ஜனநாயகத்துக்கு ஜே!

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே. நகர்)
Updated on
2 min read

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே. நகர்) சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதிக அளவில் பணப் பட்டுவாடா நடந்திருக்கிறது என்பதும், இந்த நிலையில் தேர்தல் நடத்தப்பட்டால் அது முறையான தேர்தலாக இருக்காது என்பதும்தான் அதற்குக் கூறப்பட்டிருக்கும் காரணங்கள்.
"நாம் உலகப் பெரு முதலாளிகளையெல்லாம் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கிறோம். கட்சிப் பாகுபாடு இல்லாமல் எல்லா வேட்பாளர்களுக்கும் தேர்தலுக்கு நன்கொடை வழங்கி, ஒரு கட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்களைத் தங்கள் கையில் போட்டுக்கொண்டு இந்திய ஜனநாயகத்தையே அவர்கள் ஆட்டிப் படைக்கும் அபாயம் காத்திருக்கிறது' என்று 1991-இல் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் தெரிவித்த கருத்து நடைமுறை நிதர்சனமாகி விடுமோ என்கிற அச்சம் மேலிடுகிறது.
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் வெள்ளோட்டம் விடப்பட்ட "வாக்குக்குப் பணம்' என்கிற சூத்திரம், 2009 மக்களவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு தமிழகத்தில் நடந்த எல்லா தேர்தல்களிலும், வாக்குக்குப் பணம் என்பது நடைமுறை என்றாகிவிட்டது. இடதுசாரிக் கட்சிகளைத் தவிர, ஏனைய எல்லா கட்சிகளின் வேட்பாளர்களும் இந்த உத்தியைக் கடைப்பிடித்து வருகிறார்கள். சில கட்சித் தலைமைகள் நேரிடையாக இந்த செயல்பாட்டுக்குத் துணை நிற்காமலிருக்கலாம். ஆனால் அவர்களும் பணபலம் உள்ள வேட்பாளர்களை நிறுத்துவதன் காரணமே களத்தில் வலுவிழந்துவிடக் கூடாது என்பதால்தான்.
இந்தியத் தேர்தல் முறையில் எங்கேயோ தவறு இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்கள் அனைத்துமே "வாக்குக்குப் பணம்' என்கிற அடிப்படையில்தான் என்று பரவலாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. சில யூனியன் பிரதேசங்களிலும், சிறிய மாநிலங்களிலும் இதுதான் நடைமுறை என்றாகிவிட்டதாகக் கூறுகிறார்கள். நடந்த முடிந்த உத்தரப் பிரதேசம், பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பின்னால் பண விநியோகமும், மின்
னணு வாக்குப்பதிவு இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதும்தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
மத்தியப் பிரதேசத்தில் "பிந்த்' மக்களவைத் தேர்தலுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காகக் கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை அந்த மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி வேட்பாளர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் முன்னால் செயல்முறை விளக்கம் அளித்தபோது, எந்தப் பொத்தானை அழுத்தினாலும் ஒரே கட்சிக்கு வாக்குகள் விழுந்ததைப் பார்த்து அனைவரும் அதிர்ந்தனர். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளை மட்டுமே மாற்ற மாநில அரசு ஒப்புக் கொண்டது. கடும் போராட்டத்துக்குப் பிறகு மேலும் இரண்டு அதிகாரிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுமா என்பது தெரியவில்லை.
இப்போதைய 16-ஆவது மக்களவையின் 543 உறுப்பினர்களில் 449 பேர் கோடீஸ்வரர்கள். அதாவது 82% பேர் கோடீஸ்வரர்கள். 2004-இல் 30% ஆக இருந்து 2009-இல் 58% ஆக அதிகரித்து 2014-இல் 82% ஆகியிருக்கும் நிலையில் 2019-இல் கோடீஸ்வரர்களாக இருந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டால் வியப்பில்லை. அதாவது பணம் இருந்தால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும், அல்லது, பணம் கொடுத்தால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதைத்தான் அதிகரித்துவரும் கோடீஸ்வர உறுப்பினர்களின் எண்ணிக்கை தெரிவிக்கிறது.
தேர்தலில் பண விநியோகம் என்பது மிகவும் திட்டமிட்டு நடத்தப்படும் செயல்பாடாகிவிட்டது என்பது ஒருபுறம் இருக்கட்டும், வாக்காளர்களே தங்களது வாக்குக்கு எவ்வளவு அதிகமாக விலை தரப்படுகிறதோ, அந்தத் தொகைக்கு வாக்குகளை விற்பதற்குத் தயாராக இருக்கிறார்களே, இதற்கு என்ன செய்யப்போகிறோம்?
அரசியல் நிர்ணய சபையில் அனைவருக்கும் வாக்குரிமை என்கிற தீர்மானத்தை முன்மொழிந்தபோது நடந்த விவாதத்தில், இப்படியொரு நிலைமை ஏற்பட்டுவிடலாம் என்று சிலர் அப்போதே எச்சரித்திருக்கிறார்கள். 1949 நவம்பர் 25-ஆம் தேதி அன்றைய சட்ட அமைச்சர் பாபா சாகேப் அம்பேத்கரின் உரையின் கடைசி சில வாக்கியங்களை இப்போது நினைத்தாலும் அந்த தீர்க்க தரிசனம் புல்லரிக்க வைக்கிறது.
"சுதந்திரம் நம்மீது மிகப்பெரிய பொறுப்பை சுமத்துகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சுதந்திரம் அடைந்துவிட்ட நாம், இனிமேல் நடக்கும் தவறுகளுக்கு பிரிட்டிஷ்காரர்கள் மீது குற்றம் சுமத்த முடியாது. நாம்தான் பொறுப்பேற்றாக வேண்டும்' என்கிற அவரது கூற்றுப்படி, தேர்தலில் வாக்குகள் விலை பேசப்படுமானால், அதற்கு நாம் அனைவருமே பொறுப்பேற்றாக வேண்டும். இதற்கு எந்தவொரு தனி நபரையோ அரசியல் கட்சியையோ குறை கூறிவிட முடியாது.
அனைவருக்கும் வாக்குரிமை என்பது பணக்காரர்களாலும், ஆதிக்கம் மிக்க சிலராலும் படிப்பறிவில்லாத ஏழைகள் சுரண்டப்படாமல் இருப்பதற்காகத் தரப்பட்ட ஆயுதம். அந்த ஆயுதமே விலைபேசப்படும் என்பதைப் பாவம் பண்டித ஜவாஹர்லால் நேருவும், பாபா சாகேப் அம்பேத்கரும், பாபு ராஜேந்திர பிரசாதும் நினைத்துகூட பார்த்திருக்கமாட்டார்கள்!
பணப் பட்டுவாடா செய்யப்பட்டதற்காக ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்பதற்காக மகிழ்ச்சியடைவதா? ஒரு தொகுதியில் கூட தவறுகள் நடைபெறாமல் முறையாகத் தேர்தல் நடத்த நமது தேர்தல் ஆணையத்தால் முடியவில்லை என்பதை நினைத்து வருத்தப்படுவதா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com