சாதனைக்கு வயது என்றைக்குமே ஒரு தடையாக இருந்ததில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி. முப்பது வயது கடந்தாலே எந்தவொரு விளையாட்டு நட்சத்திரமும் மங்கி விடுவதுதான் வழக்கம். அதிலும் 35 வயது என்று சொன்னால், ஒன்று தொடர் தோல்விகள் மூலம் நட்சத்திர அந்தஸ்தை இழப்பார்கள். இல்லையென்றால், விளையாட்டு அரங்கத்தைவிட்டே ஒதுங்கி விட்டிருப்பார்கள். இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றிவாகை சூடியிருக்கும் ரோஜர் ஃபெடரரும் சரி, செரீனா வில்லியம்ஸும் சரி, 35 வயதானவர்கள் எனும்போது, உலகமே அவர்களது சாதனையைப் பார்த்து வியப்பில் ஆழ்கிறது.
ஏனைய விளையாட்டுகள் எல்லாவற்றையும்விட, டென்னிஸ் விளையாட்டுக்கு உடல் வலு அதிகம் தேவைப்படுகிறது. கால்கள், கைகள், மனது மூன்றுமே ஒருங்கிணைந்து செயல்பட்டுக் கொண்டே இருந்தால் மட்டுமே எதிர்கொள்ளும் பந்தைச் சிறப்பாக கையாள முடியும். முப்பது வயது கடந்தும்கூட, சற்றும் தளராத டென்னிஸ் நுட்பத்துடன் களத்தில் பல வெற்றிகளைச் சூடிய பெருமை ஆந்த்ரே அகஸ்ஸிக்கு உண்டு. அவருக்குப் பிறகு, அந்த இடத்தை எட்டிய நால்வர் ஆண்களில் ரோஜர் ஃபெடரரும்,
ரஃபேல் நடாலும், பெண்களில் செரீனா வில்லியம்ஸும் அவரது சகோதரி வீனஸ் வில்லியம்ஸும் மட்டுமே. இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்த நால்வருமே மோதினார்கள்.
2017 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் மிகப்பெரிய ஆச்சரியம் ரோஜர் ஃபெடரரின் அபாரமான ஆட்டமும் வெற்றியும். முழங்காலில் மூட்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகும், நான்கரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகும் மீண்டும் வெற்றிவாகை சூடியிருக்கிறார் ஃபெடரர். 2012-இல் விம்பிள்டன் கோப்பையை வென்ற பிறகு, அவர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் வெற்றி வாகை சூடி இருப்பது இப்போதுதான். இது அவரது 18-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது மட்டுமல்ல, ஆஸ்திரேலிய ஓபனில் வென்ற ஐந்தாவது பட்டமும்கூட.
ரோஜர் ஃபெடரரின் வெற்றிக்கு எள்ளளவும் குறைந்ததல்ல செரீனா வில்லியம்ஸின் வெற்றி. சொல்லப்போனால், 35 வயதில் ஒரு பெண்மணி டென்னிஸில் தொடர்ந்து வெற்றி பெறுவது என்பது, ஆண் விளையாட்டு வீரரின் வெற்றியைவிட மேலானது. தனது 30 வயதுக்குப் பிறகு 10 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைப் பெற்று சாதனை படைத்த செரீனாவின் மிகப்பெரிய சாதனை இந்த ஆண்டின் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் பட்டம். கிராண்ட்ஸ்லாம் வெற்றி பெற்றவர்களில் அதிக வயதான பெண்மணி என்கிற பெருமைக்கு உரியவராகிறார் செரீனா வில்லியம்ஸ்.
இதுவரை மகளிர் ஒற்றையர் பிரிவில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கும் செரீனா வில்லியம்ஸ் "ஓபன் எரா'வில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். செரீனா வில்லியம்ஸ், முதல் தடவையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றது 1999-இல். தொடர்ந்து 186 வாரங்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பெண் டென்னிஸ் வீராங்கனைகள் செரீனா வில்லியம்ஸும், அவருக்கு முன்னால் ஸ்டெஃபி கிராஃபும்தான். ஸ்டெஃபி கிராஃப் 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பெற்றிருக்கிறார் என்றாலும், அத்தனை பட்டங்களையும் தனது 30 வயதுக்குள்தான் அவரால் பெற முடிந்திருக்கிறது. செரீனாவுக்கு இப்போது வயது 35.
அமெரிக்காவிலுள்ள மிக்சிகனில், ஏழைகள் வாழும் கெட்டோவில் பிறந்து வளர்ந்த ஒருவர் சர்வதேச டென்னிஸ் நட்சத்திரமாகி இருப்பது வரலாற்று சாதனை. அவரது தந்தை ரிச்சர்ட் வில்லியம்ஸும் தாயார் ஒராசின் பிரைசும்தான், வில்லியம்ஸ் சகோதரிகள் - செரீனா, வீனஸ் - இருவருக்கும் டென்னிஸ் பயிற்சியாளர்கள். மூன்றாவது வயதிலிருந்து தங்களது இரண்டு மகள்களுக்கும் டென்னிஸ் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார் ரிச்சர்ட் வில்லியம்ஸ்.
செரீனாவின் கைகளில் உள்ள சக்தியும், மட்டையைக் கையாளும் நுட்பமும்தான் அவருடைய தனித்துவம். "சர்வீஸ்'தான் செரீனாவின் மிகப்பெரிய பலம். ஒருவேளை அதில் துல்லியம் குறைந்தாலும்கூட, சக்திவாய்ந்த "ஃபோர்ஹேண்ட்' மட்டை வீச்சால் எதிரிகளைத் திணறடித்து விடுவார். இதுவரை எந்தவொரு போட்டியிலும் செரீனா களைப்படைந்து காணப்பட்டதோ, சலிப்புடன் வெளியேறியதோ கிடையாது. வயது செரீனா வில்லியம்ஸுக்கு என்றைக்குமே ஒரு பொருட்டாகவோ, தடையாகவோ இருந்ததே இல்லை.
கருப்பர் இனத்தைச் சேர்ந்த செரீனா, கடுமையான நிறவெறியை எதிர்கொண்டு உயர்ந்ததாலோ என்னவோ, அவரிடம் அசாதாரணமான அழுத்தமும், எதற்கும் கவலைப்படாத மனத்திடமும் விளையாட்டில் காணப்படுகிறது. தன்னைவிடப் பாதி வயதேயான வீராங்கனைகளையும், தன்னைவிட பலசாலியான விளையாட்டு வீராங்கனைகளையும் எதிர்கொள்ளும்போதுகூட, பதற்றமே இல்லாமல் எதிர்கொள்ளும் பாங்கு, அவருக்கே உரித்தான பாணி என்றாகிவிட்டது.
23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பெற்றுவிட்ட பிறகும்கூட, செரீனா வில்லியம்ஸ் மட்டைக்கு விடை கொடுத்து விடுவார் என்று யாரும் எதிர்பார்த்துவிட வேண்டாம். அவரால் டென்னிஸ் மைதானத்தையும், டென்னிஸ் மட்டையையும் விட்டுப் பிரிவது என்பது இயலாதது. ஆஸ்திரேலிய ஓபனில் ஏழு முறை, பிரெஞ்சு ஓபனில் மூன்று முறை, விம்பிள்டனில் ஏழு முறை, அமெரிக்க ஓபனில் ஆறு முறை என மகளிர் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் வெற்றிகளுடன் அவரது சாதனை நின்றுவிடாது, தொடரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.