பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

ஒளிர்கிறது இந்தியா!

இந்தியாவிலுள்ள 5,97,464 கிராமங்களும் மின்சாரம் இணைப்பு உள்ள கிராமங்களாக மாறியிருப்பது என்பது சாதாரண சாதனை அல்ல.

News image
Updated On :2 மே 2018, 7:44 pm

ஆசிரியர்

இந்தியாவிலுள்ள 5,97,464 கிராமங்களும் மின்சாரம் இணைப்பு உள்ள கிராமங்களாக மாறியிருப்பது என்பது சாதாரண சாதனை அல்ல. 'மின்சார இணைப்பு தரப்படாத 18,482 கிராமங்களுக்கு 2019 மக்களவைத் தேர்தலுக்குள் மின்சாரம் தரப்படும்' என்று கடந்த 2015-இல் பிரதமர் நரேந்திர மோடி அளித்திருந்த உறுதி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அடுத்த 1000 நாட்களில் அனைத்து கிராமங்களும் மின்இணைப்பு உள்ள கிராமங்களாக மாற்றப்பட வேண்டும் என்று அவர் நிர்ணயித்திருந்த இலக்கு 12 நாட்கள் முன்னதாகவே எட்டப்பட்டிருக்கிறது.
மணிப்பூர் மாநிலத்திலுள்ள லீசாங் என்கிற கிராமம்தான் தேசிய மின்வழித் தடத்தில் இணைந்திருக்கும் கடைசி இந்திய கிராமம். இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த நான்கு ஆண்டுகளில்தான் 18482 கிராமங்கள் மின் இணைப்பு பெற்றிருக்கின்றன. 
இந்த அரசின் மிகப்பெரிய சாதனை, மின்சக்தித் துறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்மாதிரி முயற்சிகள். மின் சேமிப்புக்கு உதவும் எல்ஈடி பல்புகளுக்கு உலகிலேயே இல்லாத அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்திய பெருமை நரேந்திர மோடி அரசுக்கு உண்டு. தேசிய மின்வழித் தடத்தின் மூலம் இணைப்புத் தர முடியாத 18,482 கிராமங்கள் சில மாற்று மின்சக்தி மூலம் மின்சாரம் பெற்றிருக்கின்றன என்பது அரசுடைய வித்தியாசமான, ஆக்கப்பூர்வமான அணுகுமுறை. 
அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு தரப்பட்டிருந்தாலும்கூட பல கிராமங்களில் மின் இணைப்புப் பெற்றிருக்கும் வீடுகள் 10% மட்டும்தான் என்பதை நாம் உணர வேண்டும். அதிகாரபூர்வமாக மின் கட்டணம் செலுத்த வசதிவாய்ப்பு இல்லாத பலர் முறைகேடாக மின் இணைப்பு பெறுகிறார்கள் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 
அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு தரப்பட்டுவிட்ட நிலையில், பிரதமரின் 'செளபாக்யா' என்கிற இல்லம் தோறும் மின் இணைப்புத் திட்டத்தின் மூலம் எல்லா வீடுகளுக்கும் மின் இணைப்பு தருவதற்கான முயற்சியையும் அரசு எடுத்து வருகிறது. இதுவரை மின் இணைப்பு இல்லாத எல்லா ஏழை குடும்பங்களுக்கும் இலவசமாக மின் இணைப்பு வழங்க ரூ.16,320 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. 
அனைவருக்கும் மின்சாரம் என்பது இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் பல்வேறு மத்திய - மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 40 ஆண்டுகளுக்கு முன்பே இதில் தமிழ்நாடு முன்மாதிரியாக இருந்திருக்கிறது. தென்னிந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் எல்லா கிராமங்களும் மின் இணைப்புப் பெற்ற கிராமங்களாக எப்போதோ மாறிவிட்டிருக்கின்றன. 
2005-இல் அன்றைய மன்மோகன் சிங் அரசு அறிவித்த 'ராஜீவ் காந்தி கிராமீண் வித்யுதிகரண் யோஜனா' என்கிற திட்டமும், 2015-இல் நரேந்திர மோடி அரசு அறிவித்த 'தீன்தயாள் உபாத்யாய கிராம் ஜோதி யோஜனா' என்கிற திட்டமும் இன்றைய அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் என்கிற சாதனைக்கு அடித்தளம் இட்டன.
இந்த அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பே 97% கிராமங்கள் மின் இணைப்புப் பெற்றிருந்தன. கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 1,07,600 கிராமங்கள் மின் இணைப்புப் பெற்றன. கடந்த 60 ஆண்டுகளில் ஆண்டுதோறும் சுமார் 10,000 கிராமங்கள் மின் இணைப்புப் பெற்றன. இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாமே உண்மைதான் என்றாலும், நரேந்திர மோடி ஆட்சியில்தான் அனைத்து கிராமங்களும் முனைப்புடன் திட்டமிடப்பட்டு மின் இணைப்புப் பெற்றிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஒரு சாதனை நிகழும்போது எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்தக் கட்சி அதன் பெருமையைத் தேடிக்கொள்வது புதிதொன்றுமல்ல.
இனிமேல் நம்முடைய முனைப்பெல்லாம் கிராமங்களிலுள்ள அனைத்து வீடுகளும் மின்சார இணைப்பு பெறுவதில் இருக்க வேண்டும். மின்சார இணைப்பு என்பது வாழ்க்கைத் தரத்தையும், செயல்திறனையும் அதிகரிப்பதுடன், அது சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் அடையாளம். எல்லா வீடுகளும் மின் இணைப்புப் பெறும்போதுதான், தகவல் பெருவழி மூலம் இணைய வசதி பெற்று வளர்ச்சிக்கான அடுத்தகட்டத்தை நோக்கி இந்தியாவால் நகர முடியும். 
எல்லா கிராமங்களுக்கும் மின் இணைப்பு, எல்லா வீடுகளுக்கும் மின் இணைப்பு என்பதால் மட்டுமே பிரச்னை முடிந்துவிடுவதில்லை. மின் உற்பத்தி, முறையான மின் பகிர்வு, நுகர்வோருக்கும் உற்பத்தியாளருக்கும் கட்டுப்படியாகும் விலை என்று பல்வேறு பிரச்னைகள் நம்மை எதிர்கொள்கின்றன. தீன்தயாள் உபாத்யாய கிராம் ஜோதி இணையதளத்தின் புள்ளிவிவரப்படி இந்தியாவில் ஆறு மாநிலங்களில் மட்டும்தான் கிராமப்புறங்களில் 24 மணி நேர மின்சாரம் வழங்கப்படுகிறது. குறைந்த செலவிலான மின் உற்பத்திக்கு வழிகோலுவதும், தடைபடாத மின்சாரம் கிடைப்பதை உறுதிப்படுத்துவதும் நம்மை எதிர்கொள்ளும் சவால்கள்.
ஒரு கிராமத்தில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அமைக்கப்பட்டு அந்த கிராமத்திலுள்ள பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகம், சுகாதார மையங்கள் ஆகியவையும், 10% வீடுகளும் மின் இணைப்புப் பெற்றால், அந்த கிராமம் மின் இணைப்புப் பெற்ற கிராமமாக கருதப்படும். மின்மாற்றி அமைக்கப்பட்டாலே அரசு ஆவணப்படி அதைச்சுற்றி கிராமங்கள் அனைத்தும் மின் இணைப்புப் பெறப்பட்டதாகக் கருதப்படும். இந்தியாவிலுள்ள அத்தனை கிராமங்களும் மின் இணைப்புப் பெற்றது போல அத்தனை வீடுகளும் மின் இணைப்புப் பெற்று, தடையில்லாத மின்சாரம் பெறும்போதுதான் உண்மையாகவே இந்தியா ஒளிர்கிறது என்று பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.