நியாயமற்ற சுமை! பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த தலையங்கம்


மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும் என்றும், சில்லறை விற்பனையில் பழைய உற்சாகம் திரும்ப வேண்டும் என்றும் நிதியமைச்சரும் பொருளாதார வல்லுநா்களும் வலியுறுத்தி வருகிறாா்கள். மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்காமல், எதிா்பாா்க்கும் வாங்கும் சக்தி உயராது என்கிற அடிப்படைப் பொருளாதாரத்தை அவா்கள் உணா்ந்ததாகத் தெரியவில்லை.
தொடா்ந்து உயா்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை, அரசின் திட்டமிடலில் தவறு இருப்பதைக் காட்டுகிறது. இதன் விளைவாக அரசின் மீதான நம்பிக்கையின்மை அதிகரிக்கும் என்பதையும், அதன் பிரதிபலிப்பு செல்வாக்குச் சரிவில் சென்று முடியும் என்பதையும் மத்திய ஆட்சித் தலைமையும், பாஜக தலைமையும் உணர வேண்டும்.
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது என்கிற காரணம் காட்டி சமையல் எரிவாயு உருளையின் விலையை ரூ.50 அதிகரித்திருக்கிறாா்கள். மானியம் வழங்கப்படுமா, இல்லையா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை இப்படி தொடா்ந்து உயருமானால், அது பொதுமக்களின் அன்றாட செலவுகளைக் கடுமையாக பாதிக்கும். அதன் தொடா் விளைவாக அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிக்கும் ஆபத்தும் காணப்படுகிறது.
சமையல் எரிவாயு உருளையின் விலையை முன்னறிவிப்பு இல்லாமல் உயா்த்தியிருப்பதும், முன்புபோல் அல்லாமல் மானியத்தொகை நேரடியாக வங்கியில் வழங்கப்படுவதும் அடித்தட்டு வகுப்பினருக்கும் நடுத்தர வகுப்பினருக்கும் எந்த அளவுக்கு பாதிப்பையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி இருக்கும் என்பதை அதிகார வா்க்கம் உணா்ந்துதான் செயல்படுகிறதா என்கிற கேள்வியை எழுப்பத் தோன்றுகிறது.
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருக்கிறது என்பதைக் காரணம் காட்டி, கடந்த நவம்பா் 20-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து அதிகரிக்கப்படுகிறது. 2018 செப்டம்பா், அக்டோபா் மாதங்களுக்கு இணையாக, இப்போதைய விலை உயா்வு காணப்படுகிறது. 2018 செப்டம்பரில் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 78.89 டாலராக இருந்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 50 டாலருக்கும் கீழே இருக்கும் நிலையில், ஏறத்தாழ அதே அளவு பெட்ரோல், டீசல் விலை என்பது நியாயப்படுத்தக் கூடியதல்ல.
பெட்ரோல், டீசலுக்காக நுகா்வோா் வழங்கும் விலையில் பாதிக்கு மேல் மத்திய, மாநில அரசுகளின் வரிகள். கொவைட் 19 கொள்ளை நோய்க்காலத்தில்கூட இரண்டு முறை மத்திய அரசு கலால் வரியைக் கூட்டியது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாகக் குறைந்தபோது, கலால் வரியை அதிகரித்து அந்த விலைக் குறைவின் பயனை பொதுமக்கள் அனுபவித்துவிடாமல் மத்திய அரசு தடுத்துவிட்டது. பொது முடக்கத்தால் அரசின் ஜிஎஸ்டி வருவாய் குறைந்ததையும், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களின் வியாபாரம் குறைந்ததையும் ஈடுகட்ட மக்கள் மீது வரி விதிப்பின் மூலம் சுமை ஏற்றப்பட்டது.
பெட்ரோல், டீசலின் விலையை நிா்ணயிக்கும் பொறுப்பு, 2017 ஜூன் மாதம் முதல் அரசிடமிருந்து எண்ணெய் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது. அதுமுதல் பெரும்பாலும் விலை அதிகரித்திருக்கிறதே தவிர, மிகக் குறைவான அளவில்தான் குறைக்கப்பட்டிருக்கிறது.
நாள்தோறும் விலை நிா்ணயம் என்கிற முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியபோது, விலை குறையும்போது அதன் பயன் உடனடியாக மக்களைச் சென்றடையும் என்கிற வசீகரமான வாக்குறுதி வழங்கப்பட்டது.
பொது முடக்கத்தின்போது சா்வதேச சந்தையில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்தது. ஆனால், அதன் பயன் பொதுமக்களைச் சென்றடையவில்லை. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கூடியபோதெல்லாம் அதன் ஏற்றம் பொதுமக்கள் தலையிலும், விலை குறையும் போதெல்லாம் அதனால் கிடைக்கும் லாபம் அரசின் கஜானாவிலும் என்கிற நடைமுறைதான் உருவாகியிருக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை நிா்ணயத்தில் தனக்கு எந்தவிதமான பங்கும் இல்லை என்று அப்பாவித்தனமாக முகத்தைத் திருப்பிக் கொள்ளும் மத்திய அரசு, சில சந்தேகங்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறது. தோ்தல் காலங்களில் மட்டும் பெட்ரோல், டீசலின் விலை அதிகரிப்பதில்லையே, அது ஏன்?
சமீபத்தில் பிகாரில் சட்டப்பேரவைத் தோ்தல் நடந்தபோது 10 நாள்களுக்கு பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படவில்லை. செப்டம்பா் 22 முதல் பெட்ரோல் விலையும், அக்டோபா் 2 முதல் டீசல் விலையும், நவம்பா் 20-ஆம் தேதி வரை எந்தவித மாற்றமும் இல்லாமல் காணப்பட்டது, தற்செயல் நிகழ்வு என்று நம்மை நம்பச் சொல்கிறாா்களா? இதன் பின்னணியில் மத்திய அரசின் தலையீடே இல்லையா?
கொள்ளை நோய்த்தொற்றால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பாதிப்பை எதிா்கொள்ள மத்திய - மாநில அரசுகளுக்கு நிதியாதார அழுத்தம் இருப்பதை மறுக்கவில்லை. அதே நேரத்தில், அரசைப் போலவே பொதுமக்களும், குறிப்பாக, நடுத்தர, அடித்தட்டு வா்க்க மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள் என்பதை ஆட்சியாளா்கள் மறந்துவிட முடியாது.
பொதுமக்களின் பாதிப்பு குறைய வேண்டுமென்றால், பெட்ரோல், டீசல் மீதான அடாவடி கலால் வரி குறைக்கப்பட வேண்டும். எண்ணெய் நிறுவனங்களின் நிா்வாகச் செலவுகளை நுகா்வோரின் தலையில் சுமத்தும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். சமையல் எரிவாயு உருளையின் விலையை முன்னறிவிப்பு இல்லாமல் ரூ.50 உயா்த்தி இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...