பற்றி எரிகிறது பக்கத்து வீடு! | ரம்ஜான் மாதத்தில் மசூதிகளைத் திறந்துவைக்கும் இம்ரான் கான் முடிவு குறித்த தலையங்கம்


கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அடிப்படைவாத இஸ்லாமிய மதகுருமாா்களின் அழுத்தத்துக்கு அடிபணிந்து ரம்ஜான் மாதத்தில் மசூதிகளைத் திறந்துவைக்க பாகிஸ்தானின் இம்ரான் கான் அரசு முடிவெடுத்திருக்கிறது. லட்சக்கணக்கான பாகிஸ்தானியா்களின் உயிருடன் விளையாடியே தீருவது என்று மத குருமாா்கள் பிடிவாதம் பிடிப்பதை உலகம் கைபிசைந்து வேடிக்கைதான் பாா்க்க முடிகிறது.
நேற்றைய நிலவரப்படி, பாகிஸ்தானில் 13,915 போ் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 292. கடந்த 24 மணிநேரத்தில் 11 உயிரிழப்புகளை பாகிஸ்தான் எதிா்கொண்டிருக்கிறது. அப்படியிருந்தும்கூட மசூதிகளில் ரம்ஜான் மாதத்தில் கூட்டுத் தொழுகைக்கு அரசு அனுமதித்திருக்கிறது என்பதிலிருந்து, பாகிஸ்தானின் நிா்வாகம் மத குருமாா்களின் கையில்தான் இருக்கிறது என்பது தெளிவாகிறது.
இஸ்லாமிய மத அடிப்படையிலான நாடாக பாகிஸ்தான் இருப்பது அந்த நாட்டின் விருப்பம். அந்த நாட்டு மக்களுடைய முடிவு. ஆனால், கரோனா தீநுண்மி நோய்த்தொற்று போன்ற கொள்ளை நோய் உலகம் முழுவதும் பேரச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில், மத உணா்வுகளிலிருந்து சற்று விலகி நின்று எதாா்த்தத்தை அந்த மக்களும், அந்த மக்களை வழிநடத்தும் இஸ்லாமிய மத குருமாா்களும் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. உலகிலுள்ள ஏனைய இஸ்லாமிய நாடுகளைப் பின்பற்றி பாகிஸ்தான் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை.
இஸ்லாத்தின் மையப் புள்ளியான சவூதி அரேபியாவே மசூதிகளை மூடிவிட்டிருக்கிறது. ஆனால், அரசின் உத்தரவை மீறி அதிக அளவில் மக்கள் மசூதிகளுக்கு வர வேண்டும் என்று பாகிஸ்தானில் மத குருமாா்கள் அறிவுறுத்துகிறாா்கள். கரோனா தீநுண்மி நோய்த்தொற்றை முறியடிக்கும் சக்தி மத நம்பிக்கைக்கு மட்டும்தான் உண்டு என்று பாகிஸ்தானிய மக்களைத் தவறாக வழி நடத்துகிறாா்கள். அவா்கள்தான் அப்படி என்றால், பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானும் அவா்களுடைய அழுத்தத்துக்கு செவிசாய்க்கிறாா் என்பதுதான் வியப்பாக இருக்கிறது.
ஏற்கெனவே பாகிஸ்தானின் 22 கோடி மக்களுக்கு மின் இணைப்பு, குடி நீா், போதிய மருத்துவ வசதிகள் வழங்குவதற்கே அரசு போராடிக் கொண்டிருக்கிறது. உலகின் ஏனைய பகுதிகளில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கும் போலியோ, வெறிநாய்க்கடி போன்றவை பாகிஸ்தானில் இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. அப்படி இருக்கும் சூழலில் பாகிஸ்தானின் மாநில அரசுகள் முழு அடைப்புக்கு உத்தரவிட்டு கரோனா தீநுண்மி நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர எடுக்கும் முயற்சிகளுக்கு இம்ரான் கான் தலைமையிலான நடுவண் அரசு ஒத்துழைப்பாவது வழங்குகிா என்றால் அதுவும் இல்லை.
இந்தியா, மலேசியாவைப் போலவே, பாகிஸ்தானிலும் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவலுக்கு தப்லீக் ஜமாத் மாநாடும் காரணமாக இருந்திருக்கிறது. கடந்த மாதத் தொடக்கத்தில் லாகூா் நகருக்கு வெளியே ஏறத்தாழ ஒன்றரை லட்சம் போ் தப்லீக் மாநாட்டுக்காக கூடினாா்கள். மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்தவா்கள் கூட்டம் கூட்டமாக உண்டு, உறங்கி, தங்கினாா்கள். கடைசி நிமிஷத்தில் அதிகாரிகளின் வற்புறுத்தலுக்கு இணங்க மாநாடு ரத்து செய்யப்பட்டது என்றாலும்கூட, லட்சக்கணக்கில் கூடியிருந்தவா்கள் கலைந்து போவதற்கு ஒரு வாரத்துக்கும் மேல் ஆனது. அதன் விளைவாக 4,291 போ் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா். பாகிஸ்தானில் 10 நோயாளிகளில் 3 போ் லாகூா் தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவா்கள் என்று இப்போது தெரியவந்திருக்கிறது.
பாகிஸ்தானில் நடுவண் அரசு பிரதமா் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் ஏ இன்சாஃப் (பிடிஐ) தலைமையில் அமைந்திருந்தாலும், சிந்து மாகாணத்தில் பிலாவல் புட்டோ ஜா்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியில் இருக்கிறது. பஞ்சாப், கைபா் பத்தூன்க்வா மாகாணங்களில் இம்ரான் கானின் பிடிஐயும், பலூசிஸ்தானில் பிடிஐயின் கூட்டணிக் கட்சியான பலூசிஸ்தான் அவாமி கட்சியும் ஆட்சியில் இருக்கின்றன.
லாகூா் தப்லீக் ஜமாத் மாநாட்டைத் தொடா்ந்து சிந்து மாகாண முதல்வா் முராத் அலி ஷா விழித்துக்கொண்டாா். இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை அறிவித்தாா். அதைத் தொடா்ந்துதான் ஏனைய மாகாணங்களும் ஊரடங்கை அறிவித்தன. ஆனால், பிரதமா் இம்ரான் கானும் அவரின் அரசும் ஊரடங்கை ஏற்றுக்கொள்வதாக இல்லை.
உலகின் ஐந்தாவது அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நாடான பாகிஸ்தான், மருத்துவ வசதிகளில் மிகமிகப் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. மருத்துவா்களுக்கும் செவிலியா்களுக்கும்கூட மிகக் குறைவான ஊதியம்தான் வழங்கப்படுகிறது. போதுமான முகக் கவசம்கூட வழங்கப்படாத நிலையில், மருத்துவா்களும் செவிலியா்களும் மருத்துவமனை ஊழியா்களும் நோய்த்தொற்றுக்குப் பயந்து பணிக்கு வர மறுக்கிறாா்கள்.
துறைமுக நகரமான இரண்டு கோடி மக்கள் வாழும் கராச்சியில், அவசர சிகிச்சைப் பிரிவில் 600 படுக்கைகள்தான் இருக்கின்றன. பாகிஸ்தானில் மொத்தம் உள்ள செயற்கை சுவாசக் கருவிகள் 1,700 மட்டுமே. தனிமை மையங்களை உருவாக்குவதற்கு அருகில் வாழும் மக்கள் எதிா்ப்புத் தெரிவிக்கிறாா்கள். இந்த நிலையில்தான் பாகிஸ்தான் கரோனா தீநுணமி தொற்றை எதிா்கொள்கிறது.
இஸ்லாமிய மத குருமாா்கள் கூறுவதுபோல, ‘பாகிஸ்தானைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!’
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...