செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

அரசின் அவசர கவனத்திற்கு... | கடல் உணவு ஏற்றுமதித் குறித்த தலையங்கம்

News image
Updated On :18 மார்ச் 2021, 1:00 am

ஆசிரியர்

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டன என்றால், மிக அதிகமாக பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றாக கடல் உணவு ஏற்றுமதித் துறையைக் குறிப்பிட வேண்டும். இன்னும்கூட அந்த பாதிப்பில் இருந்து மீள முடியாமல் பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது கடல் உணவு ஏற்றுமதித் துறை. ஏற்றுமதியாளர்கள் மட்டுமல்ல, அதனுடன் தொடர்புடைய தொழிலாளர்களும், மீனவர்களும்கூட பாதிப்பை எதிர்கொள்கிறார்கள் என்பதை மத்திய - மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். 

கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் சற்று குறைந்து பொது முடக்கம் தளர்த்தப்பட்ட நிலையிலும், கடல் உணவு ஏற்றுமதி துறையின் பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை. கப்பல்களின் சரக்குக் கட்டண உயர்வும், குளிர்பதன சரக்குப் பெட்டகங்களுக்கான (கன்டெய்னர்கள்) தட்டுப்பாடும் இரண்டு முக்கியமான பிரச்னைகள். இரண்டு பிரச்னைகளுக்குமே விடை காண முடியாமல் அந்தத் துறை தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 

இந்தியாவிலிருந்து கடல் உணவுப் பொருள்கள் (குறிப்பாக, இறால் போன்ற மீன் இனங்கள்) அமெரிக்கா, ஐரோப்பா, கிழக்கு ஆசியா ஆகியவற்றுக்கு அதிகமாக ஏற்றுமதியாகின்றன. சரக்குகளை ஏற்றிச்செல்லும் கப்பல்கள் தங்களது கட்டணங்களை இரு மடங்கு, மூன்று மடங்கு அதிகரித்துவிட்டன. விலை அதிகமாகி இறக்குமதியாளர்களுக்கு லாபம் இல்லாத நிலை காணப்படுகிறது. அதன் விளைவாக, கேட்பு (டிமான்ட்) குறைந்து ஏற்றுமதிகள் 
அநேகமாக ஸ்தம்பித்துவிட்ட நிலைமை. 

கப்பல் சரக்குக் கட்டணம் 100% முதல் 200% வரை அதிகரித்திருக்கிறது. சென்னையிலிருந்து ஒரு கன்டெய்னர் சரக்கு நியூயார்க்கிற்கு எடுத்துச் செல்ல, முன்பு சுமார் 2,700 டாலர் முதல் 3,000 டாலர் வரை இருந்தது. இப்போது அதுவே 4,700 டாலர் முதல் 5,000 டாலர் வரை அதிகரித்து இருக்கிறது. அதேபோல, பிரிட்டனுக்கான சரக்குக் கட்டணம் 3,000 டாலரிலிருந்து 6,000 டாலராக அதிகரித்திருக்கிறது. 

சரக்குக் கட்டணம் அதிகரித்ததற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. முன்பெல்லாம் 30 முதல் 35 நாள்களில் சென்றடைந்த கப்பல்கள் இப்போது பல துறைமுகங்களில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்ல வேண்டியிருப்பதால் 70 முதல் 75 நாள்களாகின்றன. ஏற்றுமதிக்கான சரக்குகள் குறைவாக இருப்பதால் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு நேரடியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. 

பயணக் காலம் அதிகரிப்பதால் சரக்குகள் போய்ச் சேர்ந்த பிறகுதான் அதற்கான தொகை ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைக்கிறது. சரக்கு போய்ச் சேர்ந்து இறக்குமதி செய்தவர்கள் வங்கியில் பணம் செலுத்தி துறைமுகங்களில் இருந்து சரக்கைப் பெற்றுக் கொண்ட பிறகுதான் பணப்பரிமாற்றம் நடைபெறுவது வழக்கம். இப்போது பயண நேரம் அதிகரித்திருப்பதால் பாதிப்பு ஏற்றுமதியாளர்களுக்கு... 

சரக்குப் பெட்டகங்கள் தட்டுப்பாடு இன்னொரு முக்கியமான காரணம். கடல் உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்ய குளிர்பதன வசதியுள்ள சரக்குப் பெட்டகங்கள் தேவைப்படுகின்றன. சாதாரண பெட்டகங்களில் அனுப்பிவிட முடியாது. மேலும், பயணக் காலம் அதிகரிக்கும்போது அதற்கேற்றாற்போல குளிர்பதன சரக்கு பெட்டகங்களுக்கான மின் கட்டணமும் அதிகரிக்கிறது. அதனால், ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவுப் பொருள்களின் விலை அதிகரித்து சர்வதேசச் சந்தையில் அதற்கான கேட்பு குறைந்துவிட்டது. 

கொவைட் 19 காலத்தில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட கடல் உணவுப் பொருள்கள் அடங்கிய சரக்குப் பெட்டகங்கள் எடுக்க ஆளில்லாமல் பல துறைமுகங்களில் தேங்கிக் கிடந்து பொருள்கள் வீணாகின. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள கடல் உணவு இறக்குமதியாளர்கள் பலர் தங்களது நிறுவனங்களை மூடிவிட்டதால் அவர்களிடமிருந்து கிடைக்க வேண்டிய பணமும் கிடைக்கவில்லை. அதன் இழப்பு ஏற்றுமதியாளர்களை கடுமையாக பாதித்துவிட்டது.

இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்த கடல் உணவுப் பொருள்களுக்கான பணம் சுமார் ரூ.1,000 கோடி அளவில் சீன இறக்குமதியாளர்கள் மட்டுமே பாக்கி வைத்திருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் குஜராத், மகாராஷ்டிர மாநில ஏற்றுமதியாளர்கள். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவிலிருந்து அதிகமாக கடல் உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில் 20% தமிழகத்தின் பங்கு. ஏறத்தாழ இதே அளவில் கேரளமும், ஆந்திரமும் கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில் ஈடுபடுகின்றன. சாதாரணமாக ஈஸ்டர்  காலத்தில் கடல் உணவுப் பொருள்களுக்கான ஏற்றுமதித் தேவை அதிகரிக்கும். இந்த ஆண்டு பல ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த எதிர்பார்ப்பும் தகர்ந்திருக்கிறது.

ஏற்றுமதியாளர்கள் பலர் மிகப் பெரிய இழப்பை எதிர்கொண்டதால் தொழிலையே விட்டுவிட்டனர். சொந்தமாக விசைப் படகுகள் வைத்து தொழில் நடத்தி வரும் ஏற்றுமதியாளர்கள் தொடர்ந்து எப்படி தொழிலில் ஈடுபடுவது என்பது தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து கடல் உணவுப் பொருள் ஏற்றுமதித் துறையில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களும், தொழிலாளர்களும், மீனவர்களும், அவர்களின் குடும்பங்களும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.