சுபான்ஷு சுக்லா
சுபான்ஷு சுக்லா

கனவு நனவாகும் தருணம்!

விண்வெளி நிலையத்துக்குச் சென்று தங்கியிருந்து மீண்டும் திரும்பியிருக்கும் 4 வீரா்களும் 300-க்கும் மேற்பட்ட முறை பூமியை வலம் வந்துள்ளனா்.
Published on

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து சோதனைகளை நடத்திவிட்டு இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 3 வீரர்களும், வீராங்கனையும் 'டிராகன் கிரேஸ்' விண்கலத்தில் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியிருக்கிறார்கள். 20 நாள்களுக்குப் பின், மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்கும் அவர்களது பயணம் மனித இனத்தைத் தலைநிமிர வைத்திருக்கிறது.

பூமியிலிருந்து 400 கி.மீ. உயரத்தில் மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் சுற்றி வருகிறது சர்வதேச விண்வெளி நிலையம். ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ், அந்த விண்வெளி நிலையத்துக்குச் சென்று அந்த விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து மீண்டும் திரும்பியிருக்கும் 4 வீரர்களும் 310-க்கும் மேற்பட்ட முறை பூமியை வலம் வந்துள்ளனர். மொத்தம் 1.3 கோடி கி.மீ. விண்வெளியில் பயணம் செய்துள்ளனர்.

18 நாள்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த நால்வரும், உயிரி மருத்துவ அறிவியல், நரம்பு அறிவியல், வேளாண்மை, விண்வெளி தொழில்நுட்பம் எனப் பல்வேறு பரிமாணங்களில் 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை அங்கே மேற்கொண்டனர். இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட சுபான்ஷு சுக்லாவும் இஸ்ரோவின் சார்பில் சில ஆய்வுகளை மேற்கொண்டார். திசு மறு உருவாக்கம், விதை முளைப்பு, நீலப் பசும்பாசி வளர்ப்பு, கதிரியக்க விளைவுகள், மனித உடல் இயக்கம், மிதக்கும் நீர்க்குமிழி உள்பட நுண்ஈர்ப்பு விசை சார்ந்த 7 முக்கிய ஆய்வுகளை சுக்லா விண்வெளியில் மேற்கொண்டார். அங்கு முளைவிட்ட பச்சைப் பயறு, வெந்தயம் ஆகியவை இந்திய விஞ்ஞானிகளால் பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட உள்ளன.

கடந்த 40 ஆண்டுகளாக விண்வெளியில் இந்தியர் ஒருவர் வலம் வராமல் இருந்த குறையை சுபான்ஷு சுக்லாவின் பயணம் அகற்றியிருக்கிறது. 1984-இல் ரஷிய விண்கலத்தில் பூமியைச் சுற்றி வந்த ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு, இந்தியர் ஒருவர் விண்வெளியில் பறந்தது மட்டுமல்ல, சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து திரும்பியிருப்பது மிகப் பெரிய வெற்றி. ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ், சுபான்ஷு சுக்லா விண்வெளியில் தங்கியிருந்ததும், நடத்திய ஆய்வுகளும் இந்தியாவுக்குப் பலவகைகளில் பயனளிக்க இருக்கின்றன.

சில ஆண்டுகளாகவே இந்தியா தன்னுடைய நிலைமைக்கு அதிகமாகவே விண்வெளி சாதனைகளைப் புரிந்து வருகிறது. பூமியைச் சுற்றியுள்ள பல கிரகங்களுக்கு விண்கலங்களை வெற்றிகரமாக அனுப்ப முடிந்தது என்றாலும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முடியாமல் இருந்த குறை இப்போது அகன்றிருக்கிறது. இந்தியாவின் விண்வெளிக் கனவுகளை நனவாக்கும் அடையாளமாக சுபான்ஷு சுக்லாவின் ஆக்ஸியம்-4 திட்டப் பயணத்தை நாம் பார்க்க வேண்டும்.

1963-இல் சைக்கிளில் ராக்கெட் பாகங்களைக் கொண்டு சென்று, கேரள மாநிலம், தும்பா விண்வெளி நிலையத்திலிருந்து முதலாவது ராக்கெட்டை செலுத்தியதில் இருந்து தொடங்குகிறது இந்தியாவின் விண்வெளி ஆய்வு முயற்சி.

1971-இல் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவன் விண்வெளி நிலையம் தொடங்கப்பட்டது. அங்கிருந்து இந்தியாவின் வரலாற்றுச் சாதனைகளான சந்திரயான்-1 (2008), மங்கள்யான் (2013), சந்திரயான்-3 (2023) உள்ளிட்ட விண்வெளி கிரகங்களை நோக்கிய வெற்றிப் பயணங்கள் குறிப்பிடத்தக்கவை.

சமீபகாலமாக, தனியார் துறையும் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பல விண்கோள் ஏவுகணை முயற்சிகள் வர்த்தக ரீதியாகவும் செயல்படத் தொடங்கியிருக்கின்றன. குறைந்த செலவில் அதீத தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய விண்கலன்களை உருவாக்கும் மையமாக ஸ்ரீஹரிகோட்டா மாறியிருக்கிறது.

இந்திய குடியரசின் முன்னாள் தலைவரும், விண்வெளி விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாமின் தலைமையில், 1979 ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதன்முறையாக ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து எஸ்எல்வி-1 ஏவப்பட்டதிலிருந்து தொடங்கி, இப்போது ஏறத்தாழ 62 எஸ்எல்விக்களும், 16 பிஎஸ்எல்விக்களும் ஏவப்பட்டு விட்டன.

சந்திரனுக்கும், செவ்வாய்க்கும், சூரியனுக்கும் விண்கலங்களை வெற்றிகரமாக அனுப்பியதைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். பாரதிய அந்தரிக்ஷ ஸ்டேஷன் (பிஏஎஸ்) என்கிற பெயரில் விண்வெளியில் ஆய்வு நிலையத்தை 2035-க்குள் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கான விண்கலன்கள், ஆய்வுக் கருவிகள் உள்ளிட்டவற்றை 2028-ஆம் ஆண்டு முதல் விண்வெளியில் ஒவ்வொன்றாகச் செலுத்தி, ஒருங்கிணைப்பதுதான் இலக்கு. இந்தியாவின் பிஏஎஸ் ஆய்வு மையம் உருவானால் நமது விண்வெளி வீரர்கள் அதில் சென்று தங்கி, ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளலாம்.

பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரசாத், சுபான்ஷு சுக்லா ஆகிய நால்வரும் அடுத்து வரவிருக்கும் மனிதர்களுடன் கூடிய விண்வெளிக்கான இந்தியாவின் விண்கலன்களில் பயணிப்பதற்கு தயார் செய்யப்படுகிறார்கள். அவர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லாதான் தற்போது ஆக்ஸியம் திட்டத்தின் கீழ், விண்வெளிப் பயண சாதனையை முடித்துக் கொண்டு திரும்பி இருக்கிறார்.

நாம் சில கசப்பான உண்மைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தியாவில் ஆய்வுகளுக்காக ஒதுக்கப்படும் நிதி மிக மிகக் குறைவு. உலகின் நான்காவது பொருளாதாரம் என்று சொல்லிக் கொண்டாலும், அமெரிக்கா (3.5%), சீனா (2.7%), தென்கொரியா (5%), பிரேஸில் (1.2%) ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, நமது ஒதுக்கீடு மொத்த ஜிடிபியில் வெறும் 0.7% மட்டுமே. அடுத்தாற்போல, விண்வெளி வீரர்களுடன் செலுத்தப்பட இருக்கும் ககன்யான் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டிருப்பது வெறும் 1.5 பில்லியன் டாலர் மட்டுமே!

X
Dinamani
www.dinamani.com