வெள்ளத்துடன் விளையாட வேண்டாம்! |இந்தியா-பாகிஸ்தான் நதிநீர்ப் பங்கீடு குறித்த தலையங்கம்

ஹரியாணா சட்டப்பேரவைக்கான தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி தெரிவித்திருக்கும் ஒரு கருத்து அதிர்ச்சி அளிக்கிறது. ரத்தமும், கண்ணீரும் இணைந்து பாய முடியாது என்று உரி பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்குப் பிரதமர் மோடி எச்சரித்ததன் நீட்சியாக இப்போது மீண்டும் அதே கருத்தை தனது தேர்தல் பிரசாரத்தின்போது முன்வைத்திருக்கிறார். 
பயங்கரவாதத் தாக்குதல்களால் இந்தியா மிகவும் பாதிக்கப்படுகிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. பாகிஸ்தானின் தாக்குதல்கள் முறியடிக்கப்பட வேண்டும், பாகிஸ்தானுக்கு சரியான பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்பதிலும் இருவேறு கருத்து இருக்க முடியாது. ஆனால், பாகிஸ்தான் ராணுவமும், ஆட்சியாளர்களும், பயங்கரவாதிகளும் கடைப்பிடிக்கும் தவறான நடவடிக்கைகளுக்காக அந்த நாட்டின் அப்பாவிப் பொதுமக்களின் நியாயமான உரிமைகளை, தர்மத்தை வாழ்க்கை முறையாகக் கொண்ட இந்தியா பறிப்பது நமது மரபணுவுக்கு ஏற்புடைய செயல்பாடல்ல.
காலங்காலமாகப் பாய்ந்து கொண்டிருக்கும் நதிகளை, அரசியல் ரீதியாக தேசங்களின் எல்லைக்கோடு வரையறுக்கப்படுவதால் தடுக்கவோ, பிரிக்கவோ முடியாது. சிந்து நதியும் அதன் கிளை நதிகளும் ஏறத்தாழ ஒரு கோடியே 13 லட்சத்து 65 ஆயிரம் ச.கி.மீ. நிலப்பரப்புக்கு தண்ணீர் வழங்குகின்றன. வெள்ள ஓட்ட அடிப்படையில் கணக்கிட்டால், உலகிலுள்ள 21-ஆவது மிகப் பெரிய நதியாக சிந்து நதி திகழ்கிறது. பாகிஸ்தானின் ஜீவ நாளமாக அந்த நதி நூற்றாண்டுகள் கடந்தும்  பாய்ந்து கொண்டிருக்கிறது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பிரிவுபடாத பஞ்சாப் மாநிலத்தின் பாசனத்துக்காகக் கால்வாய் வலைப்பின்னல் உருவாக்கப்பட்டது. பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுடன் இணைந்த மேற்கு பஞ்சாப் பகுதிக்கு பெரும்பாலான கால்வாய்க் கட்டமைப்பு சென்றுவிட்டது. அதே நேரத்தில், இந்தியாவுடன் இருக்கும் கிழக்குப் பஞ்சாப் பகுதியில்தான் அந்தக் கால்வாய்கள் வழியாகத் தொடர்ந்து பாசனத்துக்கான நீர் பாய்வதற்கு வழிகோலும் அணைகள் அமைந்தன. பிரிவினையைத் தொடர்ந்து பாகிஸ்தான் பகுதியிலுள்ள பஞ்சாபி விவசாயிகள் இதனால் கலவரமடைந்தனர். காவிரி நீர்ப் பிரச்னையில் நமது தஞ்சை டெல்டா பகுதி விவசாயிகளின் நிலைமைதான் பாகிஸ்தானிலுள்ள விவசாயிகளின் நிலைமையும்.
உலக வங்கி தலையிட்டு, பல ஆண்டு பேச்சுவார்த்தையின் முடிவில் சிந்து நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் ஏற்பட்டது. சிந்தி நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தின் கீழ், மேற்கே பாயும் நதிகளான சிந்து, சினாப், ஜீலம் மூன்றையும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலும், கிழக்கே பாயும் பியாஸ், ராவி, சட்லெஜ் மூன்றையும் இந்தியாவின் கட்டுப்பாட்டிலும் வைத்துக்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது. 1960-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி அந்த ஒப்பந்தத்தில் அன்றைய இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேருவும், ஒன்றுபட்ட பாகிஸ்தான் அதிபர் அயூப் கானும் கையொப்பமிட்டனர்.
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள சிந்து, சினாப், ஜீலம் ஆகிய மூன்றும் இந்தியா வழியாகப் பாய்ந்து அதன்பின் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதிக்குள் நுழைகின்றன. சில கட்டுப்பாடுகளுடனும், அணைகள், தடுப்பணைகள் கட்டுவது குறித்த நிபந்தனைகளுடனும் அந்த நதிகள் இந்தியப் பகுதியில் பாயும்போது பாசனம், போக்குவரத்து, மின்சக்தி உற்பத்தி ஆகியவற்றுக்காக அவற்றின் நதிநீரைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.
இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பியாஸ், ராவி, சட்லெஜ் மூன்றும் நமது பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் விவசாயத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையும்போது மிகவும் குறைந்த அளவில்தான் இந்த நதிகளில் தண்ணீர் காணப்படுகிறது. தங்களுக்கு இந்த நதிகளின் தண்ணீர் வழங்கப்படுவதில்லை என்று பாகிஸ்தான் இதுவரை குறை கூறியதில்லை. ஆனால், மழைக்காலத்தில் அணைகளின் மதகுகளைத் திறந்துவிடுவதால் தங்கள் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவிடுகிறது என்று குற்றஞ்சாட்டியிருக்கிறது. 
1960-இல் சிந்து நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டதற்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் மூன்று போர்களைச் சந்தித்தன. ஆனால், ஒப்பந்தத்தின் அடிப்படையில் பங்கிடப்படும் நதிநீர், ஒருநாள்கூடத் தடைபட்டதில்லை. சிந்து நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம், புவியியல் ரீதியாக இரண்டு நாடுகளுக்குமே சாதகமாக இருப்பதால் அதன் செயல்பாட்டில் இன்றுவரை எந்தவிதச் சிக்கலோ, பிரச்னையோ இல்லாமல் தொடர்கிறது.
தேர்தல் பிரசாரத்தின்போது ஹரியாணா விவசாயிகளிடம் பிரதமர் தெரிவித்ததுபோல, நாம் ராவி, சட்லெஜ், பியாஸ் நதிகளில் பாயும் நீரை பாகிஸ்தானுக்கு வழங்குகிறோம் என்பது உண்மையல்ல. நமது தேவைக்கு அதிகமான தண்ணீர் மட்டுமே பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்கிறது. ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலங்களின் பாசனத்துக்குப் போதுமான அளவு தண்ணீர் கிடைக்காமல் இருப்பதற்கு சட்லெஜ் - யமுனா இணைப்புக் கால்வாயை பஞ்சாப் மாநிலம் நிறைவேற்ற விடாமல் தடுப்பதுதான் காரணமே தவிர, பாகிஸ்தானுக்கு நதிநீர் வழங்கப்படுவதால் அல்ல. 
பிரதமர் கூறுவதுபோல, எல்லா நதிகளின் தண்ணீரையும் தடுத்து ஒரு சொட்டுத் தண்ணீர்கூட பாகிஸ்தானுக்குத் தராமல் நிறுத்துகிறோம் என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தண்ணீரை நாம் என்ன செய்யப் போகிறோம்? அவற்றைச் சேமித்து வைப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் சாத்தியம்தானா, இருக்கின்றனவா? 
தண்ணீர் என்பது இயற்கை தரும் கொடை. அதை வைத்து அரசியல் செய்வது யாராக இருந்தாலும்  தவறு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com