இந்தியாவுக்கும் ஏனைய தேசங்களுக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசமுண்டு. இதுவரை தனது எல்லையை விரிவுபடுத்துவதற்காக வேறு எந்தவொரு நாட்டின் மீதும் படையெடுக்காத நாடு என்கிற பெருமை நமக்கு மட்டுமே உண்டு. அதேபோல, அனைத்து இனத்தவரையும் மதத்தினரையும் வேறுபடுத்திப் பார்க்காத, "யாதும் ஊரே யாவரும் கேளிர்', "வசுதைவ குடும்பகம்' என்கிற கோட்பாடுகளை உணர்வில் உடையவர்கள் உலகிலேயே நாம் மட்டுமே.
கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமியர்கள், பார்ஸிகள் என்று வெளிநாட்டிலிருந்து வேற்று மதத்தவரும் இனத்தவரும் இந்தியாவுக்கு வந்தபோது, அவர்களையும் சகோதரர்களாக ஏற்றுக்கொண்ட பெருந்தன்மை நமக்கு மட்டுமே உண்டு. இந்தியாவுக்கு வந்த அந்நிய மதத்தினர், இங்கிருந்தவர்களை மதமாற்றம் செய்தார்களே தவிர, நாம் அடைக்கலம் தந்ததற்குப் பிரதிபலனாக யாரையும் நமது மதத்தைத் தழுவ வற்புறுத்தவில்லை.
பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தான் தன்னை ஓர் இஸ்லாமியக் குடியரசு என்று பகிரங்கமாகவே அறிவித்து அங்கிருந்த இந்துக்களை விரட்டி அடித்தது. ஆனால், நாம் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கவில்லை. பிரிவினையைத் தொடர்ந்து பாகிஸ்தான் உருவானபோது, இஸ்ரேல் உருவானபோது உலகம் முழுவதிலிருந்தும் யூதர்கள் அங்கே போய் குடியேறியதுபோல, இந்தியாவிலிருந்து பல முஸ்லிம்கள் தங்களுக்குத் தனியான தாயகம் கிடைத்திருப்பதாகக் கருதி, பாகிஸ்தான் பிரஜையானார்கள். இப்போது அவர்களுடைய நிலை என்ன என்பது குறித்து நமது ஊடகங்கள் உண்மையான தகவல்களைத் தெரிவிப்பதில்லை.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானைத் தஞ்சமடைந்த முஸ்லிம்கள் முஜாஹிர் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களை பஞ்சாபி மற்றும் சிந்தி மொழி பேசும் பாகிஸ்தானியர்கள் சரிசமமாக நடத்துவதோ, கருதுவதோ இல்லை. முஜாஹிர்கள் பாகிஸ்தானிய அரசில் பெரிய பதவிகளை வகிக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், இந்தியாவில் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமைத் தேர்தல் அதிகாரி, ராணுவத் தளபதி என்று அனைத்து உயர்பதவிகளிலும் எந்த மதத்தினர், எந்த இனத்தவர் என்று வேறுபாடில்லாமல் அனைவரும் இந்தியர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுதான் உண்மையான "இந்துத்வா' என்கிற "இந்தியத்துவம்' என்பது!
இத்தனை விவரங்களையும் அளிப்பதற்குக் காரணம் இருக்கிறது. உரி பயங்கரவாதத் தாக்குதலையும், பாகிஸ்தான் வசம் இருக்கும் நமது காஷ்மீர் எல்லையில் உள்ள பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலையும் தொடர்ந்து, தேவையற்ற சர்ச்சைகளும், விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவரும் அரசியல் ஆதாயம் தேட எத்தனிக்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்கட்டும். இந்தியத் திரைப்படங்களில் நடிக்க பாகிஸ்தானியக் கலைஞர்களுக்குத் தடை விதித்திருக்கிறதே இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், அது எப்படி சரி? நடிகர் சல்மான்கான் கேட்டிருப்பதுபோல, அந்தக் கலைஞர்கள் என்ன பயங்கரவாதிகளா, இல்லை பாகிஸ்தானிய ஒற்றர்களா? கலைக்கு மொழி, இனம், ஜாதி, மதம் என்கிற வேறுபாடுகள் இருந்ததுண்டா, இருக்கத்தான் முடியுமா?
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டிருக்கிறதா என்றால் இல்லை. பாகிஸ்தானிய ராணுவத்தின் மறைமுக ஆதரவுடன் இந்திய ராணுவ முகாம் தாக்கப்பட்டது. நாமும் சில பயங்கரவாத முகாம்களைத் தற்காப்புக்காகத் தாக்கி இருக்கிறோம், அவ்வளவுதான். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ராஜீய உறவுகள் துண்டிக்கப்படவில்லை. பிறகு எதற்காகப் பாகிஸ்தானியக் கலைஞர்களுக்குத் தடை விதிக்க வேண்டும்? இதிலென்ன தேசப்பற்று இருக்கிறது?
69 ஆண்டுகளுக்கு முன்புவரை, பாகிஸ்தானில் இருப்பவர்கள் இந்தியர்களாக இருந்தவர்கள். அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நமது சகோதரர்கள். கொள்கை ரீதியாக, அரசியல் ரீதியாக இரு அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவலாம். அதற்காக நாம் பாகிஸ்தானியர்களை வெறுக்க முடியாது. பாகிஸ்தானிய கலைஞர்களும், அறிவுஜீவிகளும் இந்தியாவை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறார்கள். நாம் நமது அடிப்படைப் பண்புகளை இழந்து அவர்கள் முன் தரம் தாழ்ந்துவிட முடியாது.
1962-இல் இந்திய - சீனப் போர் நடந்து முடிந்திருந்த நேரம். இந்தியா முழுவதும் சீனாவுக்கு எதிரான மனோநிலை காணப்பட்ட சூழல். ரவீந்திரநாத் தாகூர் நிறுவிய விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்த பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு "சீனப் படையெடுப்பு' குறித்து அங்கே உரையாற்றினார். அப்போது, பல்கலைக்கழகத்தில் "சீன பவனம்' துறைத் தலைவர் பேராசிரியர் தன் யூன் ஷான் தர்மசங்கடத்துடன் கூட்டத்தில் ஒருவராக அமர்ந்திருப்பதைப் பார்த்து விடுகிறார்.
அவரது பெயரைத் குறிப்பிட்டுத் தனது வணக்கத்தைக்கூறி, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள்ள நீண்ட கால வரலாற்றுத் தொடர்பையும், கலாசாரப் பிணைப்பையும் எடுத்துரைத்து, நடந்து முடிந்திருப்பது இரண்டு நாடுகளுக்கு இடையேயான போரே தவிர, இரண்டு தேசத்து மக்களுக்கு இடையேயான போர் அல்ல என்று கூறிய பண்டித நேருவின் பெருந்தன்மையை இந்த நேரத்தில் நினைவுகூரத் ன்றுகிறது.
தேசப்பற்று குறித்த தவறான புரிதல் நிலவுகிறது என்பதும், எல்லா நிகழ்வுகளையும், எல்லா பிரச்னைகளையும் நாம் அரசியலாகப் பார்க்கத் தொடங்கி இருக்கிறோம் என்பதும் மிகவும் தனையளிக்கிறது. நாம் யாருக்கும் எதிரியல்ல; யாரையும் வெறுப்பது நமது கலாசாரமும் அல்ல!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.