பெருமிதத் தருணம்! - 75-ஆவது குடியரசு தின விழா குறித்த தலையங்கம்

பெருமிதத் தருணம்! - 75-ஆவது குடியரசு தின விழா குறித்த தலையங்கம்

இன்று இந்தியா 75-ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடும்போது, நாம் ஒவ்வொருவரும் பெருமையும் பெருமிதமும் கொள்வதற்கான பல காரணங்கள் இருக்கின்றன. சுதந்திர இந்தியா ஒன்றுபட்ட இந்தியாவாக இருக்குமா என்கிற ஐயப்பாட்டை எழுப்பியவர்கள் ஏராளம். அனைவருக்கும் வாக்குரிமை அளித்து ஜனநாயகக் குடியரசாக இந்தியா தொடர்ந்து பயணிக்க இயலாது என்று கருதியவர்களும் ஏராளம்.
இந்தியா விடுதலை பெற்றபோது உலக ஜிடிபி-யில் வெறும் 3% (சுமார் ரூ.2.7 லட்சம் கோடி) நமது பங்களிப்பாக இருந்தது. 2021-இல் இந்தியாவின் பங்களிப்பு உலக ஜிடிபி-யில் 9.5% (சுமார் ரூ.285 லட்சம் கோடி). கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு ஏனைய உலக நாடுகளில் பொருளாதாரம் பின்னடைவைச் சந்திக்கும்போது, இப்போது உலக ஜிடிபி-யில் இந்தியாவின் பங்கு 17%.
இந்தியா விடுதலை பெற்றபோது 1947-இல் நமது மக்கள்தொகை 34 கோடி. அப்போது  எழுத்தறிவு உள்ளவர்களின் எண்ணிக்கை 4.1 கோடி (12%). இப்போது 2020-இல் இந்தியாவின் மக்கள்தொகை 134 கோடியாக உயர்ந்தபோது, அதில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 100 கோடி (74%). உலக வரலாற்றில் 75 ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் கல்வி வளர்ச்சியை எட்டிய நாடு வேறு எதுவும் இருக்க வழியில்லை. 
விடுதலை பெற்றபோது இந்திய மக்கள்தொகையில் ஏறத்தாழ 80%, அதாவது 25 கோடி பேர் வறுமை கோட்டுக்குக் கீழே இருந்தனர். திட்டக் கமிஷன் உறுப்பினராக இருந்த பேராசிரியர் பி.எஸ். மின்ஹாஸ், 1956-இல் முதன் முறையாக வறுமை கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் குறித்த கணக்கெடுப்பை முன்னெடுத்தார். அதன்படி, இந்தியாவில் 21.5 கோடி (65%) மக்கள் வறுமை கோட்டுக்குக் கீழே இருப்பதாக கணக்கிடப்பட்டது. 
2017-இல் நாளொன்றுக்கு 2,200 கலோரிக்கும் குறைவாக ஊட்டச்சத்து பெறும் வறுமை கோட்டுக்குக் கீழேயுள்ள மக்களின் எண்ணிக்கை 26.9 கோடி என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இப்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் பார்ப்பதாக இருந்தால், வறுமை கோட்டுக்குக் கீழே இருப்பவர்களின் விகிதம் 10%-க்கும் குறைவு.
1947-இல் இந்தியாவின் ஜிடிபி-யில் வேளாண் துறையின் பங்களிப்பு 54%. 2020-இல் சுமார் 13%. இந்தியா விடுதலை பெற்றபோது 60% மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் மட்டுமே இருந்தது. 2020-இல் அது சுமார் 52%-ஆக (65 கோடி பேர்) குறைந்திருக்கிறது. மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க விவசாயம் அல்லாத வேலைவாய்ப்புகள் பெருகுவதன் மூலம்தான் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வறுமையிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியும். இந்தியா அந்த இலக்கை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. 
இன்று நடைபெற இருக்கும் இந்தியாவின் 75-ஆவது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் பங்கேற்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்றுக்கொண்டபடி வர இயலாது என்று தெரிவித்தபோது, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைபேசி அழைப்பை ஏற்று இமானுவல் மேக்ரான் இந்தியா வந்திருக்கிறார் என்பதை நன்றியுடன் நாம் நினைவில் கொள்ள  வேண்டும். 
அதிபர் மேக்ரான் 2017-இல் பிரான்ஸ் அதிபராக பொறுப்பேற்ற பிறகு இந்தியாவுக்கு மூன்றாவது முறையாக வருகை தந்திருக்கிறார். இதுவரை ஆறு முறை நமது குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டிருக்கிறார்கள். மிக அதிக தடவைகள் இந்திய குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட நட்பு நாடு பிரான்ஸ் என்பதையும் குறிப்பிட வேண்டும். 
இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையேயான நட்புறவு காலத்தைக் கடந்தது. நூற்றாண்டுகளுக்கு முன்பு மகாராஜா ரஞ்சித் சிங்கின் ராணுவத்தில் 2,000-க்கும் அதிகமான பிரான்ஸ் வீரர்கள் இருந்தனர். அவர்களில் சிலர் ராணுவத் தளபதிகளாக பணியாற்றி இருக்கிறார்கள். பிரான்ஸ் நாட்டின் செயின்ட் ட்ரோபஸில் உள்ள ரஞ்சித் சிங்கின் சிலை சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்ப்பதாகத் திகழ்கிறது.
17-ஆவது நூற்றாண்டில் தொடங்கி 1954 வரை புதுவை உள்பட இந்தியாவின் சில மாநிலங்களில் பிரெஞ்சு காலனிகள் இருந்திருக்கின்றன. காலனிய இந்திய வரலாற்றில் பிரான்ஸுக்கு முக்கியமான இடம் உண்டு என்பது மட்டுமல்லாமல், இந்தியாவின் பல்வேறு துறைகளில் பிரெஞ்சு தாக்கமும் காணப்படுகிறது.
இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே நட்புறவு ஒப்பந்தம் ஏற்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்தியாவுடன் முதன்முதலாக நட்புறவு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்ட மேலை நாடு பிரான்ஸ் என்பதும், அதன் நீட்சியாகத்தான் இந்தியா பல இருநாட்டு, பலநாட்டு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொண்டது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
பிரான்ஸ் அதிபரின் வருகையின்போது பல ராணுவ ஒப்பந்தங்கள் கையொப்பமாக இருக்கின்றன. ஏற்கெனவே 26 புதிய ரஃபேல் கடற்படை போர் விமானங்களும், மூன்று ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பல்களும் இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றன. விண்வெளி ஆய்விலும் இரு நாடுகளுக்கும் இடையே தொழில்நுட்ப ரீதியாக நெருக்கம் தொடர்கிறது. வர்த்தக ரீதியாக குறிப்பிடும்படியான பரிமாற்றம் இல்லை என்றாலும், சர்வதேச அரசியலில் இந்தியாவின் நம்பகமான நட்புறவு நாடாக பிரான்ஸ் தொடர்கிறது. 
இந்தியாவை காலனிப்படுத்த விரும்பிய நாடு, குடியரசு தின விழாவில் நட்பு நாடாகக் கலந்துகொள்கிறது. இதுதான் இந்தியாவின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் அடையாளம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com