வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கைக்கு எட்டியும்... | வங்கி கடன் மோசடி பற்றிய தலையங்கம்

News image
Updated On :6 ஜூலை 2021, 1:42 am

ஆசிரியர்

 வங்கிகளிலிருந்து கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.9,000 கோடி சொத்துகளை அவர்கள் கடன் பெற்ற பொதுத்துறை வங்கிகளின் பெயருக்கு மாற்றிக் கொடுத்திருக்கிறது அமலாக்கத் துறை. அவர்கள் வங்கிகளிலிருந்து கடன் பெற்று மோசடி செய்திருக்கும் தொகை ரூ.22,584. 83 கோடி. இப்போது பொதுத்துறை வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் அவர்களின் சொத்து மதிப்பு ரூ.9,041.50 கோடி. அதாவது, அவர்கள் மோசடி செய்திருக்கும் பணத்தில் 40%.
 கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா (ரூ.9,000 கோடி), வைர வியாபாரிகளான நீரவ் மோடியும், அவரது உறவினர் மெஹுல் சோக்ஸியும் (ரூ.13,000 கோடி) என பொதுத்துறை வங்கிகளுக்கு மொத்தம் ரூ.22,000 கோடி அளவில் இழப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர். அவர்கள் மூவர் மீதும் கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களுக்கு சொந்தமான ரூ.18,170 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டிருக்கின்றன. வங்கிக்கு அவர்கள் செலுத்த வேண்டிய அசல் தொகையில் 80.45% அளவிலான சொத்துகளை அமலாக்கத் துறை கைப்பற்றியிருக்கிறது என்பது ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கிறது.
 பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரிகள் நீரவ் மோடியும் அவருடைய உறவினர் மெஹுல் சோக்ஸியும் இன்னும்கூட இந்திய அதிகாரிகளின் பிடியில் சிக்காமல் வெளிநாடுகளில் வசித்து வருகிறார்கள். லண்டன் நீதிமன்றம் நீரவ் மோடிக்கு பிணை வழங்க மறுத்துவிட்டது. அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். விரைவிலேயே அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.
 நீரவ் மோடி பிரிட்டனில் தஞ்சமடைந்தார் என்றால் அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவாவில் குடியேறினார். இப்போது அவர் ஆன்டிகுவாவிலிருந்து அண்டை நாடான டொமினிக்காவுக்கு மே 23-ஆம் தேதி தனது தோழியுடன் சட்ட விரோதமாக நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அதைப் பயன்படுத்தி அவரை இந்தியாவில் வழக்கை எதிர்கொள்வதற்காக கைது செய்து அழைத்து வரும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது.
 ஆன்டிகுவா அரசின் குடியுரிமை சட்டத்தின் அடிப்படையில் அந்த நாட்டில் குடியேறியிருக்கும் மெஹுல் சோக்ஸி, தனது தோழியுடன் கியூபா போவதற்காக டொமினிக்கா வந்தபோது பிடிபட்டிருக்கிறார். இல்லையென்றால் இந்த வாய்ப்பு கிடைத்திருக்குமா என்பதே சந்தேகம்தான்.
 டொமினிக்காவைப் பொருத்தவரை அவர் மீதான வழக்கு குடியுரிமை சார்ந்ததல்ல. சட்ட விரோதமாக அந்த நாட்டுக்குள் நுழைந்ததுதான் குற்றம். மெஹுல் சோக்ஸி தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என்று அவருக்கு எதிராக சர்வதேச இன்டர்போல் தேடுதல் இருக்கிறது என்பதும் இந்திய அரசால் டொமினிக்கா நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
 டொமினிக்கா உயர்நீதிமன்றம் சோக்ஸியின் வழக்கு விசாரணையை ஒத்திப்போட்டிருக்கிறது. டொமினிக்கா கீழமை நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்க மறுத்திருக்கிறது. டொமினிக்காவுடன் இந்தியாவுக்கு நாடு கடத்தல் ஒப்பந்தம் இல்லாத நிலையில் அந்த நாட்டு நீதிமன்றத்தால் எப்படி முடிவெடுக்க முடியும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
 இந்தியாவிலிருந்து தப்பியோடிய குற்றவாளிகளை சட்டரீதியாக கைது செய்து கொண்டு வருவதில் பல தடைகள் காணப்படுகின்றன. மீட்டுக் கொண்டு வருவதற்கான சட்ட வழிமுறைகளில் காணப்படும் ஓட்டைகளைப் பயன்படுத்தி விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி உள்ளிட்ட பல பொருளாதாரக் குற்றவாளிகள் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழும் அவலம் தொடர்கிறது.
 தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் 2018-இல் இயற்றப்பட்டது. இந்திய நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்கு வெளியே தப்பியோடி, தங்கள் மீதான வழக்குகளைக் கேள்விக்குறியாக்கும் நபர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டதுதான் அந்தச் சட்டம். இந்தியாவில் வழக்கை எதிர்கொள்ளாமல் இருப்பதற்காக வெளிநாடுகளுக்குத் தப்பியோடுவது, வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு திரும்பி வராமல் இருப்பது இரண்டுமே இந்தச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது.
 வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தகவல்படி, 47 நாடுகளுடன் நாடு கடத்தல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 11 நாடுகளுடன் இந்தியாவுக்கு நாடு கடத்தல் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்கிறது. நாடு கடத்தல் ஒப்பந்தத்தின்படி, ஒரு நாட்டிலிருந்து வழக்கைச் சந்திக்காமல் தப்பியோடி வந்தவர்களை கைது செய்து ஒப்படைப்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் அதற்கான நடைமுறைகள் கடினமானவை. நீதிமன்ற ஒப்புதலுக்கு உள்பட்டவை.
 அது விஜய் மல்லையாவானாலும், நீரவ் மோடி - மெஹுல் சோக்ஸியானாலும் அவர்கள் சர்வதேச சட்ட அமைப்புகளைக் கேலிக்குள்ளாக்குகிறார்கள். சர்வதேச நீதி பரிபாலன அமைப்புகளும், நாடுகளும் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தருகின்றன என்பதைப் பொருத்துதான் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகளை நாடு கடத்திக் கொண்டு வர முடியும்.
 உலகில் சட்டத்தின் ஆட்சி நிலவ வேண்டுமானால், தப்பியோடிய குற்றவாளிகளுக்கு எந்த நாட்டிலும் பாதுகாப்பான அடைக்கலம் இல்லாமல் இருப்பது உறுதிப்பட வேண்டும். அதற்காக சர்வதேசச் சட்டம் இயற்றப்பட்டு, நாடு கடத்தும் ஒப்பந்தங்களுக்கு தேவையில்லாத நிலை உருவாக வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.