ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை! | உச்சநீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு குறித்த தலையங்கம்

அரசியல் சாசனப் பிரிவு 21-இன் கீழ், வாழ்வதற்கான அடிப்படை உரிமை என்பது உணவுக்கான உரிமையையும் உள்ளடக்கியது என்று கருத்து தெரிவித்திருக்கிறது உச்சநீதிமன்றம். இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாநிலங்களும் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்துகிறது, கடந்த செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு. 

வரவேற்புற்குரிய உத்தரவுதான் இது என்றாலும்கூட, எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம் என்பதை ஆராயத் தோன்றுகிறது.  நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பிப்பது என்பது வேறு, நிர்வாக ரீதியாக அவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்துவது என்பது வேறு.

அனைவருக்கும் உணவு என்கிற அடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் அக்கறையும் உத்தரவும் ஐயப்பாட்டுக்கு இடமில்லாமல் வரவேற்புற்குரியவை. முந்தைய மன்மோகன் சிங் அரசின் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' என்கிற கனவுத் திட்டத்தை, கடந்த மூன்று ஆண்டுகளாக மோடி அரசும் நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். 


இந்தியாவின் பொது விநியோகக் கட்டமைப்பின் கீழ் 81.4 கோடி பயனாளிகள் காணப்படுகிறார்கள். கிராமப்புறத்தில் 75%, நகர்ப்புறத்தில் 50% மக்கள் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக உணவுப் பாதுகாப்பைப் பெறுகிறார்கள். இந்தியாவிலுள்ள 28 மாநிலங்களும், எட்டு ஒன்றிய பிரதேசங்களும் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கட்டமைப்புடன் இருக்கின்றன. இன்றைய நிலையில் 92% நியாய விலைக் கடைகள் மின்னணு விற்பனை இயந்திரங்களால் இணைக்கப்பட்டிருக்கின்றன. 91% குடும்ப அட்டைகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்தை நிறைவேற்றுவது சிரமமாக இருக்காது என்று உச்சநீதிமன்ற விவாதத்தின்போது மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.

கடந்த மார்ச் மாத நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையின்படி அஸ்ஸாம், தில்லி இரண்டு மாநிலங்களிலும் நியாயவிலைக் கடைகள் இன்னும் முழுமையாக மின்னணு விற்பனை இயந்திரங்களால் இணைக்கப்படவில்லை. மேற்கு வங்கத்தில் குடும்ப அட்டை களில் 80%தான் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. சத்தீஸ்கரில் ஆதார் அட்டை இணைப்பு இன்னும் பாதிகூட நிறைவுபெறவில்லை. நிர்வாகம் முனைப்புக் காட்டினால் இந்தக் குறைபாடுகளை அகற்றுவது பெரிய பிரச்னையாக இருக்காது.


கடந்த ஆண்டு பொது முடக்கத்தின்போது மத்திய அரசு அறிவித்த ரூ.3,500 கோடி மதிப்பிலான எட்டு லட்சம் டன் கோதுமை, அரிசி மட்டுமல்லாமல் 50,000 டன் பருப்பு உள்ளிட்டவை இந்தியா முழுவதும் விநியோகிக்க முடிந்ததற்கு நியாயவிலைக் கடை கட்டமைப்புதான் காரணம். அதே நேரத்தில், வேலையில்லாததால் வருவாய் இழந்து தத்தளித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நியாயவிலைக் கடைகளில் பொது விநியோக சட்டத்தின் அடிப்படையில் உணவு மானியத்தை பெற முடியவில்லை. 

எல்லா மாநிலங்களும் தங்கள் மாநிலத்தவர்க்கு நிவாரணம் வழங்குவதில் காட்டிய முனைப்பை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் காட்டவில்லை. ஏனென்றால், அவர்களுக்கு குடும்ப அட்டையும் இல்லை, வாக்குரிமையும் இல்லை. அதனால்தான் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' என்கிற திட்டம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாகப் பலராலும் முன்மொழியப்படுகிறது.

இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கை 2017-இன்படி, 2011-16 ஆண்டுகளுக்கு இடையில் ஏறத்தாழ 90 லட்சம் பேர் ஆண்டுதோறும் மாநிலங்களுக்கு இடையில் பணி நிமித்தமாக இடம்பெயர்கிறார்கள். மிக அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் காணப்படுவது மனைவணிகம் - குடியிருப்புக் கட்டுமானத் தொழிலில்தான். ஏறத்தாழ நான்கு கோடி பேர் அந்தத் துறையில் பணியாற்றுகிறார்கள். அடுத்தாற்போல செங்கல் சூளை (1 கோடி), சுரங்கம், போக்குவரத்து, ஹோட்டல் உள்ளிட்டவை அதிகளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன.


புலம்பெயர்தல் என்பது தொழில்மயமாதல், நகர்மயமாதல்  ஆகியவற்றிலிருந்து பிரிக்க முடியாதது என்பதை உலகிலுள்ள எல்லா நாடுகளுமே அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கின்றன. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியர்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் புலம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நிலையில் இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களும் தங்களது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமான புலம் பெயர்ந்தவர்களின் நலனை உறுதிப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. 

'மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை' என்கிற வாதம் இனிமேலும் எடுபடுமா என்பது சந்தேகம்தான். தமிழ்நாடு உள்பட தொழில் துறையில் முன்னேற விழையும் எந்தவொரு மாநிலமும் தனது எல்லையை மற்ற மாநிலத்தவர்களுக்கு மூடி வைப்பது என்பது இனி இயலாத ஒன்று. 


செல்லிடப்பேசி எண்ணை மாற்றாமல் எப்படி ஒரு சேவை நிறுவனத்திடமிருந்து இன்னொரு சேவை நிறுவனத்துக்கு மாற முடிகிறதோ, அதேபோல குடும்ப அட்டைகளும் எண்மப் பதிவு செய்யப்பட்டு, இணைய வழியில் மாநிலத்துக்கு மாநிலம் மாற்றுவதற்கான வழிமுறையை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். ரேஷன் பெறும் உரிமை மட்டுமல்ல, பணிபுரியும் இடத்தில் வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்படும்போதுதான் புலம்பெயர்ந்தவர்களின் அடிப்படை உரிமையும் பாதுகாப்பும் உறுதிப்படும்.

'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' என்பது சாத்தியம்தான். அதேநேரத்தில், அதற்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதிப்பதும், நிர்வாக ரீதியான திட்டமிடல் இல்லாமல் இருப்பதும் குழப்பத்தைத்தான் விளைவிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com