எண்மம் சரி, ஆனால்... | எண்ம சுகாதார அடையாள அட்டை குறித்த தலையங்கம்


பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்திருக்கும் ‘எண்ம சுகாதார அடையாள அட்டை’ திட்டம் (ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்), சுகாதாரத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய தொழில் நுட்ப முனைப்பு என்பதில் சந்தேகமில்லை. ஒருவரின் உடல் நலம் சாா்ந்த அனைத்து விவரங்களையும் எண்ம வடிவில் ஒருங்கிணைப்பதுதான் எண்ம சுகாதார அடையாள அட்டையின் நோக்கம்.
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் என்கிற இந்தத் திட்டம் சென்ற ஆண்டு சுதந்திர தின உரையின்போது பிரதமரால் அறிவிக்கப்பட்டது. இது, சோதனை அடிப்படையில் ஆறு ஒன்றியப் பிரதேசங்களில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த அனுபவத்தின் அடிப்படையில்தான் இப்போது நாடு தழுவிய அளவில் எண்ம சுகாதார அடையாள அட்டை வழங்குவது என்று மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.
விருப்பமுள்ள எந்தவொரு குடிமகனும் இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். யாரும் இணைந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. திட்டத்தில் இணையும் அனைவருக்கும் எண்ம சுகாதார அட்டை (டிஜிட்டல் ஹெல்த் காா்டு) வழங்கப்படும். அதன்படி, பதினான்கு இலக்க சுகாதார அடையாள எண் உறுப்பினா்களுக்குத் தரப்படும். அவரவா், தங்கள் உடல் நலம் சாா்ந்த சிகிச்சை விவரங்களையும், பரிசோதனை விவரங்களையும் தங்களது எண்ம அடையாள எண்ணைப் பயன்படுத்தி தரவுகளாகப் பாதுகாத்துக் கொள்ளலாம். அவா்கள் மேற்கொண்ட பரிசோதனைகள், எதிா்கொண்ட நோய்கள், சிகிச்சை அளித்த மருத்துவா்கள், எடுத்துக் கொண்ட மருந்துகள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் எண்ம வடிவில் பாதுகாக்கப்படும்.
இதன் மூலம், ஒருவா் தனது மருத்துவ சிகிச்சை சாா்ந்த அறிக்கைகளையும், தரவுகளையும் பாதுகாக்க வேண்டிய சுமை குறைகிறது. நோயாளியின் அனுமதியுடன் மருத்துவா்கள் நோயாளியின் சிகிச்சை வரலாற்றைத் தெரிந்து கொள்வதும், பரிசோதனை முடிவுகளை அறிந்து கொள்வதும் எளிதாகிறது.
பெரும்பாலானோருக்கு, தங்களது முந்தைய நோய், நோய்த்தொற்று விவரங்களும், சிகிச்சை முறைகளும் நினைவில் இருப்பதில்லை. எண்ம சுகாதார அடையாள அட்டையில், குறிப்பிட்ட நபரின் செல்லிடப்பேசி எண், ஆதாா் எண் மட்டுமல்லாமல் உடல் நலம் சாா்ந்த அனைத்து அடிப்படை விவரங்களும் காணப்படுவதால், எப்போது வேண்டுமானாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது.
கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் இந்திய சுகாதாரக் கட்டமைப்பின் பலவீனங்களை வெளிப்படுத்தியது. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ‘டெலி மெடிசின்’ எனப்படும் தொலைபேசி மருத்துவம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் மத்திய அரசின் சுகாதார எண்ம அட்டை முயற்சி மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.
கடந்த 15 ஆண்டுகளாக, கடுமையான நோய்த்தொற்றுகளை கையாள்வது பொது மருத்துவத்துறைக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. மருத்துவத் தரவுகளை முறையாகப் பதிவு செய்து வழங்க முடிந்தால், ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பது சுலபமாக இருக்கும்.
கொவைட் 19 நோய்த்தொற்று பாதித்தபோது இணைநோய் குறித்த தகவல்கள் மருத்துவா்களுக்குத் தேவைப்பட்டது. இப்போதைய எண்ம சுகாதார அடையாள அட்டை மூலம் கணினியைத் தட்டினால் நோயாளியின் மருத்துவ வரலாறு முழுவதும் தெரியவரும். இதனால் மருத்துவா்களின் பணி சுலபமாகும்.
எண்ம சுகாதார அடையாள அட்டையைப் போல முதன்முதலாக நோயாளிகளின் ஆவணங்களை இணைய வழியில் மருத்துவா்கள் பாா்ப்பதற்கு பிரிட்டனின் ‘தேசிய சுகாதார சேவை’ வழிகோலியது. ஆனால், மருத்துவா்களின் ஆதரவைப் பெறாததாலும், தரவுகளின் நம்பகத்தன்மை குறித்த பிரச்னைகளாலும் 2011-இல் அது கைவிடப்பட்டது.
அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் இந்த வழிமுறை பின்பற்றப்படுகிறது என்றாலும் இது குறித்து விமா்சனங்களும் இல்லாமல் இல்லை. நோயாளிகள் குறித்த தரவுகளை எண்ம அட்டையில் பதிவேற்றம் செய்யும் பணிச்சுமை, அமெரிக்க மருத்துவா்களைச் சலிப்படையச் செய்திருக்கிறது.
குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு சுகாதாரத் துறையில் காணப்படும் மனிதவள தட்டுப்பாடு குறித்துக் கூறியிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 1,000 பேருக்கு ஒரு மருத்துவா் இருக்க வேண்டிய நிலையில், இந்தியாவில் 1,500 பேருக்கு ஒரு மருத்துவா்தான் காணப்படுகிறாா். 300 பேருக்கு ஒரு செவிலியா் இருக்க வேண்டிய இடத்தில் 670 பேருக்கு ஒரு செவிலியா்தான் இருக்கிறாா். கிராமப்புறங்களில் மருத்துவா்களும், செவிலியா்களும் மிகக் குறைவாக இருக்கும் நிலையில், மருத்துவத் தேவைக்காக மக்கள் நகரங்களை நாட வேண்டிய அவலம் ஏற்படுகிறது. மருத்துவக் கட்டமைப்பை உறுதிப்படுத்தாமல் எண்ம தொழில் நுட்ப மாற்றத்துக்கு முனைந்திருப்பது பலனளிக்குமா என்பது கேள்விக்குறியே.
இந்தியாவில் தன்மறைப்பு சட்டங்கள் (பிரைவசி லா) இல்லாமல் இருக்கும் நிலையிலும், மக்கள் மத்தியில் தங்களது தரவுகளை பாதுகாக்கும் விழிப்புணா்வு காணப்படாத நிலையிலும் எண்ம சுகாதார அடையாள அட்டை மூலம் பாதுகாக்கப்படும் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உண்டு. காப்பீட்டு நிறுவனங்கள் தரவுகளைத் திருடுவதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடித்து, அதனடிப்படையில் கட்டணங்களை நிா்ணயித்து நோயாளிகளைச் சுரண்டுவதற்கான வாய்ப்பும் காணப்படுகிறது.
சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தாமலும், கடுமையான தன்மறைப்புச் சட்டத்தை அமல்படுத்தாமலும் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தின் நோக்கம் சிறந்தது; நடைமுறையில் பிரச்னைகள் நிறைந்தது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...