முடிவெடுத்ததில் மகிழ்ச்சி!

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழகத்தில்
Updated on
2 min read

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த ஓராண்டு கால அவகாசம் வேண்டும் என்று 2015, செப்டம்பர் இறுதியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். தற்போது ஓராண்டு நிறைவுற்ற நிலையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஏற்று, நவம்பர் 1 முதல் அமல்படுத்துவதென தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. மேலும் தாமதிக்காமல், ஓராண்டு கால அவகாசத்தின் நிறைவில் ஏற்றது பாராட்டத்தக்கது.
இந்தச் சட்டத்துக்கு தொடக்கத்தில் தமிழகம் எதிர்ப்பு தெரிவித்ததற்குக் காரணம், நகர்ப்புறங்களில் 50% குடும்பங்கள், கிராமங்
களில் 75% குடும்பங்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் பயனைப் பெற வேண்டும் என்று மத்திய அரசு கூறியதுதான்.
தமிழக முதல்வர் தனது அப்போதைய கடிதத்தில், "இந்தியாவிலேயே பொதுவிநியோகம் சிறப்பாக நடைபெறும் தமிழ்நாட்டில், நியாயவிலைக் கடைகளை கணினிமயமாக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. முழுமையாக கணினிமயம் செய்த பிறகே, குடும்ப அட்டைகளை வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள், சாதாரண குடும்பங்கள் என்பதை வகைப்படுத்த முடியும். ஆகவே குறைந்தது ஓராண்டு கால அவகாசம் தேவை' என்று கோரியிருந்தார்.
தற்போது தமிழ்நாட்டில் அனைத்து நியாயவிலைக் கடைகளும் கணினிமயமாக்கப்படவில்லை என்றாலும்கூட, இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு, ஆனால் எந்த குடும்ப அட்டைதாரருக்கும் குறைவு ஏற்படாத விதத்தில் அதே அளவில், விலையில்லா அரிசியாக வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஏற்று, அமல்படுத்
தாமல் இருந்திருந்தால் தமிழக அரசுக்கு பொதுவிநியோகப் பொருள்களுக்கான செலவில் கூடுதலாக ரூ.2,730 கோடி செலவிட நேர்ந்திருக்கும். தற்போது இந்தச் செலவு ரூ.1,193 கோடியாக குறைந்துள்ளது. அதாவது, தற்போது விநியோக முறையில், அளவில் மாற்றம் செய்யாமலேயே சுமார் ரூ.1,500 கோடி மிச்சமாகியுள்ளது.
இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் தமிழக அரசுக்கு மேலும் சில பயன்களும் கிடைக்கும். பேறுகால தாய்மார்கள், குழந்தைக்கு பால்கொடுக்கும் தாய்மார்கள், 6 மாத குழந்தைகள் முதல் 14 வயதுவரையிலான சிறார்களுக்கான ஊட்டச்சத்து ஆகியவற்றுக்கான மானியம், உதவித் தொகை போன்ற சலுகைகளைப் பெறுவதுடன், அரிசி, கோதுமை மற்றும் தானியங்களைக் கொண்டு சேர்த்தல், கையாளுதல் ஆகிய செலவுகளில் 50%-ஐ மத்திய அரசே இச்சட்டத்தின்கீழ் ஏற்க முடிவு செய்திருப்பதால், இந்தச் சலுகையிலும் தமிழக அரசுக்கு நிதியுதவி கிடைக்கும். ஏற்கெனவே பேறுகால தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் அமல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதிச்சுமையை குறைக்க அல்லது அவர்களது பயன்பாட்டு நிதியை மேலும் அதிகரிக்க இயலும்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மிக முக்கியமான ஒரு நடைமுறை, ஒரு குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூத்தவர் எவரோ அவரே குடும்பத் தலைவராக இருப்பார். "ஸ்மார்ட் கார்டு' குடும்ப அட்டையில் அவரது புகைப்படம்தான் இருக்கும். இதன்மூலம் பெண்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். காலப்போக்கில் உணவுப் பொருள்களாக வழங்காமல், வங்கிக் கணக்கில் நேரடி மானியமாகப் போடப்படும்போது, அது குடும்பத் தலைவியிடம் கிடைப்பதற்கு இது வழிகோலுகிறது.
தற்போது ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டையின் சராசரி உறுப்பினர்கள் எண்ணிக்கை 5 என்ற புள்ளிவிவரத்தின் அளவிலேயே 20 கிலோ இலவச அரிசி தீர்மானிக்கப்பட்டது. தற்போது குடும்ப எண்ணிக்கைக்கு ஏற்ப அனைவருக்கும் தலா 5 கிலோ அரிசி, அதாவது ஒரு குடும்பத்தில் 10 பேர் இருந்தால் அந்த குடும்பத்துக்கு 50 கிலோ அரிசி விலையில்லாமல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கும் இதை நீட்டிப்பது நியாயமல்ல.
மத்திய அரசு குறிப்பிடும் குடும்ப எண்ணிக் அளவுக்கு (நகர்ப்புறத்தில் 50% குடும்பங்கள், கிராமங்களில் 75% குடும்பங்கள்) அதிகமாக உள்ள, அதாவது வறுமைக்கோட்டுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று கருதப்படுகிற குடும்ப அட்டைகளுக்கு, தமிழக அரசு எப்போதும்போல வழங்கும் விலையில்லா அரிசி அதிகபட்சமாக 20 கிலோ மட்டுமே தொடர்ந்து வழங்கப்படும் என்று ஒரு வரம்பு நிர்ணயித்திருக்கலாம்.
மேலும் 5 கிலோ என்பது அரிசியாக மட்டுமே இருக்கத் தேவையில்லை. ஒரு பகுதி கோதுமையாக, பருப்பு போன்ற தானியமாக அவரவர் விருப்பத்துக்கு இடமளித்திருக்கலாம்.
17.1.2013-இல் நாடாளுமன்ற நிலைக்குழு இந்த உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அவைத் தலைவரிடம் வழங்கியபோது, "வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு அரிசி ரூ.3, கோதுமை ரூ.2, தானியம் ரூ.1 என்ற விலையில் ஒவ்வொரு நபருக்கும் மாதம் 5 கிலோ வரை வழங்கவும், வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ள குடும்ப அட்டைகளுக்கு ஒரு நபருக்கு மாதத்துக்கு 3 கிலோ வீதம், மத்திய அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலையில் 50% விலைக்கு கோதுமை, அரிசி, தானியம் வழங்க வேண்டும்' என்றுதான் வரையறுக்கப்பட்டிருந்தது.
அப்படியே அமலுக்கு வந்திருந்தால், ஏழைக் குடும்பத்தினரும், நடுத்தர குடும்பத்தினரும் அவரவர் வாங்கும் திறனுக்கு ஏற்ப பயனடைந்திருப்பார்கள். அனைவருக்கும் நியாயமான விலையில் உணவு தானியங்கள் கிடைக்க வழி ஏற்பட்டிருக்கும். நகர்ப்புறத்தில் 50%, கிராமப்புறத்தில் 75% பயனாளிகள் என்று குழப்பி இருப்பது தேவையற்ற வேலை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com