அரசியலில் குற்றவாளிகள்! | பீர்பூம் சம்பவம் குறித்த தலையங்கம்

அரசியலில் குற்றவாளிகள்! | பீர்பூம் சம்பவம் குறித்த தலையங்கம்
Updated on
2 min read

 மேற்கு வங்க மாநிலம், பீர்பூம் மாவட்டத்தில் உள்ள போக்டுயி என்ற கிராமத்தில் நடந்த வன்முறையில் 7 பெண்கள், 2 சிறார்கள் உள்பட 9 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, விசாரணையும் தொடங்கியுள்ளது என்றாலும், அரசியலில் கிரிமினல் குற்றவாளிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதும், எதிரிகளைப் பழிவாங்கும் போக்கு, பெண்கள், சிறார்களையும்கூட கொடூரமாகக் கொல்லும் அளவுக்குச் சென்றுள்ளது என்பதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.
 பீர்பூம் மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஊராட்சி துணைத் தலைவர் பாது ஷேக் என்பவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பழிவாங்கும் வகையில் நடந்த வன்முறையில்தான் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், இவர்கள் எரித்துக் கொலை செய்யப்படுவதற்கு முன்பு கடுமையாகத் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
 இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திரிணமூல் காங்கிரûஸ சேர்ந்தவர்கள்தான் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அதன்படி, முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ராம்புராட் வட்டார திரிணமூல் காங்கிரஸ் தலைவர் அனருல் ஹுசைனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கட்சி சார்பின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தாலும், இதில் சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
 சம்பவம் நடைபெற்ற இரண்டாவது நாள் மம்தா பானர்ஜி, போக்டுயி கிராமத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது உள்ளூர் மக்கள், இந்தப் படுகொலையில் ஈடுபட்டவர் அனருல் ஹுசைன்தான் என மம்தாவிடம் நேரடியாகக் குற்றம் சாட்டினர். அதைத் தொடர்ந்து, மாநில காவல்துறைத் தலைவருக்கு அனருல் ஹுசைனை கைது செய்யும்படி மம்தா உத்தரவிட்ட பின்னரே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 கொடூரமாக 9 பேர் கொலை செய்யப்பட்டு சுமார் 40 மணி நேரத்துக்கும் மேலாக நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், மாநில முதல்வர் உத்தரவிட்ட அடுத்த சில மணி நேரங்களில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படுபவரைக் கைது செய்துள்ளனர். அப்படியானால், குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருந்தது என்பதுதானே உண்மை? இந்த வழக்கில் மாநில காவல்துறையின் விசாரணையில் நியாயம் கிடைக்காது என்பதால்தான் சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 அரசியல் வன்முறைகளுக்கு எந்த மாநிலமும் விதிவிலக்கல்ல என்றாலும், மேற்கு வங்கத்தில் அது சற்று அதிகமாகவே காணப்படுவதை கடந்தகால வரலாறு உணர்த்துகிறது. "மேற்கு வங்கத்தில் எப்போது தேர்தல் நடைபெற்றாலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வன்முறை அரங்கேறுவது துரதிருஷ்டவசமானது' என்று கூறுகிறார் அந்த மாநிலத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுஜன் சக்கரவர்த்தி.
 பீர்பூம் சம்பவத்துக்கு நேரடியான காரணம் தேர்தல் இல்லை என்றாலும், அரசியல்தான் காரணம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். எத்தகைய குற்றச் செயலிலும் தயங்காமல் ஈடுபடுபவர்கள்,அரசியல் கட்சிகளில் பொறுப்பில் இருக்கும் தைரியத்தில்தான் இதுபோன்ற படுகொலைகள் நடக்கின்றன.
 அரசியல் வன்முறை என்பது வங்காளத்துக்கு புதிதொன்றுமல்ல. பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் நடந்த வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் அவலம் இது. முந்தைய சித்தார்த் சங்கர் ரே தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியிலும், ஜோதிபாசு தலைமையிலான இடதுசாரி ஆட்சியிலும் இதேபோல அரசியல் வன்முறைகள் நிகழ்ந்தன என்கிற உண்மையை மறந்துவிட முடியாது.
 உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, 2018 செப்டம்பர் மாதம் அரசியலில் குற்றவாளிகள் அதிகமாவதைத் தடுக்கும் நோக்கில் தீர்ப்பு வழங்கியது. 2020 பிப்ரவரியில் மற்றொரு வழக்கில் முந்தைய தீர்ப்பை மீண்டும் வலியுறுத்திய உச்சநீதிமன்றம், புதிதாக மேலும் சில உத்தரவுகளையும் பிறப்பித்தது.
 அதன்படி, குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை வேட்பாளர்களாக ஏன் தேர்வு செய்தோம் என்பதற்கான காரணத்தை அரசியல் கட்சிகள் இணையதளத்தில் வெளியிட வேண்டும். இந்த விஷயத்தை சமூக ஊடகங்கள் வழியாக மக்களுக்கு எடுத்துச் செல்லவும் வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
 உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, சட்டப்பேரவைத் தேர்தலுக்கும், மக்களவைத் தேர்தலுக்கும் மட்டும்தான் பொருந்தும் என எடுத்துக்கொள்ளக் கூடாது. அரசியலின் கீழ்நிலையிலிருந்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் அமல்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் கீழ்நிலையிலிருந்து அரசியல் வாழ்வைத் தொடங்குபவர்கள்தான் படிப்படியாக வளர்ந்து எம்.எல்.ஏ., எம்.பி. என்று ஆகின்றனர். அரசியலை கீழ்நிலையிலேயே செம்மைப்படுத்த வேண்டியது அவசியம்.
 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அப்போது பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றன. ஆனால், எத்தனை கட்சிகள் அத்தீர்ப்பை அமல்படுத்தின என்பது கேள்விக்குறியே. அதேபோல பீர்பூம் சம்பவத்திலிருந்தும் குறிப்பிட்ட கட்சி மட்டுமின்றி அனைத்துக் கட்சிகளுமே பாடம் படிக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் வருங்காலத்தில் இதுபோன்ற படுகொலைகளைத் தடுக்க முடியும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com