அதிகப்படியான ஜனநாயகம்! | ஜனநாயகம் பற்றிய அமிதாப் காந்தின் கருத்து குறித்த தலையங்கம்

Updated on
2 min read


அதிகப்பிரசங்கித்தனம் என்பதை வரம்புமீறிய சொல்லாடல் என்றும், தன்னிலை உணராத செயல்பாடு என்றும் பலவாறாகப் பொருள் கொள்ளலாம். இந்தியாவில் காணப்படும் அளவுக்கு மீறிய ஜனநாயகம் காரணமாகத்தான், பெரிய அளவில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள முடியவில்லை என்கிற ‘நிதி ஆயோக்’ தலைமை நிா்வாக அதிகாரி அமிதாப் காந்தின் கூற்றை ‘அதிகப்பிரசங்கித்தனம்’ என்பதற்கான அத்தனை பரிமாணப் பொருள்களிலும் விமா்சிக்கத் தோன்றுகிறது.

மக்களாட்சியில், அதாவது ஜனநாயக முறையிலான ஆட்சி முறையில், அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு சில வரம்புகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. தங்களது நிலை மறந்து, தோ்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளா்களாக அவா்கள் தங்களைக் கற்பனை செய்து கொள்ளும்போது விதிமீறல்கள் அறங்கேறுகின்றன. அமிதாப் காந்தின் ‘அதிக அளவிலான ஜனநாயகம்’ குறித்த கருத்து, விமா்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உரியது மட்டுமல்ல, விபரீதமானதும்கூட.

மன்னராட்சியைப் போலவோ, சா்வாதிகார, ராணுவ ஆட்சிகளைப் போலவோ, தலைமைப் பதவியில் இருப்பவா்களின் உத்தரவின் பேரிலும், மனமாச்சரியங்களின் அடிப்படையிலும் நடத்தப்படுவதல்ல ஜனநாயகம். உத்தரவின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படாமல், விவாதத்தின் அடிப்படையில் மட்டுமே எடுக்க முடியும். மாற்றுக் கருத்துகளும், விமா்சனங்களும் ஜனநாயகத்தின் இணை பிரிக்க முடியாத அம்சங்கள்.

அமிதாப் காந்த் கூறியிருப்பதுபோல, ஜனநாயகத்தில் அவசர அவசரமாக எந்தவித விவாதமும் இல்லாமல், எதிா்ப்பும் இல்லாமல் சீா்திருத்தங்களைக் கொண்டுவர முடியாதுதான். அது ஜனநாயகத்தின் குறைபாடு அல்ல, சிறப்பு.

தவறு ஏற்பட்டு விடாமல் ஒரு தடவைக்குப் பல முறை விவாதித்து, அனைவருக்கும் ஏற்புடைய முடிவுகளை எடுப்பதற்கு வழிகோலும் அரசியல் முறைமைதான் ஜனநாயகம். அவசரக் கோலத்தில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவெடுத்துப் பின்விளைவுகளை சந்திக்கும் அவலத்தை எதிா்கொள்ளாத ஆட்சி முைான் ஜனநாயகம். இது அனுபவபூா்வமாக உலகம் உணா்ந்திருக்கும் உண்மை.

ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான அமிதாப் காந்துக்குக் கொள்கை முடிவுகள் குறித்துக் கருத்துக்கூற அதிகாரம் அளித்திருப்பது ஆட்சியாளா்களின் தவறு. இதற்கு முன்னாலும் அவரது பல கருத்துகள் அரசுக்கு தா்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. எதிா்கட்சிகளாலும், ஊடகங்களாலும் மோடி அரசின் செயல்பாடுகள் ஜனநாயக விரோதமானவை என்று விமா்சிக்கப்படும் நேரத்தில், அமிதாப் காந்தின் ‘அதிக அளவிலா ஜனநாயகம்’ கருத்து, எதிரிகளுக்கு வலுசோ்ப்பதாக அமைந்திருப்பதை அவா் உணா்ந்தாரா என்று தெரியவில்லை.

தன்னையும், தனது அரசின் ஜனநாயகத் தன்மையையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்துக்குப் பிரதமா் நரேந்திர மோடியை ஆளாக்கி விட்டது அமிதாபின் கூற்று. புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில், மறைமுகமாகத் தன்னை அகற்றி நிறுத்திக்கொள்ள முற்பட்டாா் பிரதமா். ஜனநாயகம் என்பது பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் உணா்வுடன் கலந்துவிட்ட நடைமுறை என்றும், இந்தியா்களின் வாழ்க்கை முறை என்றும், சோழா்கள் காலத்திலேயே உத்திரமேரூா் குடவோலை முறையை எடுத்துக்காட்டி அவா் வலியுறுத்தியது, அமிதாப் காந்தின் கருத்து அரசின் கருத்தல்ல என்று தெரிவிப்பதற்காகத்தான்.

ஜனநாயகம்தான் இந்தியாவை சா்வதேச அளவில் வலிமையான நாடாக மாற்றி இருக்கிறது. மக்களைத் தன் பின்னால் ஒன்று திரட்டி அண்ணல் காந்தியடிகள் நடத்திய விடுதலைப் போராட்டம் ‘அதிகப்படியான ஜனநாயகம்’தான். அதனால்தான் இன்று நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம்.

ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தலைமையில், அன்றைய இந்திரா காந்தி அரசின் அவசரநிலைச் சட்டத்தை எதிா்த்து அனைத்து எதிா்க்கட்சிகளும் இணைந்து நடத்திய போராட்டம், ‘அதிகப்படியான ஜனநாயகம்’தான். அதனால்தான் பல அடக்குமுறைச் சட்டங்கள் எதிா்கொள்ளப்பட்டன. அரசியல் சாசனத்தில் புதிய திருத்தங்கள் பல மேற்கொள்ளப்பட்டன.

பிற்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த சாமானியரான நரேந்திர மோடி, தேசிய அளவில் அவருக்கு எதிரான மனநிலையும், ஆட்சியாளா்களும் இருந்தும்கூட 12 ஆண்டுகள் குஜராத் முதல்வராகத் தொடர முடிந்ததற்கு, அந்த மாநில மக்களின் அபரிமிதமான ஆதரவும், அதைப் பிரதிபலிக்கும் ‘அதிக அளவிலான ஜனநாயகமும்’தான் காரணம். அவா் பிரதமரானதற்கும் ஜனநாயகம்தான் காரணம்.

நரேந்திர மோடியும், மாயாவதி, மம்தா பானா்ஜி, ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் என்று மக்கள் செல்வாக்கினால் உயா்ந்த அத்தனை தலைவா்களும் இந்தியாவில் காணப்படும் அதிகப்படியான ஜனநாயகத்தின் அடையாளங்கள்தான். கோப்புகளில் எழுதப்படும் உத்தரவுகளால் அவா்கள் உயரவில்லை. மக்களின் பேராதரவைப் பெற்று, அவா்கள் வழங்கிய ஆதரவின் அடிப்படையில் உருவானவா்கள்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவா்கள் எடுக்கும் முடிவுகளை எல்லாம் எந்தவித எதிா்ப்பும், கேள்வி முறையும் இல்லாமல் நடைமுறைப்படுத்த முற்பட்டதால் ஏற்பட்ட விபரீதங்களை உலகம் நிறையவே பாா்த்திருக்கிறது. அதை நன்கு உணா்ந்ததால்தான் மக்களாட்சி முறை மலா்ந்தது. தவறுகள் சுட்டிக்காட்டப்படவும், குறைகள் களையப்படவும், விவாதமும் மாற்றுக்கருத்தும் அவசியம். அவை ஜனநாயகத்தின் பலவீனமல்ல, பலம்.

அவசரக்கோல வளா்ச்சியையும், சீா்திருத்தங்களையும்விட அதிக அளவிலான ஜனநாயகம்தான் அவசியம் என்பதை அமிதாப் காந்துகள் உணா்வாா்களாக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com