ஆறுதல் அளிக்கும் தீர்ப்பு!
பத்திரிகையாளர் ஜோதிர்மய் டேயின் கொலைக்குக் காரணமான சோட்டா ராஜனுக்கும் அவரது எட்டு கூட்டளிகளுக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருக்கிறது.


பத்திரிகையாளர் ஜோதிர்மய் டேயின் கொலைக்குக் காரணமான சோட்டா ராஜனுக்கும் அவரது எட்டு கூட்டளிகளுக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருக்கிறது. ஜூன் 11, 2011-இல் மும்பையிலுள்ள பொவாயில் தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த 56 வயது பத்திரிகையாளர் ஜெ.டே., சோட்டா ராஜன் கூட்டாளிகளால் சுடப்பட்டு மரணமடைந்தார். அது தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டனர். இப்போது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வழக்கில் நீதி வழங்கப்பட்டிருக்கிறது.
கடத்தல் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த சோட்டா ராஜன் கூலிப்படைக்குத் தலைவனாக மும்பையில் வலம் வந்தவர். ஒரு மிகப்பெரிய சமூக விரோத கும்பலுக்குத் தலைவனான சோட்டா ராஜன் குறித்துப் பல தகவல்களை வெளிப்படுத்தி வந்தார் பத்திரிகையாளர் ஜோதிர்மய் டே. இதனால் ஆத்திரம் அடைந்த சோட்டா ராஜன் அவரைத் தனது கூட்டாளிகள் மூலம் படுகொலை செய்தது மிகப்பெரிய பரபரப்பை அகில இந்திய அளவில் ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் சாட்சி சொன்ன காட்சி ஊடக செய்தியாளர்களின் துணிச்சல்தான் ஜெ.டேயின் மரணத்துக்குக் காரணமான சோட்டா ராஜனுக்கு தண்டனை வாங்கித் தந்திருக்கிறது. தன்னை எந்தச் சட்டமும், நீதிமன்றமும் எதுவுமே செய்துவிட முடியாது என்கின்ற அசாத்திய நம்பிக்கையுடன் இருந்த சோட்டா ராஜனின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போய், நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது.
உலகளாவிய அளவிலும்கூட பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் என்பது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் ஒன்பது பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதற்கு முன்னால் 2009-இல் பிலிப்பின்ஸில் 31 பத்திரிகை நிருபர்களும், புகைப்படக்காரர்களும் கொல்லப்பட்டதற்கு அடுத்தபடியாகப் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுதான்.
சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி, 1990 முதல் 2015 வரையிலான 25 ஆண்டுகளில் 2287 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 2016-இல் 122 பேரும், 2017-இல் 82 பேரும், 2018-இல் கடந்த நான்கு மாதங்களில் மட்டுமே 32 பேரும் துணிந்து செய்திகளை வெளியிட்டதற்காக பலியாகியிருக்கிறார்கள்.
உலக நாடுகள் அளவில் இராக், பிலிப்பின்ஸ் , மெக்சிகோ, பாகிஸ்தான், ரஷியா, இந்தியா, நைஜீரியா, சிரியா, சொமாலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பற்றவை என்று கருதப்படுகின்றன.
2018 பத்திரிகையாளர் சுதந்திரக் குறியீட்டின்படி, பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பான நாடாக நார்வேயும், மிகவும் பாதுகாப்பற்ற நாடாக வடகொரியாவும் அடையாளம் காணப்படுகின்றன. அந்தக் குறியீட்டின்படி 180 நாடுகளில் 133-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த ஆண்டு 136-ஆவது இடத்திற்குக் கீழிறங்கி இப்போது 138-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பு குறைந்து வருவது மிகவும் வேதனையையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
2015-இல் வெளியான ஓர் அறிக்கையின்படி ஆசியாவிலேயே பத்திரிகையாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற நாடாக, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானைவிட மோசமான நிலையில், இந்தியா இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. 1992-இல் இருந்து எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி 67 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 39 பேர் அவர்களது கடமையை முறையாகச் செய்ததற்காகத் தெளிவான ஆதாரங்களுடன் கொல்லப்பட்டவர்கள்.
இந்தியாவில் நடத்தப்பட்டிருக்கும் பத்திரிகையாளர்கள் மீதான கொலைவெறித் தாத்குதலில் முதலிடத்தில் இருப்பது உத்தரப் பிரதேசம். மக்களவையில் 2014-இல் தரப்பட்ட தகவலின்படி, உத்தரப்பிரதேசத்தில் பத்திரிகையாளர்கள் மீது அந்த ஆண்டு 69 தாத்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன.
பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு மிக முக்கியமான காரணமாகக் கனிமச் சுரங்க மாஃபியாக்களும், மணல் மாஃபியாக்களும், பெட்ரோல் மாஃபியாக்களும் குறிப்பிடப்படுகின்றன.
ஜார்க்கண்ட், பிகார், கர்நாடகம் என்று பல்வேறு மாநிலங்களில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதும், அது குறித்தான வழக்குகள் தீர்ப்பு வழங்கப்படாமல் அல்லது காவல்துறையால் சாட்சிகள் நிரூபிக்கப்படாமல் குற்றவாளிகள் சுதந்திரமாக உலவ வழிகோலுகின்றன.
கொல்லப்பட்டிருக்கும் பத்திரிகையாளர்களில் 70% அச்சு ஊடகத்தில் பணிபுரிபவர்கள். பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட வழக்குகளில் 96% வழக்குகளில், குற்றவாளிகள் நிரூபிக்கப்படாமல் தப்பியிருக்கிறார்கள். 4 % வழக்குகளில்கூட முழுமையாக நீதி வழங்கப்பட்டதா என்றால் இல்லை. கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களில் பலரும் அரசியல் நிருபர்களாகவும் அல்லது ஊழல் குற்றங்கள், வியாபார மோசடிகள் ஆகியவை குறித்து எழுதுபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்கள் முறையாக விசாரிக்கப்படாமலும், தீர்ப்பு வழங்கப்படாமலும், தொடரும் நிலையில், இப்போது பத்திரிகையாளர் ஜோதிர்மய் டேயின் மரணத்துக்குக் காரணமான சோட்டா ராஜனும் கூட்டாளிகளும் தண்டிக்கப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது.
அரசியல்வாதிகளின் குற்றங்களை விரைந்து விசாரித்துத் தீர்ப்பு வழங்குவது போல, பத்திரிகையாளர்களுக்கு எதிரான தாக்குதல்களும் விரைந்து முறையாக விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தால் தண்டிக்கப்பட்டால் மட்டுமே இந்தியா சுதந்திரமான, பேச்சுரிமையுள்ள, எழுத்துரிமையுள்ள தேசம் என்று தன்னை அழைத்துக்கொள்ள முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...