

அமெரிக்காவின் 45-ஆவது அதிபராக மனைவணிகத் தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதைக் கேட்டு மகிழ்ச்சியில் திளைத்தவர்களைவிட அதிர்ச்சியில் உறைந்தவர்கள்தான் அதிகம் இருப்பார்கள். 1946-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அமெரிக்காவின் மிகப்பெரிய கோடீஸ்வர குடும்பம் ஒன்றின் வாரிசாகப் பிறந்த டொனால்ட் டிரம்ப் தனது 70-ஆவது வயதில் வெள்ளை மாளிகையில் நுழைய இருக்கிறார்.
வெள்ளை மாளிகையை அலங்கரித்தவர்களில் வயதில் மூத்தவர் இவராகத்தான் இருக்கும். இதுதான் டொனால்ட் டிரம்ப் வகிக்க இருக்கும் முதலாவது அரசியல் பதவி. அதுமட்டுமல்ல, இவரளவுக்கு விமர்சனங்களுக்கு உள்ளான, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஒருவர் இதுவரை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதுமில்லை.
இதுவரை, அரசியலிலோ, பொது வாழ்க்கையிலோ இல்லாத ஒருவர், தனது பணத்தையும், வியாபார உத்திகளையும் பயன்படுத்தி அமெரிக்க அதிபராக முடியும் என்பதே யாரும் எதிர்பார்க்காத திருப்பம். டொனால்ட் டிரம்ப் விளம்பரப் பிரியர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தி தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர். டொனால்ட் டிரம்பின் பின்னணி விசித்திரமானது மட்டுமல்ல, விவகாரமானதும்கூட.
இவரது வியாபார நடவடிக்கைகள் எதுவுமே முறையானது அல்ல என்பது, அதிபர் தேர்தல் போட்டியின்போது வெளியிடப்பட்ட தகவல்கள் மூலம் வெளிவந்தன. கடந்த 2000-ஆவது ஆண்டு முதல் இதுவரை 72 முறை அமெரிக்க நீதிமன்றங்களில் இவருக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. பல வழக்குகளில் இவர் சமாதானம் பேசி, தீர்ப்புகள் பெறாமலேயே வழக்குகளை முடித்துக் கொள்வதுதான் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இந்த மாதக் கடைசியில், இவரது நிறுவனம் தொடர்பான வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் இவர் ஆஜராக இருக்கிறார். அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகும் அதிசயத்துக்கும் டொனால்ட் டிரம்ப் முன்னுதாரணமாகிறார்.
மூன்று திருமணங்கள். ஐந்து குழந்தைகள். தனது 59-ஆவது வயதில் 35 வயதான யுகோஸ்லாவியப் பெண்மணியான மெலானியாவை இவர் 2005-இல் மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டபோது, அந்தத் திருமண வரவேற்புக்கு பில் கிளிண்டனும், ஹிலாரி கிளிண்டனும் வந்திருந்தனர். மோட்டார் வாகனத் தரகரான மெலானியாவின் தந்தை, ஸ்லோவேனியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர உறுப்பினர். 1996-இல் நியூயார்க்கிற்குக் குடியேறிய மெலானியா, விளம்பர மாடலாக இருந்தவர். 2000-ஆவது ஆண்டில் இவர் பல பத்திரிகைகளுக்கு நிர்வாண மாடலாக அட்டைப் படத்துக்கு போஸ் கொடுத்திருக்கிறார்.
வெளிநாட்டில் பிறந்த ஒருவர், கம்யூனிச பின்னணியுள்ள பெண்மணி, நிர்வாணமாகப் பத்திரிகைகளில் அட்டைப்படங்களை அலங்கரித்தவர் இனிமேல் வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக வலம் வரப்போகிறார். இதிலும் டொனால்ட் டிரம்ப் புதுமையைச் செய்திருக்கிறார்.
டொனால்ட் டிரம்பின் வெற்றிக்கு இரண்டு முக்கிய காரணங்கள். முதலாவது, நடுத்தர, அடித்தட்டு அமெரிக்கர்கள் மத்தியில் அதிகாரவர்க்கத்திற்கும் அரசுக்கும் எதிராகப் பரவலாகக் காணப்படும் வெறுப்பும், விரக்தி மனநிலையும். அவர்கள் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் என்பதைவிட, அமெரிக்க நிர்வாகத்திற்கு எதிராகத் தங்களது வெறுப்பையும் கோபத்தையும் காட்டியிருக்கிறார்கள் என்பதுதான் நிஜம்.
அடுத்தாற்போல, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் மீதான நம்பிக்கையின்மை மக்களை டொனால்ட் டிரம்புக்கு வாக்களிக்கத் தூண்டியது. பொறுப்பான பதவியில் இருந்த ஹிலாரி, தனது அறக்கட்டளைக்கு நன்கொடை பெற்றது, தனக்கு ரகசியமாக மின்னஞ்சல் முகவரி வைத்துக்கொண்டு தகவல் பரிமாற்றங்கள் நடத்தியது, இளைய தலைமுறை வாக்காளர்களைக் கவர முடியாமல் போனது ஆகியவை டொனால்ட் டிரம்புக்கு சாதகமாக மாறிவிட்டன.
மொத்த வாக்குகளில் ஹிலாரியைவிட இரண்டு லட்சம் வாக்குகள் டொனால்ட் டிரம்ப் குறைவாகப் பெற்றிருந்தாலும், அமெரிக்க தேர்தல் முறையின்படி மாநிலங்களின் வாக்குகளில் அதிகமாகப் பெற்றிருந்ததால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எதிர்பார்த்ததற்கும் அதிகமாகப் பெண்கள் டொனால்ட் டிரம்புக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, அடித்தட்டு மக்களும், உழைக்கும் வர்க்கத்தினரும் அவருக்கு ஆதரவளித்திருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான டொனால்ட் டிரம்புக்கு அமெரிக்காவின் உழைக்கும் வர்க்கம் வாக்களித்து அதிபராக்கி இருக்கும் அதிசயம் அரங்கேறி இருக்கிறது.
இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுக் கட்சி அமெரிக்காவின் இரு அவைகளிலும் பெரும்பான்மை பலத்துடன் காட்சி அளிப்பது டிரம்பின் மிகப்பெரிய பலம். அரசியல்வாதியல்லாத டொனால்ட் டிரம்ப்பால், தனது குடியரசுக் கட்சியையே அரவணைத்துச் செல்ல முடியுமா என்பது சந்தேகம்.
அமெரிக்க சமூகம் ஓர் ஆணாதிக்க சமூகம் என்பது தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க மக்கள் முதல் முறையாக எந்தவித நிர்வாக அனுபவமோ, அரசியல் பின்னணியோ இல்லாத வியாபாரியிடம் நம்பிக்கை வைத்துத் தங்கள் எதிர்காலத்தை ஒப்படைத்திருக்கிறார்கள். நாம் "சத்யமேவ ஜயதே!'
(தர்மம் வெல்லும்!) என்று சொல்வதுபோல, அமெரிக்காவின் அடையாள வாசகம் "இன் காட் வி டிரஸ்ட்' (கடவுளை நம்புகிறோம்!). கடவுள் காப்பாற்றுவாராக!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தானில் ஊரடங்கு; இந்தியாவில் உண்டா? நிர்மலா சீதாராமன் பதில்!

காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டவர்கள்தான் தவெகவில் இணைந்துள்ளனர்! - செல்வப்பெருந்தகை

ஆஸ்திரியாவில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!

ஏற்றமான வாழ்வு அமைய...
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 29 முதல் Apr. 4 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

