காவிரி ஆணையம்தான் தீர்வு!

தமிழக விவசாயிகளின் நலன் கருதி காவிரி நீரைத்
Updated on
2 min read

தமிழக விவசாயிகளின் நலன் கருதி காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியதன் பேரில், தற்போது கர்நாடக அரசு 11,000 கன அடி தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மீண்டும் வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வரும்போது, மென்மையாக இடித்துரைத்த நீதிபதிகள் மேலும் கோபம் கொண்டுவிடக் கூடாது என்கிற புரிதலுடன் கர்நாடக அரசு தற்போது கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 7,000 கன அடி நீரும், கபினி அணையிலிருந்து 4,000 கன அடி தண்ணீரும் திறந்துவிட்டிருக்கக்கூடும்.
தமிழ்நாடு, நீதிமன்றப் படியேறும் முன்னதாகவே கர்நாடகம் இதை செய்திருக்கலாம். அல்லது தமிழக விவசாயிகள் சந்தித்தபோதாகிலும் அறிவித்திருக்கலாம். நீதிமன்றத்தைச் சுட்டிக்காட்டி உள்ளூர் விவசாயிகளையும், எதிர்க்கட்சிகளையும் சமாளிக்கும் அரசியலை கர்நாடக அரசு தொடர்ந்து மேற்கொள்கிறது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்த அணுகுமுறையில் மட்டும் மாற்றம் இருப்பதில்லை.
இந்த அரசியல் ஒருபுறம் இருக்க, கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் பல தவறான தகவல்களையும், உண்மைக்கு மாறான கருத்துகளையும் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இதற்காகவே விவசாயிகள் பொதுநல வழக்குத் தொடுக்கலாம்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தண்ணீர்ப் பற்றாக்குறை இல்லாத இயல்பான நீர்ப் பருவ ஆண்டில்தான் மற்ற மாநிலங்களுக்குரிய நீரைத் திறந்துவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசின் வழக்குரைஞர் ஃபாலி நாரிமன் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறான கூற்று. இடர்பாட்டுக் காலங்களில் எந்த விகிதத்தில் நீரைப் பகிர்ந்துகொள்வது என்பது குறித்து நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இடர்பாட்டுக் காலம் என்றால் என்ன என்பது தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பதே உண்மை.
மேலும், 2002-ஆம் ஆண்டு இதேபோன்று காவிரி நீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த நேரத்தில், இதே ஃபாலி நாரிமன்தான் கர்நாடக அரசின் சார்பில் வாதம் செய்தார். அப்போது அவர் வாதிடுகையில், கர்நாடகத்தின் நான்கு அணைகளிலும் 41 டி.எம்.சி. அளவே இருந்த தண்ணீர் ஆகஸ்ட் மாதம்தான் 71 டி.எம்.சி. அளவுக்கு உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டு, போதுமான தண்ணீர் இல்லை என்றார். அப்போது இடைமறித்த நீதிபதிகள் நீங்கள் (கர்நாடகம்) இடர்பாட்டு நிலையில் இருப்பது போன்றதாக இல்லை. ஆனால் நீங்கள் தமிழ்நாட்டுக்கு கொஞ்சமும் தண்ணீரைத் திறந்து விடாமல் இருக்கிறீர்கள் (It is not as if you are in distress. But you are not releasing any water to Tamil Nadu) என்று சுட்டிக் காட்டினர்.
தற்போது நீதிபதிகள் முன்பு வாதம் செய்த ஃபாலி நாரிமன், நான்கு அணைகளிலும் தற்போது 80 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பதாக கூறியிருக்கிறார். அதாவது 2002-இல், நீதிமன்றம் இடர்பாடு என்று தோன்றவில்லை என இடித்துரைத்த அளவைக் காட்டிலும் 9 டி.எம்.சி. கூடுதல் நீர் கர்நாடகத்தில் இருக்கிறது என்பதை அவரே ஏற்றுக்கொள்கிறார் என்பதுதானே உண்மை!
இந்த விவகாரத்தில் 80 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருக்கிறது என்பதை வெறும் அணையின் நீர்மட்டத்தை வைத்துக் கணக்கிடுதல் கூடாது. அணைகளின் அருகமைப் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்குத் தண்ணீரை திசை திருப்பித் தேக்கி வைத்துக் கொண்டு, அணையின் நீர் உயரத்தை மட்டும் குறைவாகக் காட்டிக் கொண்டிருக்கிறது கர்நாடகம். இந்த நான்கு அணைகளின் அருகமை ஏரி, குளங்களில் எத்தனை டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதையும் சேர்த்தே கர்நாடகத்தின் நீர் அளவு தீர்மானிக்கப்பட வேண்டும். இதனை தமிழக வழக்குரைஞர்கள் ஏனோ வலியுறுத்தாமல் இருக்கிறார்கள்.
இரண்டாவதாக, குடிப்பதற்கே தண்ணீர் இல்லை என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் கர்நாடகம், குடிநீருக்காக அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் ஏன் அதிகமாகத் தண்ணீரை எடுத்துக் கொள்கிறது என்பதற்கு விளக்கம் தரவேண்டும். காவிரி நடுவர் மன்றம், குடிநீர் தேவைக்காக பெங்களூரு, மைசூரு, மாண்டியா ஆகிய மூன்று பகுதிகளுக்கும் சேர்த்து மொத்தமாக அனுமதித்த அளவு 1.75 டி.எம்.சி. மட்டுமே. ஆனால் கர்நாடகம் எவ்வளவு நீரை காவிரியிலிருந்து அள்ளிச்செல்கிறது தெரியுமா? குறைந்த பட்சம் 20 டி.எம்.சி. என கணக்கிடப்படுகிறது. இது முழுவதுமாக பெங்களூரு நகருக்காக மட்டுமே எடுத்துச் செல்லப்படுகிறது.
ஏற்கெனவே அமலில் உள்ள குடிநீர் திட்டங்கள் போதாவென்று, சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட காவிரி நிலை-4 குடிநீர் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 50 கோடி லிட்டர் தண்ணீரை பெங்களூரு நகருக்கு கொண்டு வருகிறார்கள். இதற்கெல்லாம் கர்நாடக அரசு யாரிடமும் அனுமதி கோரியதில்லை. பெங்களூரு நகரத்தின் தேவைக்கு கர்நாடக அரசு தண்ணீர் எடுத்துக் கொள்வதை யாரும் தடுக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் பயிர்கள் வாடும்போது, தேவைக்கு அதிகமான தண்ணீரை பெங்களூருக்கு எடுத்துச் சென்று வீணாக்குவானேன் என்பதுதான் நமது கேள்வி.
இந்த நிலைமைக்குக் காரணம், காவிரி ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்படாமல் மத்திய அரசு காலம் கடத்துவதுதான். காவிரி ஆணையம் அமைத்திருந்தால், இந்த முறைகேடுகளை முற்றிலும் தடை செய்ய இயலாவிடினும், பெருமளவு குறைத்துவிட முடியும். இருக்கின்ற நீரை எவ்வாறு பகிர்வது என்பதை காவிரி ஆணையமே தீர்மானிக்க முடியும். காவிரி ஆணையத்தை அமைத்து இரு மாநில உறவுகள் மேலும் சீர்கேடு அடையாதபடி காக்க வேண்டிய கடமை நடுவண் அரசுக்கு உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com