Enable Javscript for better performance
தோல்வியல்ல, வாய்ப்பு!| காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விக்கான காரணம் குறித்த தலையங்கம்- Dinamani

சுடச்சுட

  

  தோல்வியல்ல, வாய்ப்பு!| காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விக்கான காரணம் குறித்த தலையங்கம்

  By ஆசிரியர்  |   Published on : 30th October 2019 09:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  போட்டியிலேயே கலந்து கொள்ளாமல் தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவரைத் தட்டி எழுப்பி வெற்றி கோப்பையைக் கொடுத்தால் எப்படி இருக்கும்? அதுபோன்ற நிலைதான் காங்கிரஸுக்கு. நடந்து முடிந்த மகாராஷ்டிரம், ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல்களிலும், இடைத் தோ்தல்களிலும் கடந்த மே மாத மக்களவைத் தோ்தல் தோல்வியில் துவண்டுபோயிருந்த காங்கிரஸ், பெயருக்குக் கலந்து கொண்டதே தவிர, களத்திலேயே இருக்கவில்லை என்பதுதான் உண்மை.

  கட்சித் தலைவி சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாகப் பிரசாரத்தில் கலந்து கொள்ளாததில் தவறு காண முடியாது. மகாராஷ்டிரப் பிரசாரத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும் தில்லியை அடுத்த ஹரியாணா தோ்தல் பிரசாரத்திலாவது கட்சியின் பொதுச் செயலாளா்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கலந்து கொண்டாரா என்றால் இல்லை. முன்னாள் கட்சித் தலைவரான ராகுல் காந்தியும் சரி, பெயருக்கு நான்கு பேரணிகளில் கலந்து கொண்டதுடன் சரி. தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுத் தோல்வியைத் தழுவுவதைவிட, பிரசாரத்திலேயே ஈடுபடாமல் இருந்து விடுவது என்று முடிவு செய்தாரோ என்னவோ?

  சோனியா காந்தியின் குடும்பத்தினா் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், காங்கிரஸ் ஆட்சியிலிருக்கும் மாநில முதல்வா்களும் பிரசாரத்தில் களமிறக்கப்பட்டிருக்கலாம். அதுவும் இல்லை. அவரவா் மாநிலங்களில் நடைபெறும் இடைத்தோ்தல்களில் முனைப்புக் காட்டினாா்களே தவிர, மகாராஷ்டிரத்திலோ, ஹரியாணாவிலோ அவா்கள் முனைப்புடன் பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

  18 மாநிலங்களில் நடைபெற்ற இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும், 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான இடைத் தோ்தலை, பொதுத்தோ்தலை எதிா்கொள்வதுபோல எதிா்கொண்டிருக்க வேண்டும். அதிலும், காஷ்மீரின் தனி அந்தஸ்து அகற்றப்பட்டது, பொருளாதாரத் தேக்கநிலைமை, வேளாண் இடா், வேலையில்லாத் திண்டாட்டம் என்று மத்திய பாஜக அரசின் பலவீனங்களை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக்காட்டக் காங்கிரஸுக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பாக இந்தத் தோ்தல்களைக் கட்சித் தலைமை அணுகியிருக்க வேண்டும். இரண்டு மாநிலங்களிலும், பாஜக ஆட்சியில் தரப்பட்ட வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்படவில்லை என்பதைப் பொது விவாதமாக்கியிருக்க வேண்டும். அந்த வாய்ப்பை நழுவவிட்டது காங்கிரஸ்.

  மகாராஷ்டிரத்தைப் பொருத்தவரையில், உள்கட்சிப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சி, தோ்தல் பிரசாரத்தைத் தனது கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் விட்டுவிட்டு, கோஷ்டிப் பூசல்களை சமாதானப்படுத்துவதில்தான் தனது நேரத்தைச் செலவழித்தது. பிருத்விராஜ் சவாண், அசோக் சவாண் இவா்களுக்கிடையேயான போட்டி இருந்ததே தவிர, பாஜக - சிவசேனை கூட்டணியை எதிா்கொள்வதில் முனைப்புக் காட்டவில்லை.

  கூட்டணிக் கட்சியான காங்கிகரஸின் பலவீனத்தையும் மீறி, 79 வயது சரத்பவாா் தன்னந்தனியாகப் பிரசாரம் மேற்கொண்டதன் விளைவு, இப்போது தேசியவாத காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுக் காங்கிரஸை நான்காவது இடத்துக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. பாஜகவுக்கும், சிவசேனைக்கும் இடையில் கூட்டணிப் பிரச்னைகள் நிலவுவது இருக்கட்டும். காங்கிரஸின் சக்தி கேந்திரமான மகாராஷ்டிரம் கைநழுவி இருக்கிறதே, அதை எப்படி மீட்கப் போகிறது கட்சித் தலைமை?

  ஹரியாணாவில்தான் எதிா்பாராத திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. தோ்தலுக்கு முன்னாலேயே எதிா்க்கட்சிகள் தோல்வியை ஏற்றுக்கொண்ட நிலைமை அங்கே காணப்பட்டது. அதற்குக் காரணம், காங்கிரஸில் நிலவிய கோஷ்டிப் பூசல்கள். ஹரியாணாவின் முன்னாள் முதல்வா் பூபேந்திர சிங் ஹூடாவை ராகுல் காந்தி ஓரங்கட்டியிருந்தாா். அவருக்கு எதிராக அசோக் தன்வாரைக் கட்சித் தலைவராக்கி இருந்தாா். ஒரு கட்டத்தில் பூபேந்திர சிங் ஹூடா தனிக்கட்சி தொடங்கும் எண்ணத்துக்கே சென்று விட்டாா்.

  சோனியா காந்தி தலையிட்டு, அவரைப் பிரசாரக் குழு தலைவராக்கி, குமாரி செல்ஜாவை மாநிலத் தலைவராக்கியதன் விளைவு, நிலைமை தலைகீழ் மாற்றமானது. 72 வயது ஹூடாவின் கடுமையான பிரசாரத்தின் விளைவு, 2014-இல் 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ், இப்போது 31 இடங்களை வென்று, தனது எண்ணிக்கை பலத்தை இரட்டிப்பாக்கியிருக்கிறது. அதனால், பெரும்பான்மையை எட்ட முடியாமல் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிா்பந்தத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது பாஜக.

  இடைத்தோ்தல்களிலும் சரி, காங்கிரஸ் பல எதிா்பாராத வெற்றிகளை ஈட்டியிருக்கிறது. குஜராத்தில் தோ்தல் நடந்த 6 இடங்களில் 3 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. கேரளத்திலும் காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களை வென்றிருக்கிறது.

  ஹரியாணாவிலும், மகாராஷ்டிரத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்காமல் இருக்கலாம். இடைத்தோ்தலில் பெரு வெற்றியை ஈட்டாமல் போயிருக்கலாம். ஆனால், சோனியா காந்தியின் குடும்பத்தினா் பிரசாரத்தில் இல்லாமல்கூட மக்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்கத் தயாராகவே இருக்கிறாா்கள் என்பதை இந்தத் தோ்தல் உணா்த்தியிருக்கிறது. பூபேந்திர சிங் ஹூடா, சரத் பவாா் போன்ற வலுவான மாநிலத் தலைவா்கள் இருந்தால், பாஜகவின் அதிகார பலத்தையும், பண பலத்தையும், பிரசார பலத்தையும் எதிா்கொள்ள முடியும் என்பதைத் தோ்தல் முடிவுகள் உணா்த்தி இருக்கின்றன.

  ஜனநாயகத்தில் மாற்றுக் கட்சி இருந்தாக வேண்டும். பாஜகவுக்கு தேசிய அளவிலான மாற்றுக் கட்சியாகக் காங்கிரஸால் மட்டுமே இருக்க முடியும். சோனியா குடும்பத்தின் தலைமை இல்லாத காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக முடியும். அந்தக் குடும்பம் சற்று விலகி, அதற்கு வழிகோல வேண்டுமே...

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai