மா‌ற்றி யோசி‌க்க வே‌ண்​டு‌ம்!

வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு, வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வேண்டாம் என கூறியிருப்பதைப் பற்றி...
மா‌ற்றி யோசி‌க்க வே‌ண்​டு‌ம்!
Published on
Updated on
2 min read

வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு, வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகளில் ‘குறைந்தபட்ச இருப்புத் தொகை’ கட்டாயம் என்பது வேண்டாம் எனக் கூறி, அதற்கான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

பாரத ஸ்டேட் வங்கியைத் தொடர்ந்து, கனரா வங்கி, பரோடா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி ஆகியவையும் அண்மையில் "குறைந்தபட்ச இருப்புத் தொகை' விதிமுறையைக் கைவிட்டுவிட்டன. மற்ற வங்கிகளும் விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.

நாடு முழுவதும் சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகளின் செயல்பாடுகளும், அவற்றின் பங்களிப்பும் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு வங்கி நிர்வாகிகள் அண்மையில் மும்பையில் நிதி அமைச்சக அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்தாலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சுமார் 27 கோடி சேமிப்புக் கணக்குகளைக் கொண்ட பொதுத் துறை வங்கிகளில் பெரியதான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களின் பல கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லையெனக் கூறி, கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் சுமார் ரூ.2,434 கோடியை அபராதமாக வசூல் செய்தது. இது அந்த வங்கியின் நிகர லாபத் தொகையைவிட அதிகம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமான இந்த உண்மையால் நாடெங்கிலும் அந்த வங்கிக்கு எதிராகக் கடும் விமர்சனங்களும், எதிர்ப்புகளும் எழுந்ததன் எதிரொலியாக 2020 மார்ச் முதல் அபராதம் வசூலிப்பதை பாரத ஸ்டேட் வங்கி கைவிட்டது. அது மட்டுமின்றி குறைந்தபட்ச இருப்புத் தொகையே வேண்டாம் எனக் கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறையை அமல்படுத்திய பொதுத் துறை வங்கிகள் அனைத்தும் கடந்த 2024 ஜூலை வரையில் அதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களிடமிருந்து மொத்தம் ரூ.8,495 கோடியை அபராதமாக வசூலித்துள்ளன. அதாவது, ஆண்டுக்கு ரூ.1,699 கோடி வருமானம் ஈட்டியுள்ளன.

குறைந்தபட்ச இருப்புத் தொகை கட்டாயமில்லை என்பதால் பெண்கள், விவசாயிகள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்கள் வங்கிக் கணக்கு தொடங்க ஆர்வம் காட்டலாம். வாடிக்கையாளர்கள் அச்சமின்றி வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். அனைவரையும் வங்கிச் சேவைக்குள் கொண்டு வர வேண்டும் என்ற மத்திய அரசின் இலக்கை அடையலாம். அதற்காகத்தான், கடந்த 2014 ஆகஸ்ட்டில் சுழி இருப்புடன் (ஜீரோ பேலன்ஸ்) கூடிய பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த 11 ஆண்டுகளில் சுமார் 55.69 கோடி ஜன்தன் யோஜனா கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 66.6 சதவீத கணக்குகள் கிராமங்களிலும், கிராமங்களையொட்டியுள்ள நகரங்களிலும் தொடங்கப்பட்டுள்ளன. கணக்குத் தொடங்கியவர்களில் 55.6 சதவீதம் பேர் பெண்கள். நிகழாண்டு ஜூன் வரையில் அந்தக் கணக்குகளில் சுமார் ரூ.2.60 லட்சம் கோடி இருப்பு உள்ளது. சுழி இருப்புடன் கணக்குத் தொடங்கப்பட்டாலும், யாரும் அந்தக் கணக்கில் பணம் வைக்காமல் இல்லை.

குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை என்பது தனிப்பட்ட வாடிக்கையாளருக்கு சாதகமானதாக இருக்கலாம். ஆனால், பொது நலனுக்கான வங்கிகளின் நிதி ஆதாரம் மற்றும் நிலைத்தன்மையைப் பாதிக்காதா என்ற கேள்விக்கு, பாதிக்கும் என்பதுதான் பதிலாக இருக்கும். குறைந்தபட்ச இருப்புகளின் மூலம் கிடைக்கும் கூட்டு நிதியானது வங்கிகள் கடன் வழங்கவும், அதன்மூலம் வருமானம் ஈட்டவும் பயன்பட்டன . அந்த நிதி இல்லாதபோது கடன் வழங்கல் பாதிக்கலாம். அது மறைமுகமாக நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

வங்கிகள் வசூலித்து வந்த அபராதத் தொகையைக் கொண்டு இயக்கச் செலவுகள் மற்றும் வாராக் கடன் பாதிப்புகள் சரிகட்டப்பட்டு வந்தன. இனிமேல் அதற்கு மாற்று ஆதாரங்களைத் தேட வேண்டியதாக இருக்கும். ஒட்டுமொத்த சேமிப்பைக் குறைத்து, அதை வேறு வழிகளில் செலவு செய்யும்போது உருப்படியான முதலீடுகளுக்கு நிதித் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உண்டு.

குறைந்தபட்ச இருப்பு இல்லை எனக் கூறி, அபராதம் வசூலிப்பதுதான் கைவிடப்பட வேண்டிய ஒன்றே தவிர, அனைத்து சேமிப்புக் கணக்குகளுக்கும் இருப்பே தேவையில்லை

என்பது மறைமுகமாக வங்கிகளின் நிதிநிலையில் எதிர்மறையான விளைவைத்தான் ஏற்படுத்தும். சேமிப்புக் கணக்குகளில் உள்ள இருப்புக்கு தற்போது வழங்கப்படும் வட்டி விகிதத்தை உயர்த்தினால் வாடிக்கையாளர்கள் தாமாகவே முன்வந்து கணக்குகளில் இருப்பு வைக்கும் நிலை ஏற்படும்.

வங்கிகள் இந்த நிதி இழப்பைச் சரிகட்ட புதிய கணக்குகள் மற்றும் சேவைகள் மூலம் வருமானம் ஈட்ட முயற்சிக்க வேண்டும். வாராக்கடன்களை வசூலிப்பது, பங்குச் சந்தையைவிடப் பாதுகாப்பான வைப்புக் கணக்குகளை ஊக்குவிப்பது போன்ற முயற்சிகளில் வங்கிகள் இறங்கியாக வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com