மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

நடக்குமா? நடக்காதா? | ஒலிம்பிக் போட்டி குறித்த தலையங்கம்

News image
Updated On :18 மே 2021, 10:01 pm

ஆசிரியர்

 சர்வதேச விளையாட்டு அரங்கில் ஒலிம்பிக் போட்டி என்பது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மிகப் பெரிய நிகழ்வு. கடந்த ஆண்டு தள்ளிப்போடப்பட்ட ஒலிம்பிக் போட்டி, இந்த ஆண்டாவது நடைபெறுமா என்பதை கேள்விக்குறியாக்கியிருக்கிறது கொள்ளை நோய்த்தொற்று.
 ஜூலை 23-ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுவதாக இருக்கிறது சர்வதேச ஒலிம்பிக் போட்டி. கடந்த ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை நடைபெற இருந்த போட்டிகள், கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக ஓராண்டு தள்ளிப்போடப்பட்டது. கொள்ளை நோய்த்தொற்று இன்னும் கட்டுக்குள் அடங்காமல் இருக்கும் நிலையில், டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டி எப்படி நடக்கப் போகிறது என்கிற கேள்வி எழுகிறது.
 ஒலிம்பிக் போட்டியை நடத்தியே தீருவது என்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் செய்கோ ஹஷிமோட்டோ உறுதியாக இருக்கிறார். ஆனால், நோய்த்தொற்றுப் பரவலால் அச்சமடைந்திருக்கும் ஜப்பான் மக்கள் மத்தியில் அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
 சர்வதேச ஒலிம்பிக் போட்டி என்பது சாதாரணமான நிகழ்வு அல்ல. ஏறத்தாழ 205 நாடுகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் 11,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் நிகழ்வு. விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல், பயிற்சியாளர்கள், அதிகாரிகள், போட்டியை நடத்தத் தேவையான ஊழியர்கள் என்று உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் டோக்கியோ நகரில் வந்து குவிவார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 மூன்று வார டோக்கியோ ஒலிம்பிக் போட்டியால், சர்வதேச அளவில் நோய்த்தொற்றுப் பரவல் மிகப் பெரிய அளவில் அதிகரித்துவிடக் கூடிய ஆபத்து காத்திருக்கிறது என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். ஆப்பிரிக்காவிலும், ஆசிய பசிபிக்கிலும் உள்ள பல சிறிய நாடுகளில் முன்களப் பணியாளர்கள் உள்பட ஒருவருக்குக்கூட இன்னும் தடுப்பூசி செலுத்தப்படாத அவலம் காணப்படும்போது, இத்தனை பொருள்செலவில் ஒலிம்பிக் பந்தயத்தை நடத்தி நோய்த்தொற்றுப் பரவலை ஊக்குவிப்பது தேவைதானா என்பது அவர்களது தர்க்க ரீதியான வாதம்.
 ஜப்பானில் ஏற்கெனவே நான்கு முறை அவசர நிலை அறிவிக்கப்பட்டு, இப்போது நான்காவது அலை நோய்த்தொற்றை அந்த நாடு எதிர்கொள்கிறது. சமீபத்திய சோதனைகளின்படி, முதலாவதாக பரவிய தீநுண்மித் தொற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய வகை உருமாறிய தீநுண்மித் தொற்று ஜப்பானில் பரவி வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. டோக்கியோ, ஒசாகா, கியோடோ, ஹியோகோ பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் தொடர்கின்றன. இந்தியா அளவுக்கு உயிரிழப்புகள் இல்லை என்றாலும்கூட, ஜப்பானின் மக்கள்தொகையை ஒப்பிடும்போது, பாதிப்பைப் புறந்தள்ளிவிட முடியாது.
 ஒலிம்பிக் போட்டிக்கு முன்னால் ஒலிம்பிக் ஜோதியை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் சம்பிரதாயம் கடைப்பிடிக்கப்படுகிறது. நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக, ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் அடக்கி வாசிக்கப்படுகிறது. ஹியோகோ, ஓகையாமா, ஹிரோஷிமா நகரங்களில் பொது சாலைகள் வழியாக செல்லும் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் ரத்து செய்யப்பட்டது. ஜப்பானியர்கள் மத்தியில் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டபோது 80%-க்கும் அதிகமானோர் போட்டியைத் தள்ளிப்போட வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
 விளையாட்டு வீரர்கள் நேரடியாக டோக்கியோவுக்கு விமானத்தில் அழைத்து வரப்படுவார்கள். அவர்களுக்கு தினந்தோறும் நோய்த்தொற்று சோதனை நடத்தப்படும். தங்கள் குழுவினருடன் கலந்துரையாடுவதைக்கூட அவர்கள் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அரங்கத்தில் பார்வையாளர்கள் இருக்க மாட்டார்கள். இதுபோன்ற பல்வேறு எச்சரிக்கைகளுடன்தான் ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிட்டிருக்கிறது சர்வதேச ஒலிம்பிக் சங்கம்.
 ஒருவேளை இறுதிக்கட்ட போட்டியின்போது விளையாட்டு வீரர் ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டாலோ அல்லது பரிசோதனையில் தவறான முடிவு இருந்தாலோ என்ன செய்வது என்கிற கேள்வி எழுகிறது. அப்படிப்பட்ட நிலையில் அந்த விளையாட்டுப் போட்டி ரத்து செய்யப்படுமா? நோய்வாய்ப்பட்ட வீரருக்கு பதிலாக அதே நாட்டை சேர்ந்த வேறொரு விளையாட்டு வீரரை அனுமதிப்பார்களா என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
 ஜப்பான் தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்த நாடாகவும், பணக்கார நாடாகவும் இருக்கலாம். ஆனால், கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே ஜப்பானின் பொருளாதாரம் கொள்ளை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒலிம்பிக் போட்டியின் விளைவாக நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்தால் என்ன செய்வது என்று ஜப்பானியர்கள் அச்சப்படுகிறார்கள்.
 ஒலிம்பிக் போட்டியை நடத்துவதால் எதிர்பார்த்ததுபோல் சுற்றுலாப் பயணிகளின் வருகையோ, பொருளாதாரத்துக்கு ஊக்கமோ ஏற்படப் போவதில்லை. பந்தயத்துக்கான திட்ட மதிப்பீடு கடந்த ஓராண்டில் மூன்று பில்லியன் டாலர் அதிகரித்து இப்போது 15.4 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. தள்ளிப்போடப்பட்டால் மேலும் அதிகரிக்கும்.
 போட்டிகளை ரத்து செய்தால் பெரும் இழப்பு. தள்ளிப்போட்டாலோ, அப்போதும் இழப்பு...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.