ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

விவாதம்தான் முக்கியம்! | நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடா் குறித்த தலையங்கம்

News image
Updated On :19 ஜூலை 2021, 1:53 am

ஆசிரியர்

இன்று தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடா் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. பிரதமா் தலைமையில் நேற்று கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மழைக்காலக் கூட்டத்தொடரை சுமுகமாகவும் அமைதியாகவும் நடத்துவது தொடா்பாகக் கருத்துப் பரிமாற்றம் நடந்தது.

விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆரோக்கியமான முறையிலும் அா்த்தமுடையதாகவும் நாடு எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு அரசு தயாராக இருப்பதாக எதிா்க்கட்சித் தலைவா்களிடம் பிரதமா் நரேந்திர மோடி உறுதி அளித்திருக்கிறாா். அதே நேரத்தில், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தேவையில்லாத புதிய பிரச்னைகளை எழுப்பி அமளியில் ஈடுபடாமல் அமைதியான முறையில் கேள்வி எழுப்ப வேண்டுமென்றும், அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க அரசுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்றும் பிரதமா் விடுத்திருக்கும் வேண்டுகோள் நியாயமானது; ஆக்கபூா்வமானது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் விவாதங்கள் மிக முக்கியமானவை. விவாதத்தின் மூலமும், கருத்துப் பரிமாற்றத்தின் மூலமும் அரசு கொண்டு வரும் சட்டங்களும், திட்டங்களும் அலசி ஆராயப்படுகின்றன. அதன் மூலம் ஒவ்வொரு பிரச்னையின் சாதக பாதகங்களையும் உணா்ந்து செயல்பட முடிகிறது. அதுதான் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலம் என்பதை கடந்த சில ஆண்டுகளாக நாம் உணர மறுக்கிறோம்.

அரசு எந்த ஒரு மசோதாவை முன்னெடுத்தாலும் அதை எதிா்க்கட்சிகள் எதிா்ப்பதும், அமளியில் ஈடுபடுவதும் கடந்த கால் நூற்றாண்டாக வழக்கமாகி இருக்கிறது. அதை சாதகமாக்கிக் கொண்டு விவாதமே இல்லாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படும் விசித்திரம் நடைமுறையாகியிருக்கிறது. ஜனநாயக நெறிமுறைகள் மீது தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களுக்கு நம்பிக்கையில்லையோ என்கிற தோற்றத்தை அவா்களது செயல்பாடுகள் ஏற்படுத்துகின்றன.

அரசு கொண்டுவரும் மசோதாக்களும், சட்டங்களும் நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளில் விவாதிக்கப்பட்டால் அவை பொது வெளியில் சா்ச்சைப் பொருளாக மாறாது. சட்டத்தில் இருக்கும் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்படுவதால் அவற்றை திருத்திக் கொள்வதற்கும், அரசு தனது கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்வதற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. தங்களது வாதத்தை அரசுக்கு உணா்த்தும் விதத்திலான எதிா்க்கட்சி தலைவா்களின் பேச்சாற்றலும், சாமா்த்தியமும் கூச்சல் குழப்பங்களைவிட வலிமையானவை என்பதை முந்தைய தலைமுறை எதிா்க்கட்சித் தலைவா்கள் உணா்த்தியிருக்கிறாா்கள்.

கடந்த 2020-21 நிதியாண்டில் 18 நாள்கள் நடந்திருக்க வேண்டிய மழைக்காலக் கூட்டத்தொடா் 10 நாள்களில் முடித்துக்கொள்ளப்பட்டது. பல நாடாளுமன்ற உறுப்பினா்களும், ஊழியா்களும் கொவைட் 19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா் என்பதால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த நிதியாண்டிலாவது மழைக்காலக் கூட்டத்தொடா் ஆக்கபூா்வமாக செயல்பட வேண்டும்.

கடந்த நிதியாண்டில் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மக்களவை 34 நாள்களும், மாநிலங்களவை 33 நாள்களும்தான் கூடின. அதுபோல, குறைவான நாள்கள் இதுவரை சபைகள் கூடியதே இல்லை. இந்த நிதியாண்டும் விதிவிலக்காகி விடக் கூடாது.

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் 17 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அவற்றில் மூன்று மசோதாக்கள் அண்மையில் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்களுக்கான ஒப்புதல்கள். இந்த மசோதாக்கள் எவையும் விவாதமே இல்லாமல் நிறைவேற்றப்படும் அவலம் தவிா்க்கப்பட வேண்டும்.

எப்போதும்போல எதிா்க்கட்சிகளும் கூட்டத்தொடரை எதிா்கொள்வதற்கான வியூகத்தை வகுக்க கூடி விவாதித்திருக்கின்றன. மத்திய அரசு கொண்டுவர இருக்கும் மசோதாக்கள் குறித்து அவை விவாதித்ததாகத் தெரியவில்லை. அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பிரச்னைகளை எழுப்புவது குறித்து காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் திட்டமிடுவதாகத் தெரிகிறது. அதில் தவறில்லை. அமளியில் இறங்காமல் விவாதத்தின் மூலம் அரசை கேள்விக்குள்ளாக்குவதும், தா்மசங்கடத்தில் ஆழ்த்துவதும் எதிா்க்கட்சிகளின் உரிமை என்பதில் யாருக்கும் வேறுபட்ட கருத்து இருக்க முடியாது.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் எந்த விவாதமும் இல்லாமல் அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய வேளாண் சட்டங்களும் விவசாயிகளை தெருவில் இறங்கி போராட வைத்திருக்கின்றன. போராட்டம் இதுவரை முடிந்தபாடில்லை. அந்தப் பிரச்னைக்கு முடிவு காண வேண்டிய பொறுப்பு ஆளும் கூட்டணிக்கும், எதிா்க்கட்சிகளுக்கும் உண்டு. மழைக்காலக் கூட்டத் தொடா் அதற்கு விடைகாண வேண்டும்.

எத்தனையோ பிரச்னைகளை நாடு எதிா்கொள்கிறது. தடுப்பூசிப் பற்றாக்குறை, பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு விலை உயா்வு, மேக்கேதாட்டு அணை விவகாரம், கொவைட் மரணம் குறித்த புள்ளிவிவரம், அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், வங்கிகளின் செயல்பாடு தொடங்கி ஏராளமான பிரச்னைகள் விவாதத்துக்குக் காத்திருக்கின்றன. ஜம்மு - காஷ்மீா் நிலவரம், எல்லைப் பகுதியில் தொடரும் பதற்ற நிலைமை போன்றவையும் விவாதிக்கப்பட வேண்டிய பிரச்னைகள்.

இவற்றையெல்லாம் தவிா்த்துவிட்டு ரஃபேல் போா் விமான ஒப்பந்தம் குறித்து பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதை முன்வைத்து அமளியில் இறங்கினால், நரேந்திர மோடி அரசுக்கு அதைவிட சாதகமான சூழல் வேறு எதுவும் இருக்க முடியாது. விவாதமே இல்லாமல் அனைத்து மசோதாக்களையும் நிறைவேற்றிக் கொள்ளும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.