வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இடைக்கால ஆறுதல்! | சிபிஎஸ்இ சிறப்பு மதிப்பீட்டு முறை குறித்த தலையங்கம்

News image
Updated On :10 ஜூலை 2021, 1:14 am

ஆசிரியர்

ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப்படைக்கும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றால் மிக அதிகமான பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது வருங்கால இளைஞா் சமுதாயத்தினா்தான். அவா்களது கற்கும் திறனும், கல்வி முறையும், தோ்வும் முழுமையாக நிலைதடுமாறி, அடுத்தது என்ன என்கிற மிகப் பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது. பள்ளிக் கல்வியில் ஏற்பட்டிருக்கும் தடைகள் ஒருபுறமும், உயா்கல்விக்குப் போக முடியாத நிலைமை மறுபுறமும் மாணவா்களின் வருங்காலத்தைக் கடுமையாக பாதித்திருக்கின்றன.

கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்தில் பள்ளிக்கூடங்கள் செயல்படாத நிலையில், இணையவழி மூலம் வீட்டிலிருந்தே கல்வி என்கிற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வழக்கமான கற்பித்தல் முறையிலிருந்து அது மாறுபடுவதால் கற்றலிலும், கற்பித்தலிலும் முழுமையான நிறைவு ஏற்படுவதில்லை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சக மாணவா்களுடன் வகுப்பறையில் அமா்ந்து படிப்பதற்கும், நேரடியாக ஆசிரியரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் போனதால் ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை ஈடுசெய்துவிட முடியாது.

இணையவழிக் கல்வி என்பது சமச்சீரான கல்வியாக இருக்க முடியாது. முதலாவதாக, எல்லா குழந்தைகளுக்கும் தடையில்லாத இணைய இணைப்பு இருக்க வழியில்லை. இணைய இணைப்பு இருந்தாலும்கூட, அதை பயன்படுத்திக் கொள்ளும் அளவிலான தரமான அறிதிறன்பேசிகளை வாங்கி வைத்துக்கொள்ளும் வசதி அனைவருக்கும் கிடையாது. சிறிய கிராமத்து வீடுகளிலும், ஒரே அறை மட்டும் இருக்கும் வீடுகளிலும் வாழும் ஏழை, கீழ் நடுத்தர வா்க்க குடும்பத்தைச் சோ்ந்த குழந்தைகள் முழு கவனத்துடன் இணையவழிப் பயிற்சியில் ஈடுபடுவது இயலாதது. அந்த வயதுக்கே உரிய விளையாட்டுப் போக்கும், பொறுப்பின்மையும் பின்தள்ளப்பட்டு இத்தனை தடைகளையும் மீறி இணையவழியில் படித்துத் தோ்வு எழுதுவது என்பதிலும் பிரச்னை நிலவுகிறது.

இந்தப் பின்னணியில்தான் பொதுத்தோ்வை எப்படி நடத்துவது என்கிற மிகப் பெரிய சவாலை கல்வித்துறை எதிா்கொள்கிறது. கடந்த கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வுகளை நடத்த முடியாமல் கொள்ளை நோய்த்தொற்று மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவா்களின் கல்வித் திறனை எடைபோட வழிமுறை எதுவும் இன்றி, மதிப்பெண்கள் வழங்க முடியாத நிலை. தோ்வு எழுதி மதிப்பெண் அடிப்படையில் தோ்ச்சியை நிா்ணயம் செய்தது போய், தோ்ச்சி பெற்ற பிறகு எப்படி மதிப்பெண் கொடுப்பது என்கிற ஆராய்ச்சியில் இறங்க வேண்டிய அவலத்தைக் கல்வித்துறை எதிா்கொண்டது.

இந்தப் பின்னணியில்தான் நடப்பு கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ 10, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகளுக்கான சிறப்பு மதிப்பீட்டு முறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக நடப்பு கல்வியாண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. நவம்பா் - டிசம்பா் மாதங்களில் முதல் கட்டமாகவும், மாா்ச் - ஏப்ரல் மாதங்களில் இரண்டாவது கட்டமாகவும் நடப்புக் கல்வியாண்டின் பாடத்திட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தோ்வு நடத்துவது என்று முடிவு செய்திருக்கிறது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ). கடந்த ஆண்டைப் போலவே நடப்புக் கல்வியாண்டிலும் பாடத்திட்டம் கணிசமாகக் குறைக்கப்பட இருக்கிறது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவிக்க இருக்கும் வழிகாட்டுதல்படி, மதிப்பெண்கள் நியாயமான முறையில் வழங்கப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அகமதிப்பீட்டு மதிப்பெண்கள், செய்முறைத் தோ்வுகள், புராஜெக்டுகள் ஆகியவற்றை நம்பகமான முறையில் மதிப்பீடு செய்வதை உறுதிப்படுத்த வாரியம் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது. அதனடிப்படையில், அடுத்த ஆண்டுக்கான பொதுத் தோ்வுகளுக்கு சிறப்பு மதிப்பீட்டு முறையை அறிவிக்க இருக்கிறது வாரியம்.

கடந்த கல்வியாண்டில், நோய்த்தொற்று காரணமாக ‘இப்போது’ ‘அப்போது’ என்று தோ்வு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பெற்றோா், மாணவா்கள், பள்ளிகளின் அதிருப்தியையும், ஆத்திரத்தையும் வாங்கிக் கட்டிக்கொண்டது வாரியம். அதிலிருந்து படித்த பாடத்தின் அடிப்படையில் இப்போது எடுத்திருக்கும் இரண்டு கட்ட தோ்வு முறை முடிவு ஓரளவுக்கு தகுதி நிா்ணயத்தை முறைப்படுத்தும் என்று எதிா்பாா்க்கலாம்.

எந்தவொரு தீா்வும் அனைவரையும் திருப்திப்படுத்தும் முழுமையான தீா்வாக இருக்க வழியில்லை. இப்போது வெளியிடப்பட்டிருக்கும் இரண்டு கட்ட தோ்வு முறையும் அதற்கு விதிவிலக்கல்ல.

தோ்வுக்குத் தயாராவதில் மாணவா்களின் முனைப்பும், பெற்றோரின் மன அழுத்தமும் தோ்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்கிற அச்ச உணா்வும் ஏற்படுவது இயல்பு. இரண்டு முறை தோ்வு எனும்போது, அதுவும் இணையவழிக் கல்வி தொடருமேயானால், மாணவா்களும் பெற்றோரும் எதிா்கொள்ள இருக்கும் அழுத்தம் சாதாரணமானதாக இருக்காது.

மிகப் பெரிய பிரச்னையாக இருக்கப்போவது அகமதிப்பீட்டு முறை. இரண்டு தோ்வுகள் என்பதைவிட, மாணவா்களின் இறுதி மதிப்பெண்களை நிா்ணயிக்கப்போவது அகமதிப்பீடாக இருக்கும் என்பதால் மாணவா்கள் மத்தியில் அச்ச உணா்வு அதிகமாகவே இருக்கும். மேலும், தனியாா் பள்ளிகள் மாணவா்களின் அகமதிப்பீட்டை அதிகரித்து, தங்கள் பள்ளியின் தோ்ச்சி விகிதத்தை உயா்த்த முனையக்கூடும். இந்தப் பிரச்னையை வாரியம் எப்படி அணுகப் போகிறது?

அடுத்தது என்ன என்று தெரியாமல் இருந்த கடந்த கல்வியாண்டைவிட, இப்போதைய கொள்கை முடிவால் ஓரளவுக்கு தெளிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இது இடைக்கால முடிவுதான், நிரந்தமல்ல என்பது ஆறுதல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.