வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

மூச்சு திணறுகிறது!

ஆண்டுதோறும் உலகில் 30 லட்சம் பேர் காற்று மாசால் ஏற்படும்

News image
Updated On :7 நவம்பர் 2016, 8:45 pm

ஆசிரியர்

ஆண்டுதோறும் உலகில் 30 லட்சம் பேர் காற்று மாசால் ஏற்படும் பாதிப்பால் மரணமடைகிறார்கள். தென் கிழக்கு ஆசியாவில்தான் இதில் மூன்றில் இரண்டு பங்கு மரணங்கள் நிகழ்கின்றன. இந்தியாவில் மட்டும் 6,20,000 பேர் காற்று மாசு ஏற்படுத்தும் பாதிப்பால் மரணிக்கிறார்கள். இந்தியாவைப் பொருத்தவரை, காற்று மாசு என்பது மரணத்திற்கான ஐந்தாவது முக்கியக் காரணமாக இருந்து வருகிறது.
அளவுக்கதிகமான விஷ மாசு காற்றில் கலந்து விட்டிருப்பதால் தில்லியையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏறத்தாழ 17,000 பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக, தில்லியும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் காற்று மாசு படிந்த பனிமூட்டத்தால் சூழப்பட்டுக் கிடக்கிறது. பலரும் வீட்டின் ஜன்னல்களையும் கதவுகளையும் மூடிவிட்டு உள்ளேயே இருக்கிறார்கள்.
பல வட மாநில நகரங்கள் விஷ மாசு கலந்த காற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தில்லி மட்டுமல்லாமல், பாட்னா, கான்பூர், லூதியானா, லக்னெள, அலகாபாத் நகரங்கள் காற்றில் அளவுக்கு அதிகமான மாசு காணப்படுவதால், மரண மண்டலமாகக் காட்சி அளிக்கின்றன.
40 சிகரெட்டுகள் புகைப்பதற்கு நிகரான பாதிப்பை இந்தக் காற்றை சுவாசிப்பதால் மக்கள் எதிர்கொள்கிறார்கள். தலைவலி, தொண்டை, நாசி, கண்களில் எரிச்சல், மூச்சுத் திணறல், இருமல், நெஞ்சுவலி, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற பலவித பாதிப்புகளுக்கும் மக்கள் உள்ளாகிறார்கள்.
வடகிழக்கு பருவமழை மற்றும் பனிமூட்டம் காரணமாக இந்த காற்று மாசு வெளியேறாமல் அங்கேயே நின்றதால், 17 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மாசு அடர்ந்து நிற்கிறது. ஹரியாணா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் அறுவடை முடிந்த நிலங்களில் அடிவேர்களைக் கொளுத்திவிடுவது மற்றொரு காரணம்.
ஒருபுறம் பல மாநிலங்களில் வைக்கோலின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் சில மாநிலங்களில் 80% வைக்கோல் எரியூட்டப்பட்டு வீணாகிறது. இந்த வைக்கோலை பயன்படுத்தி "பயோ காஸ்' உருவாக்கினால், எரிசக்தியாக மாற்ற முடியும். அதற்கான தொழில்நுட்பம் இருக்கிறது. ஆனால், அரசு அதற்கு ஊக்கமளிக்காமல் இருப்பதால், வைக்கோல் எரியூட்டப்பட்டு வீணாகிறது.
பதர்பூரில் உள்ள பழைமையான அனல்மின் நிலையத்தை ஏன் மூடக்கூடாது என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேள்வி எழுப்பியிருந்தது. தில்லியின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்தாக வேண்டும். மின் தேவையை சமாளிப்பது அரிது என்ற எண்ணமே இந்த அனல்மின் நிலையத்தை இன்னும் மூடாமல் செயல்பாட்டில் வைத்திருக்கக் காரணம். ஆனால் இப்போது நிலைமை கட்டுக்கடங்காமல் போன பிறகு, 10 நாளைக்கு மட்டும் மூடி வைக்க உத்தரவிடுகிறது தில்லி அரசு.
பதர்பூர் அனல்மின் நிலையம் 40 ஆண்டு பழைமையான ஒன்று. நிலக்கரி சாம்பல் மற்றும் சல்பர் டை ஆக்ஸைடு இந்த அனல்மின் நிலையத்திலிருந்து மிக அதிகமாக வெளிப்படுகிறது. தில்லியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் மையம் நடத்திய ஆய்வின்படி, சீனாவில் உள்ள பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல்மின் நிலையங்களைக் காட்டிலும் 14% அதிகமான மாசினை இந்த மின்நிலையம் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. தில்லியைச் சுற்றிலும் உள்ள மாநிலங்களில் பல்வேறு அனல்மின் நிலையங்கள் அதே நிலையில் உள்ளன.
அரவிந்த் கேஜரிவால் முதல்வராகப் பொறுப்பேற்றதும், ஐந்து அனல்மின் நிலையங்களை புனரமைக்க முடிவு செய்தார். ஆனால் மின்கட்டணக் குறைப்பு விவகாரத்தாலும், மின்விநியோக நிறு
வனங்கள் மீதான வழக்குகள், புகார்கள் போன்றவற்றாலும் அது திசைமாறியது. இப்போது மூச்சுத் திணறுகிறது.
நாசா தனது செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில், இந்திய அனல்மின் நிலையங்கள் வெளியேற்றும் சல்பர் டை ஆக்ஸைடு அளவு, 2005-ஆம் ஆண்டு இருந்த அளவைக் காட்டிலும் தற்போது 60% அதிகரித்துள்ளது. இதனால் அந்த அனல்மின் நிலையங்களின் அருகில் வசிக்கும் மக்கள் உடல்நலன் பாதிக்கப்படுகிறது என்று கூறியுள்ளது. நாசாவின் இந்த வரைபடத்தில் தில்லி, சென்னை உள்பட பல பெருநகரங்கள் இடம்பெற்றுள்ளன.
தலைநகர் தில்லியில் ஒரு நாளைக்கு 10,000 டன் குப்பை சேர்கிறது. இந்தக் குப்பை அனைத்தும் திடக்கழிவு மேலாண்மையில் உரமாக்கப்படுவதில்லை. பாதி குப்பை எரிக்கப்படுகிறது. தில்லியில் வாகன எண்ணிக்கை 74 லட்சம். நாள்தோறும் 1,200 வாகனங்கள் அதிகரிக்கவும் செய்கின்றன. அதிலிருந்து வெளியேறும் புகையும் சேர்த்து கொள்கிறது.
தில்லியின் காற்று மாசில் 54% சாலைத் துகள்கள்; 10% கட்டுமானப் பணியின் கான்கிரீட் துகள்கள், தொழில்துறை மூலம் 10%, வாகனப் புகை மாசு 9%, வீட்டுக் குப்பைகளால் ஏற்பட்ட மாசு 5% என கணக்கிடுகிறார்கள். சாலைகளில் நீர் தெளிப்பதன் மூலம் பாதியளவு காற்றைத் தூய்மை செய்துவிடலாம் என்று கருதுகிறார்கள். இவை எதுவுமே ஒரே நாளில் செய்யக்கூடியவை அல்ல.
அரசும் சரி, மக்களும் சரி, காற்று மாசுவால் ஏற்படும் பாதிப்பின் தீவிரத்தை இப்போதும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. வட மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு இந்தியா முழுமைக்கும் விரைவிலேயே ஏற்படக்கூடும். முதல் கட்டமாக நாம் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, பொதுப் போக்குவரத்தை பலப்படுத்தியாக வேண்டும். அடுத்ததாக, அனல்மின் நிலையங்களுக்கு மூடுவிழா நடத்த வேண்டும். இதைச் செய்யாமல், காற்று மாசு குறித்துக் கவலைப்படுவதும் விவாதிப்பதும் அர்த்தமற்றவை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.