மேற்கு வங்கத்தில் இளநிலை மருத்துவர்களின் போராட்டம் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிப்பது அனைத்துத் தரப்பினரையும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி இரவில் பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, பெண் பயிற்சி மருத்துவரின் மரணத்துக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்கத்தில் இளநிலை மருத்துவர்கள் கடந்த 36 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, இந்த சம்பவத்தை தானாக முன்வந்து விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், மருத்துவர்கள் செப்டம்பர் 10-ஆம் தேதி பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது. எனினும்,
இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. கடந்த சில நாள்களாக கொட்டும் மழையிலும் அவர்களது போராட்டம் தொடர்கிறது.
"இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும், ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது ஒழுங்கு
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், கொல்கத்தா காவல் ஆணையர் வினீத் கோயல் பதவி விலக வேண்டும், சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும், மேற்கு வங்கம் முழுவதும் மருத்துவமனைகளில் "மிரட்டல் கலாசாரம்' முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்' என்பதே அவர்களின் 5 அம்சக் கோரிக்கையாகும்.
நடந்த சம்பவத்தை மூடி மறைக்கப் பார்த்தது மாநில நிர்வாகம் என்பதுதான் அவர்களது மிகப் பெரிய குற்றச்சாட்டு. சம்பவம் நிகழ்ந்த மருத்துவமனையின் முதல்வர் சந்தீப் கோஷ் பதவி விலகிய 12 மணி நேரத்தில் கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக நியமிக்கப்பட்டது மாநில அரசின் நோக்கத்தை சந்தேகத்துக்கு உள்ளாக்கியது.
இளநிலை மருத்துவர்கள், பல்வேறு கட்சியினர், பொதுமக்களின் போராட்டம் காரணமாக மாநிலமே போர்க்களம் ஆனதை அடுத்து போராட்டக்காரர்களை சமாதானம் செய்யும் வகையில் சில நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டது.
பாலியல் வன்கொடுமை செய்தால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் மாநில சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இரவு நேர உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் மாநில அரசு அறிவித்தது. ஆனால், இந்த நடவடிக்கைகள் ஒப்புக்கானவை மட்டுமே என்று இளநிலை மருத்துவர்கள் கருதுகிறார்கள்.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு என்று தனி அறைகள், கழிப்பறைகள் அமைத்துத் தருமாறும் கண்காணிப்பு கேமரா நிறுவுமாறும் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. இந்தச் சூழலில், பேச்சுவார்த்தைக்கு வருமாறு இளநிலை மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். ஆனால், பேச்சுவார்த்தை பொதுவெளியில் நடத்தப்பட வேண்டும் என்றும் நேரடியாக ஒளிபரப்பப்பட வேண்டும் என்றும் இளநிலை மருத்துவர்கள் நிபந்தனை விதித்தனர்.
மாநிலத்தின் நலனுக்காக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யத் தயார் என்றும் மம்தா பானர்ஜி அறிவித்துப் பார்த்தார். இதற்கும் மருத்துவர்கள் இணங்காததால் போராட்டக் களத்துக்கே கடந்த சனிக்கிழமை நேரில் சென்றார். நோயாளிகளின் நலன் கருதி மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டார்.
மேற்கு வங்கத்தில் பெரும்பாலானோர் அரசு மருத்துவமனைகளையே நம்பி உள்ளனர். அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால் கடந்த ஒரு மாதத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் 29 பேர் இறந்துவிட்டனர் என்றும் மாநில அரசு கூறுகிறது.
அந்த மாநிலத்தில் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் துர்கா பூஜை மிகவும் புகழ்பெற்றது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பந்தல்களில் துர்கை சிலை நிறுவப்படும். இதற்காக ஒவ்வொரு பூஜை கமிட்டிக்கும் மாநில அரசு ரூ.85 ஆயிரம் நிதி உதவி அளிக்கிறது. ஒரு மாதத்துக்கு மாநிலமே விழாக் கோலம் பூணும். ஏற்பாடுகள் களை கட்டும். கடந்த ஆண்டு துர்கா பூஜையின்போது ரூ.80 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது என்று மம்தா பானர்ஜியே குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஆண்டு துர்கா பூஜை அக்டோபர் 9 முதல் அக்டோபர் 12 வரை கொண்டாடப்பட உள்ளது. ஆனால், பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது மாநிலத்தில் அனைத்து தரப்பினரின் இதயத்தையும் தொட்டுள்ளது. அதனால் பல்வேறு தரப்பினரும் ஆயிரக்கணக்கில் திரண்டு அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் மாநிலமே களையிழந்து காணப்படுகிறது. துர்கா பூஜைக்காக மாநில அரசு அளிக்கும் ரூ.85,000 நிதி உதவி வேண்டாம் என்று பல கமிட்டிகள் அறிவித்திருப்பதில் இருந்து பொதுமக்கள் எந்த அளவுக்கு ஆத்திரம் அடைந்துள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
போராடுவதையே தனது அரசியல் வாழ்க்கையாக கொண்ட மம்தா பானர்ஜிக்கு இளம் மருத்துவர்களின் போராட்டம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
மாநிலத்தின் அனைத்து தரப்பினரின் நலன் கருதி பிரச்னை முடிவுக்கு வர வேண்டும். இனியும் போராட்டம் தொடர்வது பிரச்னைக்கான தீர்வு அல்ல.