பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

தெரிந்தும் ஏன் தயக்கம்?

ஒரு முக்கியமான அரசுமுறைப் பயணம் போதிய கவனத்தை

News image
Updated On :11 நவம்பர் 2016, 8:03 pm

ஆசிரியர்

ஒரு முக்கியமான அரசுமுறைப் பயணம் போதிய கவனத்தை ஈர்க்காமல் போய்விட்டிருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்ற பிரிட்டிஷ் பிரதமர் தெரஸா மேயின் இந்திய விஜயம் எதிர்பார்த்த வெற்றியைத் தராவிட்டாலும், முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் ஐயமில்லை. ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து விலகுவது என்று பிரிட்டன் முடிவெடுத்திருக்கும் நிலையில், உலக நாடுகளுடன் வியாபார நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் பிரிட்டனுக்கு ஏற்பட்டிருப்பதால், பிரதமர் தெரஸா மே மேற்கொண்ட அரசுமுறைப் பயணம் இது.
பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு தெரஸா மே விஜயம் செய்யும் முதல் நாடு இந்தியாதான். அவர் தனது முதலாவது விஜயத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததற்கு சில காரணங்கள் உண்டு. இரண்டு நாடுகளுக்கு இடையே வரலாற்று ரீதியிலான தொடர்பு உண்டு என்பதும், காமன்வெல்த் கூட்டமைப்பில் இந்தியா ஒரு முக்கிய அங்கம் என்பதும் முதலாவது காரணம். பிரிட்டனும் இந்தியாவும் ஒரே மாதிரியான ஜனநாயகப் பண்புகளைக் கொண்டிருப்பதும், பல சர்வதேசப் பிரச்னைகளில் ஒத்த கருத்தைக் கொண்டிருப்பதும்கூட இதற்குக் காரணமாக இருக்கக்கூடும். அதுமட்டுமல்லாமல், இந்தியர்கள் கணிசமாக பிரிட்டனில் குடியுரிமை பெற்று வாழ்கிறார்கள்.
இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையே மிக நெருக்கமான ராஜீய உறவுகள் இருந்தாலும்கூட, வர்த்தக ரீதியாகப் பெரிய அளவில் வரவு - செலவு இல்லை. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகச் செலாவணி வெறும் 14 பில்லியன் டாலர் (சுமார் 94 ஆயிரத்து 420 கோடி ரூபாய்) மட்டுமே. அதே நேரத்தில், டாடா உள்ளிட்ட பல இந்தியப் பன்னாட்டு நிறுவனங்கள், இங்கிலாந்தில் முதலீடு செய்திருப்பதுடன், பல பெரிய பிரிட்டிஷ் நிறுவனங்களை வாங்கியும் இருக்கின்றன.
பிரிட்டிஷ் பிரதமரின் விஜயத்தின்போது, இந்தியாவிலான பிரிட்டனின் முதலீட்டைக் குறைந்தது ஒரு பில்லியன் பவுண்ட் (சுமார் 8,510 கோடி ரூபாய்) அளவிற்காவது அதிகரிக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தைகளில் ஆர்வம் காட்டப்பட்டது. பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்பம் ஆகியவற்றில் பிரிட்டன் இந்தியாவில் முதலீடு செய்ய வழிகோலப்படும் என்று இந்தியா உறுதி அளித்திருக்கிறது.
முதலீடும், தொழில்நுட்பமும், சுற்றுலாவும் அதிகரிப்பது, அடிப்படையாக இரு நாடுகளுக்கும் இடையே பயணிப்பதற்கு எந்தவிதச் சிக்கலோ தடையோ இல்லாமல் இருந்தால்தான் சாத்தியப்படும். ஆனால், நுழைவு அனுமதி (விசா) விஷயத்தில் பிரிட்டன் கடுமையாக இருக்கும் நிலையில், நெருக்கமான உறவும், வர்த்தக அதிகரிப்பும் ஏற்படுவது எப்படி சாத்தியம் என்பதுதான் கேள்வி.
பிரதமர் தெரஸா மேயின் அரசு முறைப் பயணத்துக்கு சில நாள்கள் முன்புதான், பிரிட்டன் தனது நுழைவு அனுமதிக் கொள்கையில் மாற்றங்களை அறிவித்தது. இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையினர் பிரிட்டனில் சென்று பணியாற்றுவதற்கு மிகப்பெரிய தடையாக பல நிபந்தனைகளை புதிய நுழைவு அனுமதிக் கொள்கை அறிவித்திருக்கிறது.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சிக்கு வந்தது முதல், இந்தியர்கள் இங்கிலாந்துக்குக் கல்வி பயிலவும், வேலை பார்க்கவும் செல்வது பல பிரச்னைகளை எதிர்கொள்வதாக இருந்து வருகிறது. தெரஸா மே இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில்தான் மிகவும் கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, இந்தியர்கள் பிரிட்டனுக்கு செல்வது கட்டுப்படுத்தப்பட்டது.
இங்கிலாந்தில் போய் படித்துப் பட்டம் பெற்ற பல இந்திய மாணவர்கள் அங்கேயே வேலை தேடிக் கொள்ளவோ, வேலை பார்க்கவோ முடியாதபடி நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதனால் பிரிட்டனில் போய் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, பாதிக்குப் பாதியாகக் குறைந்து விட்டிருக்கிறது. விடுதிகளில் சமையல்காரர்களாகப் பணிபுரியச் செல்பவர்கள்கூட, நுழைவு அனுமதிப் பிரச்னையால் செல்ல முடியாத நிலைமை. சுற்றுலாப் பயணிகளும் சரி, பிரான்ஸ் நாட்டுக்குப் போய்விட்டு, அங்கிருந்து இங்கிலாந்துக்குப் போகாமலே திரும்பத் தொடங்கி இருக்கிறார்கள்.
ஐரோப்பியக் கூட்டமைப்புடன் இந்தியா தடையில்லா வியாபார ஒப்பந்தம் செய்து கொள்வது கடந்த ஒன்பது ஆண்டுகளாகக் கருத்தொற்றுமை ஏற்படாமல் இழுத்தடித்துக் கொண்டிருப்பதற்கும் காரணம், வேலை செய்வதற்கான நுழைவு அனுமதி பிரச்னைதான். தெரஸா மே அரசு தனது சேவைத் துறைக்கு இந்தியாவின் ஆதரவைக் கோரும்போது, அதற்கேற்ப இந்திய மாணவர்களுக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தனது கதவுகளைத் திறந்து விடுவதுதானே நியாயம்?
பிரதமர் தெரஸா மேயின் அரசு முறைப் பயணத்தில் இருதரப்பும் ஒப்புக் கொண்டிருக்கும் விஷயங்கள், பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாடும், பரஸ்பரம் குற்றவாளிகளைத் திருப்பி அனுப்புவதில் கருத்தொற்றுமையும்தான். விஜய் மல்லையா, லலித் மோடி உள்ளிட்ட 57 பேரின் பட்டியலை இந்தியாவும், 17 பேரின் பட்டியலை பிரிட்டனும் அளித்திருக்கின்றன. அதேபோல, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கும் அணுசக்தி விநியோக கூட்டமைப்பு நாடுகளில் இந்தியா இடம் பெறுவதற்கும் பிரிட்டன் தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது.
நுழைவு அனுமதி விஷயத்தில் தளர்வு ஏற்படுத்தி, இந்தியர்கள் பிரிட்டனில் படிப்பதையும், வேலை பார்ப்பதையும் சுலபமாக்கினால் மட்டும்தான், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேம்படும் என்பது பிரதமர் தெரஸா மேக்குத் தெரியும். தெரிந்தும் ஏன் தயங்குகிறார் என்பதுதான் தெரியவில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.