முடிவில் ஓர் உறுத்தல்!

உத்தரப் பிரதேசத் தேர்தல் முடிவு எட்ட
Updated on
2 min read

உத்தரப் பிரதேசத் தேர்தல் முடிவு எட்ட முடியாத உயரத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடியைத் தூக்கி வைத்துவிட்டது. மகாராஷ்டிர மாநில மாநகராட்சி தேர்தல், ஒடிஸா மாநில மாவட்ட ஊராட்சி தேர்தல்களைத் தொடர்ந்து இப்போது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்திலும் பாரதிய ஜனதா கட்சி அடைந்திருக்கும் அபார வெற்றியை ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாததாக்கிய நரேந்திர மோடி அரசின் முடிவை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான தெளிவான அறிவிப்பாகத்தான் கொள்ள வேண்டும்.
உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை, 1980-க்குப் பிறகு 37 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் ஒரு கட்சி 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. 1993 முதல் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை வழங்காமல் கூட்டணிக் குழப்பங்களுக்கு வழிகோலிய உத்தரப் பிரதேச வாக்காளர்கள், 2007 முதல் தெளிவான தீர்ப்புகளையே வழங்கி வருகிறார்கள். 2007-இல் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும், 2012-இல் முலாயம்சிங் யாதவின் சமாஜவாதி கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை அளித்த உத்தரப் பிரதேச வாக்காளர்கள் இந்தமுறை பாரதிய ஜனதா கட்சிக்கு 312 இடங்களுடன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை வழங்கி நிலையான ஆட்சிக்கு வழிகோலி இருப்பது வரவேற்கப்பட வேண்டிய முடிவு.
உத்தரப் பிரதேச தேர்தல் முடிவு மூன்று முக்கிய செய்திகளைக் கூறுகிறது. முதலாவது, ஜாதிக் கட்சிகளை மக்கள் இனியும் ஆதரிக்கத் தயாராக இல்லை. இரண்டாவது, சிறுபான்மையினரை வாக்கு வங்கியாகக் கருதி அவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மூன்றாவது, காங்கிரஸ் கட்சி தனது முக்கியத்துவத்தை இழந்து விட்டிருக்கிறது.
சமாஜவாதி கட்சியின் அடித்தளமான யாதவர்கள் வாக்கு வங்கியும், பகுஜன் சமாஜ் கட்சியின் "ஜாதவ்' என்றழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் வாக்கு வங்கியும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் ஜாட் வாக்கு வங்கியும் தகர்ந்திருக்கின்றன. அதிக அளவில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்த பகுஜன் சமாஜ் கட்சி வெறும் 19 இடங்களில் மட்டும்தான் வெற்றி பெற முடிந்திருக்கிறது.
உத்தரப் பிரதேச வெற்றிக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்குக் காரணம், இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலம் என்பதும், மக்களவைக்கு 80 உறுப்பினர்களை அனுப்பும் மாநிலம் என்பதும். 20 கோடி மக்கள்தொகை கொண்ட உத்தரப் பிரதேசம்தான் இந்தியாவுக்கு மிக அதிகமான பிரதமர்களை அளித்திருக்கும் மாநிலம்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பா.ஜ.க. பெற்றிருக்கும் வெற்றியைப்போல, பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றியடைந்திருக்கிறது. 75-ஆவது பிறந்தநாள் பரிசாக கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு பஞ்சாப் மக்கள் முதல்வர் பதவியை மீண்டும் அளிக்க முற்பட்டிருக்கிறார்கள் என்றால், அது அவருடைய தனிப்பட்ட செல்வாக்குக்குக் கிடைத்திருக்கும் வெற்றி என்றுதான் கூற வேண்டும். காங்கிரஸ் தலைமையின் தலையீடு இல்லாமல் தனக்கு முழுப் பொறுப்பும் தந்தால் மட்டுமே காங்கிஸின் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குவேன் என்கிற நிபந்தனையுடன் தேர்தலை சந்தித்து வெற்றியும் பெற்றிருக்கிறார் அவர்.
பஞ்சாப் மக்களும் உத்தரப் பிரதேச வாக்காளர்களைப்போலவே தெளிவாக முடிவெடுத்திருக்கிறார்கள். ஆட்சியில் இருந்த அகாலிதளம் - பா.ஜ.க. ஆட்சிமீது கடுமையான வெறுப்பு இருந்தது. புதிதாகத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி களமிறங்கியபோது, தில்லியில் நடந்ததுபோல ஆம் ஆத்மியை மாற்றாக மக்கள் தேர்ந்தெடுக்கக்கூடும் என்கிற அரசியல் நோக்கர்களின் எதிர்பார்ப்பை வாக்காளர்கள் முறியடித்து விட்டனர். 77 இடங்களைக் காங்கிரஸ் கட்சிக்கு அளித்து ஆட்சிக்கு வழிகோலி இருக்கிறார்கள்.
தேர்தல் நடந்த ஏனைய இரண்டு மாநிலங்களான கோவாவிலும், மணிப்பூரிலும் காங்கிரஸ் அதிக இடங்களை வென்ற கட்சியாக இருந்தாலும், தனிப்பெரும்பான்மை பெறவில்லை. கோவாவில் உள்ள 40 தொகுதிகளில் 13 இடங்களை மட்டுமே பா.ஜ.க. வென்றிருந்தாலும் ஏனைய கட்சிகள் அனைத்தும் 17 இடங்களை பெற்ற காங்கிரஸýக்கு எதிராக பா.ஜ.க.வுடன் கைகோத்து ஆட்சி அமைக்கத் தயாராகின்றன. அதேபோல, மணிப்பூரிலும் 60 தொகுதிகளில் 28 தொகுதிகளைக் காங்கிரஸ் கைப்பற்றி இருந்தாலும், ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் 21 இடங்களை வென்ற பா.ஜ.க. ஆட்சி அமைக்கக்கூடும் என்று தெரிகிறது.
பணம் செல்லாததாக்கப்பட்ட முடிவு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதும் இந்திரா காந்திக்குப் பிறகு அதிக செல்வாக்குள்ள ஒரு தலைவராகப் பிரதமர் நரேந்திர மோடி உயர்ந்திருக்கிறார் என்பதும்தான் தேர்தல் முடிவுகள் கூறும் செய்திகள். ஆனாலும் ஓர் உறுத்தல்.
மணிப்பூரின் சிறப்பு காவல் தடைச் சட்டத்தை அகற்ற வேண்டும் என்று 16 ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய, சுயேச்சையாகப் போட்டியிட்ட ஐரோம் ஷர்மிளாவுக்கு வெறும் 90 வாக்குகள்தான் கிடைத்தன என்றால், நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகள்கூட கிடைக்கவில்லை என்றால் அது என்ன நியாயம்? அடக்கு முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களுக்காகப் போராடிய பெண்மணி அவர். நல்லவர்களுக்கும், அரசியல் சாராத மக்கள் தொண்டர்களுக்கும் தேர்தலில் இடமில்லை என்பது தான் பொருளா? நன்றிகெட்ட மக்கள், மனிதாபிமானமில்லாத வாக்காளர்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com