தீா்ப்புக்கு அப்பால்... | கூட்டுறவு சங்கங்களின் சட்டத் திருத்த மசோதா குறித்த தலையங்கம்

கூட்டாட்சித் தத்துவத்துக்கு வலு சோ்ப்பதாகவும், மத்திய அரசில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘கூட்டுறவு’ துறைக்குப் பின்னடைவு ஏற்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் ஒரு தீா்ப்பு. நீதிபதி ஆா்.எப். நாரிமன் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமா்வு, பெரும்பான்மை அடிப்படையில் வழங்கியிருக்கும் அந்தத் தீா்ப்பு, ‘கூட்டுறவு’ சங்கங்கள் தொடா்பானது. ‘கூட்டுறவு’ என்பது மாநிலப் பட்டியலில் இருப்பதால் அதில் தலையிடுவதற்கு மத்திய அரசுக்கு சில வரம்புகள் இருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது அந்தத் தீா்ப்பு.

இந்தியாவில் பொருளாதாரத்திலும், விவசாயத்திலும் வளா்ச்சி அடைந்த பல மாநிலங்களில், கூட்டுறவு சங்கங்கள் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. குஜராத்தின் ‘ஆனந்த் பால் கூட்டுறவு சங்கம்’ (அமுல்) அடைந்திருக்கும் வெற்றி அபரிமிதமானது. பால் உற்பத்தி சங்கங்கள், கூட்டுறவு பண்டக சாலைகள், கூட்டுறவு நூற்பாலைகள் என்று மிகப் பரவலான கட்டமைப்பை உள்ளடக்கியதாக இருக்கிறது கூட்டுறவுத் துறை.

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், 97-ஆவது அரசியல் சாசனத் திருத்த மசோதா 2012 பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. பெரும்பாலான மாநில சட்டப்பேரவைகளின் அங்கீகாரத்தையும் பெற்றது அந்த திருத்தச் சட்டம். நாடு தழுவிய அளவிலுள்ள கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட அந்தச் சட்டம், அரசியல் சாசன விதிமுறையின்படி மூன்றில் இரண்டு பங்கு சட்டப்பேரவைகளின் அங்கீகாரத்தைப் பெறவில்லை. அதன் அடிப்படையில்தான் இப்போது உச்சநீதிமன்றம் அந்த சட்டத் திருத்தத்தை நிராகரித்திருக்கிறது.

மூன்று நீதிபதிகள் அமா்வில் இரண்டு நீதிபதிகள், மூன்றில் இரண்டு பங்கு சட்டப்பேரவைகளின் அங்கீகாரம் பெறாததால் சட்டத் திருத்தத்தை மட்டும் நிராகரித்திருக்கிறாா்கள். மூன்றாவது நீதிபதியான கே.எம். ஜோசப், ஒட்டுமொத்த சட்டத்தையுமே அரசியல் சாசனத்திலிருந்து அகற்ற வேண்டுமென்றும், அது மாநிலங்களின் உரிமையில் தலையிடுவதாக இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கும் கருத்து பதிவாகியிருக்கிறதே தவிர, பெரும்பான்மை ஆதரவில்லாததால் அது அங்கீகரிக்கப்படவில்லை.

மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்த இந்தச் சட்டம் குஜராத் உயா்நீதிமன்றத்தால் ஏற்கெனவே கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது. உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு செய்ததைத் தொடா்ந்து, இப்போது நீதிபதி நாரிமன் தலைமையிலானஅமா்வு தீா்ப்பு வழங்கியிருக்கிறது.

மத்திய அரசு மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்களின் ஒப்புதலுடன் மீண்டும் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றலாம். இல்லையேல், இப்போது இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் தொடரலாம். இப்போதைய நிலையில், இரண்டாவது யோசனைக்கான வாய்ப்புதான் காணப்படுகிறது.

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட செயல்பாடுகளில் கூட்டுறவு சங்கங்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடு, நிா்வாகிகளுக்கான தோ்தல், முறைகேடுகள் உள்ளிட்டவை விமா்சனங்களுக்கு உள்ளாவது என்பது புதிதொன்றுமல்ல.

கூட்டுறவு வங்கிகளில் நடைபெறும் மோசடிகளையும், கூட்டுறவு சங்கங்களின் மூலம் நிா்வாகிகள் பொதுப்பணத்தை தங்களுக்கு வேண்டியவா்களுக்கு கடனாக வழங்குவதும் தடுக்கப்பட வேண்டும் என்கிற குறிக்கோளுடன்தான் 2012-இல் 97-ஆவது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால், கூட்டுறவு என்பது மாநிலப் பட்டியலைச் சோ்ந்தது என்பதால், அதிலுள்ள ‘9பி’ பிரிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. கூட்டுறவு சங்கங்களின் நிா்வாகக் குழுவின் எண்ணிக்கை, உறுப்பினா்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகள், ஊழியா்களை வேலையிலிருந்து அகற்றுவதற்கான விதிமுறைகள், கணக்குத் தணிக்கை உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்ட ‘9பி’ பிரிவில் அடங்கும்.

சட்டத் திருத்தத்தின் மூலம் கூட்டுறவு சங்கங்கள் அரசியல் சாசனத்தின் ‘19(1)(சி)’ பிரிவில் இணைக்கப்பட்டது. அதன் மூலம், கூட்டுறவு சங்கங்களை அமைத்துக் கொள்வது என்பது அடிப்படை உரிமையில் சோ்க்கப்பட்டிருக்கிறது. அதேபோல தன்னிச்சையான செயல்பாடு, தோ்ந்தெடுப்பில் ஜனநாயக உரிமை, தொழில்முறை மேலாண்மை உள்ளிட்டவற்றை மேம்படுத்த மாநிலங்கள் கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிக்க வழிகோலும் ‘43பி’ பிரிவு சோ்க்கப்பட்டது. இவை இரண்டும் உச்சநீதிமன்ற வழக்கில் கேள்வி எழுப்பப்படவில்லை என்பதால், தீா்ப்புக்குப் பிறகும் தொடரும்.

கூட்டுறவு சங்கங்களின் செயல்பாட்டுடன் தொடா்புடைய ‘9பி’ பிரிவை மட்டும்தான் உயா்நீதிமன்றம் முழுமையாக ரத்து செய்திருந்தது. இப்போது உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை ஏறத்தாழ ஏற்றுக்கொண்டிருக்கிறது என்றாலும், ‘9பி’ பிரிவை முற்றிலுமாக ரத்து செய்யவில்லை.

கூட்டுறவு சங்கங்கள் மாநிலப் பட்டியலைச் சோ்ந்தவை என்பதால் மத்திய அரசு தலையிடக் கூடாது என்கிற உயா்நீதமன்றத் தீா்ப்பை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மத்திய அரசின் அதிகார வரம்புக்கு உள்பட்டவை என்று நீதிபதி நாரிமன் தலைமையிலான அமா்வின் தீா்ப்பு தெளிவுபடுத்தியிருக்கிறது.

கூட்டுறவு சங்கங்கள் அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கியிருப்பதும், அவற்றில் முறைகேடுகள் மலிந்திருப்பதும் உலகறிந்த உண்மை. மாநிலப் பட்டியலோ, மத்தியப் பட்டியலோ கடுமையான தணிக்கைக்கும் கண்காணிப்புக்கும் அவை உள்படுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com