குழப்பத்தில் கிரிக்கெட் வாரியம்!

ஒருபுறம், இந்தியா சர்வதேச கிரிக்கெட் தர மதிப்பீட்டில் முதலிடத்துக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
Updated on
2 min read

ஒருபுறம், இந்தியா சர்வதேச கிரிக்கெட் தர மதிப்பீட்டில் முதலிடத்துக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இன்னொருபுறம், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் உச்சநீதிமன்றமும் கெளரவப் பிரச்னையில் மோதல் நடத்திக் கொண்டிருக்கின்றன. உச்சநீதிமன்றத்தின் பரிந்துரைகளையும், தீர்ப்புகளையும் ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், அதே நேரத்தில் மீறவும் முடியாமல்
குழப்பத்தில் சிக்கியிருக்கிறது இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.
இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்தவும், அதை சில விதிமுறைகளுக்கு உட்படுத்தவும் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் உச்சநீதிமன்றம் குழுவை அமைத்தது முதல் இந்தப் பிரச்னை தொடர்கிறது. அதுவரை, எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (இ.கி.க.வா.) தான் வைத்ததுதான் சட்டம் என்று செயல்பட்டு வந்ததற்குக் கடிவாளம் போட்டது லோதா குழு. அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் இ.கி.க.வாரியத்தில் பல மாறுதல்கள் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது லோதா குழு.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் இ.கி.க.வா. செயல்
பாடுகளைக் கொண்டு வருவது; கிரிக்கெட் சூதாட்டத்தை சட்டப்படி அனுமதிப்பது; வாரிய ஊழியர்களும், விளையாட்டு வீரர்களும் தங்கள் சொத்துகளை வெளிப்படையாக அறிவிப்பதன் மூலம் அவர்கள், சூதாட்டத்தில் ஈடுபடுவதைத் தடுப்பது; மாநில கிரிக்கெட் வாரியத்துக்கு, பெரிது சிறிது என்கிற வேறுபாடு இல்லாமல் தலா ஒரு வாக்கு மட்டுமே என்று நிர்ணயிப்பது; வாரிய நிர்வாகிகள் இரண்டு முறைக்கு மேல் பதவியில் நீடிக்காமல் இருப்பது. அப்
படியே மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சில ஆண்டுகள் இடைவெளி இருப்பது; வாரிய நிர்வாகிகள் அமைச்சர்களாகவோ, அரசு ஊழியராகவோ இல்லாமல் இருப்பது - இவைதான் லோதா குழுவின் பரிந்துரைகளில் முக்கியமானவை.
லோதா குழுவின் பரிந்துரைகளில் சில, நடைமுறைக்கு ஒவ்வாதவையாக இருக்கின்றன என்கிற வாரியத்தின் குற்றச்சாட்டில் நியாயம் இருக்கிறது. தமிழகம், மகாராஷ்டிரம், தில்லி போன்ற மாநில வாரியங்கள் திறம்பட செயல்படுகின்றன. பல மாநிலங்களில் கிரிக்கெட் விளையாட்டு மிகவும் பிரபலமாகவும் இருக்கிறது. அதேநேரத்தில், கிரிக்கெட் விளையாட்டே அதிகமாக விளையாடப்படாத மாநிலங்களும் இருக்கின்றன. எல்லா மாநில கிரிக்கெட் வாரியத்துக்கும் சரிசமமாக ஒரு வாக்கு என்கிற லோதா குழுவின் பரிந்துரை நடைமுறைக்கு ஒவ்வாதது, தவறானது.
அதேபோல, இந்திய ரயில்வே, ராணுவம், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றிலிருந்து பல திறமையான கிரிக்கெட் வீரர்கள் உருவாகி விளையாட்டுக்கு வலு சேர்க்கிறார்கள். அதனால், இதுபோன்ற அமைப்புகள் இணை உறுப்பினர்களாகக் கருதப்பட்டு அவர்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற அமைப்பு
களுக்கு இ.கி.க.வா. நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதில் வாக்குரிமை தேவையில்லை என்கிறது லோதா குழு.
கடந்த செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி மும்பையில் கூடிய இ.கி.க.வா.த்தில் பொதுக் குழுவில் தேர்வுக் குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். சரத் பவார் சர்வதேச கிரிக்கெட் குழுவின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக மாற்று இயக்குநராக அறிவிக்கப்பட்டார். இவையெல்லாம், லோதா குழுவின் பரிந்துரைகளை மீறிய, தனது முந்தைய செயல்பாட்டை மாற்றிக் கொள்ளாத இ.கி.க.வா.வின் நடவடிக்கைகள் என்று உச்சநீதிமன்றம் கருது
கிறது. லோதா குழுவும் தனது 79 பக்க அறிக்கையில், இ.கி.க.வா. நிர்வாகிகள் பதவி விலகினால்தான் புதிய நடைமுறைகளை செயல்படுத்த முடியும் என்று தெரிவித்திருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் இ.கி.க.வாரியத்தின் செயல்பாடுகளை வன்மையாகக் கண்டித்ததுடன், லோதா குழுவின் பரிந்துரைகளின்படி சீர்திருத்தத்தை மேற்கொள்ளாத 12 மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு எந்தவித நிதியும் இ.கி.க.வாரியத்தால் தரப்படக்கூடாது என்று கட்டுப்பாட்டையும் விதித்திருக்கிறது. ஏற்கெனவே நிதியைப் பெற்றுக் கொண்டுவிட்ட 13 மாநில வாரியங்களும்,லோதா குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி அளித்த பிறகுதான் அந்த நிதியை பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இ.கி.க.வா. இப்போது ஒரு இக்கட்டான நிலையில் இருக்
கிறது. 13 டெஸ்ட் போட்டிகள் நடத்தியாக வேண்டும். ரஞ்சிக் கோப்பை போட்டிகளும் தொடர இருக்கின்றன. இந்த நேரத்தில், விளையாட்டுக்கு ஏற்பாடுகள் செய்வதை விட்டுவிட்டு, லோதா குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்த முடியாது என்கிற வாரியத்தின் வாதத்தில் உண்மை
இல்லாமல் இல்லை.
இ.கி.க.வாரியம் என்பது சர்வதேசக் கிரிக்கெட் வாரியத்தின்
கட்டுப்பாட்டில் இயங்குவது. அதன் செயல்பாடுகளில் உச்சநீதிமன்றம் எப்படி தலையிடலாம் என்று கேட்கலாம்.
அதற்காக, வாரியத்தின் செயல்பாடுகளின் வெளிப்படைத்
தன்மையை உறுதிப்படுத்தாமல் இருப்பது, கிரிக்கெட் ரசிகனைக் கேவலப்படுத்துவது என்பதை வாரியம் உணர வேண்டும்.
தமிழகத்தின் நதிநீர்ப் பிரச்னையைத் தவிர, ஏனைய எல்லா வழக்குகளிலும் உச்சநீதிமன்றம், தனது உத்தரவுக்குக் கீழ்ப்படியாதவர்களை தயவுதாட்சண்யம் இல்லாமல் வழிக்குக் கொண்டு வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கை. வழிக்கு வராவிட்டால் நாங்களே உத்தரவு பிறப்பிப்போம் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com