் குறைந்தவர்களும்தான் இவர்கள் தங்களுக்கான சிறப்புப் பள்ளிகளில் படிக்கவும், அதற்கான வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் முடிகிறது. உடல் ஊனம், ஆட்டிசம், மனவளர்ச்சிக் குறைவு போன்ற குறைபாடுகள் உள்ள சிறார்களுக்கான சிறப்புப் பள்ளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
பார்வைக் குறைபாடு, கேட்புத்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு உள்ள சிறார்களுக்கான சிறப்புப் பள்ளிகள் பெருநகரங்களில் உள்ளன. இங்கு மாணவர் தங்கும் விடுதி வசதிகளும் இருக்கின்றன. இருப்பினும் இவற்றின் மாணவர் சேர்க்கை ஓர் அளவுக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. மாநில அளவில் இதன் எண்ணிக்கையும் குறைவு.
பார்வைக் கோளாறு உள்ள மாணவர்களை, அருகமை பள்ளிகளில் மற்ற மாணவர்களுடன் அமர்ந்து படிக்க அரசு அனுமதிக்கிறது. அவர்கள் பாடங்களை உள்வாங்கிக்கொண்டு, தேர்வுகளை மற்றவர் உதவியுடன் எழுத முடியும். ஆனாலும் இவர்களைச் சேர்த்துக்கொள்ள தனியார் பள்ளிகள் விரும்புவதில்லை. காரணம், இவர்களுக்கென தனியாக கவனம் செலுத்த வேண்டும். இவர்களுக்காக வகுப்புகளை தரைத்தளத்துக்கு மாற்றுவது, கழிப்பறை வசதிகளை செய்து தருவது போன்றவற்றை அவர்கள் ஏற்கத் தயங்குகின்றனர்.
உடல் ஊனமுற்ற சிறார்கள், வழக்கமான பள்ளிகளில் படிக்க இயலும் என்றாலும், அதற்கு போக்குவரத்து மிகப்பெரும் தடையாக இருக்கிறது. இவர்கள் பேருந்துகளில் செல்ல இயலாது. ஆட்டோ போன்ற தனிவாகனம் அமைக்கும் வசதி இருக்கும் பெற்றோர் மட்டுமே தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கின்றனர். பல பெற்றோரிடம் இதற்கான நிதிவசதி இருப்பதில்லை. குறிப்பாக கிராமத்தில் இருக்கும் மாற்றுத்திறன் சிறுவர்கள் கல்வியை மறந்துவிட வேண்டியதுதான். அதிலும் சிறுமிகள் என்றால், கல்வி கற்கும் வாய்ப்பு மிகமிக அரிதாகிவிடுகிறது.
ஆட்டிசம், மனவளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகள் மிகமிகக் குறைவு. மற்ற மாற்றுத்திறனாளிகளைவிட இந்தக் குழந்தைகளை கவனித்துக் கொள்ள சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அவசியம் தேவை. மேலும் இத்தகைய பள்ளிகளை நடத்துவோர் நிர்ணயிக்கும் கட்டணங்களும் பெற்றோருக்கு அதிக செலவை ஏற்படுத்துபவையாக உள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த பள்ளியை, குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் உருவாக்குதல் நடைமுறைச் சாத்தியமா என்பது குறித்து யோசித்தாக வேண்டும். குறைந்தபட்சம் எத்தகைய குறைபாடு உள்ள சிறார்களை ஓர் இடத்தில் வைத்து கல்வி கற்கவும், வேறு செயல்முறை, விளையாட்டு ஆகியவற்றில் பழக்கவும் இயலும் என்பதையாவது திட்டமிட வேண்டும்.
மாற்றுத்திறன் சிறார்கள் அதிக எண்ணிக்கையில் கல்வி பயிலும் முதல் மாநிலமாக கேரளம் திகழ்கிறது. இரண்டாவது இடம் தமிழகத்துக்கு. கேரளத்தில் உள்ள 1,04,418 மாற்றுத்திறன் சிறார்களில் 76,394 பேர் மட்டுமே கல்வி பெறுகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 2.39 லட்சம் பேரில், 1.5 லட்சம் பேர் மட்டுமே கல்வி பெறுகின்றனர். இதற்கு மிக முக்கியமான காரணம், இந்த மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளிகள் பரவலாக இல்லை என்பதும், குறிப்பாக கிராமப்புறத்தில் இருப்போருக்கு, போக்குவரத்து ஒரு பிரச்னையாக இருப்பதும்தான்.
மாற்றுத்திறன் சிறுவர், சிறுமியர் அனைவரையும் எவ்வாறு சிறப்புப் பள்ளிக்கு கொண்டு வருவது என்பது குறித்து நாம் தீவிரமாக சிந்தித்தாக வேண்டும். பெருநிறுவனங்கள் தங்களது சமுதாயப் பங்களிப்பு நிதியில் இத்தகைய ஒருங்கிணைந்த சிறப்பு பள்ளிகளை உருவாக்கி, நிர்வகித்தல் என்பது நடக்கக்கூடியதே. அரசு நிறுவனங்களைவிடத் தரமான கற்றல் கருவிகள் மற்றும் ஊனத்துக்கு மாற்றுக்கருவிகள் பெறுவதில் இவர்கள் உலகத் தரத்தில் சிந்திக்கவும் செயல்படவும் தடைகள் இருக்காது.
அதே நேரத்தில், இந்தப் பிரச்னையை வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களின் பொறுப்பில் விட்டுவிட்டு அரசு வாளாவிருந்து விடவும் முடியாது. அரசுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் அத்தனை மாற்றுத்திறனாளிச் சிறார்களும் சிறப்புப் பள்ளிகளில் பயில்வதை உறுதிப்படுத்தும் கடமை உண்டு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.