ஆணவக் கொலை என்பது தமிழ்நாட்டுக்கு புதிதல்ல என்றாலும் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் ஆணவக் கொலைகளைத் தடுக்க முடியாமல் சமுதாயமும் அரசும் தடுமாறுகின்றன. ஜாதி மாறிய காதல், கலப்புத் திருமணம் காரணமாக ஆண்களைவிடப் பெண்கள்தான் ஆணவக் கொலைக்கு அதிகமாக உள்ளாகிறார்கள். அவற்றைத் தடுக்க பொதுநல அமைப்புகளோ, தனி சட்டமோ இல்லை.
ஜாதி மாறி காதல், காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு, திருமண பந்தத்துக்கு வெளியே முறையற்ற பாலியல் உறவு, பாலியல் வன்கொடுமை குடும்பத்துக்கு இழுக்கு எனக் கருதுவது, விவாகரத்தை நிராகரிப்பது போன்றவற்றால் குடும்பம் அல்லது ஜாதிக்கு அவமானம் எனக் கருதி பெண்ணையோ அல்லது ஆணையோ கொடூரமாக கொலை செய்யும் ஆணவக் கொலைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.
ஜாதிய பாகுபாடு மற்றும் மோதல்களுக்கு அடிக்கடி இலக்காகும் தென் மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில், பட்டியலினத்தைச் சேர்ந்த 27 வயது மென்பொருள் பொறியாளர் சி. கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நடந்திருக்கின்றன.மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த சித்த மருத்துவரான தனது சகோதரியை கவின் செல்வ கணேஷ் சந்திப்பதிலும், பேசுவதிலும் சுர்ஜித்துக்கு உடன்பாடு இருக்கவில்லை. அதனால், அந்தப் பொறியாளரை வெட்டிக் கொன்றதாக பெண்ணின் 23 வயது இளைய சகோதரர் சுர்ஜித் காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பொறியாளரும், அந்தப் பெண்ணும் பள்ளிப் பருவத்தில் அறிமுகமாகி காதலித்து வந்தவர்கள். அவர்களின் காதல் இப்போது தெரிய வந்ததால், பொறியாளர் கவின் செல்வகணேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். சுர்ஜித் மீது பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். காவல் துறையில் உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் தாய்-தந்தை இருவரும் வழக்கில் சேர்க்கப்பட்டு, தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
2003-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் புதுக்கூரைப்பேட்டையில் ஜாதி மாறி காதலித்து திருமணம் செய்துகொண்ட கண்ணகி-முருகேசன் ஆகிய இருவரையும் ஊரார் முன்னிலையில் பொது இடத்தில் கட்டி வைத்து விஷத்தைக் கொடுத்து கொன்று சடலத்தை தீயிட்டுக் கொளுத்தி எரித்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது.
2016-ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கெüசல்யா என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட பட்டியலினத்தைச் சேர்ந்த சங்கர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். 2023-இல் திருப்பூரில் பட்டியலினப் பெண்ணை திருமணம் செய்ததற்காக இளைஞர் ஒருவர் அவரது தந்தையால் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார்.
குடும்பப் பெருமை மற்றும் ஜாதிப் பெருமையின் பெயரில் செய்யப்படும் ஆணவக் கொலைகளுக்கு துல்லியமான அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் இல்லை. நாடு முழுவதும் இதே நிலைமை காணப்பட்டும் கூட தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் இதற்கு தனியான புள்ளிவிவரம் இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த 2017-க்கு பிறகு 65 ஆணவக் கொலைகள் நிகழ்ந்துள்ளதாகத் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், காவல் துறையில் 2015 முதல் 2021 வரையில் 3 கொலைகள் மட்டுமே ஆணவக் கொலைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்ச் சமூகத்தில் ஆணவக் கொலைகள் ஒன்றும் புதிதல்ல என்பதற்கு 16-ஆம் நூற்றாண்டிலிருந்து இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதற்கான கதைப் பாடல்கள் ஆதாரமாக உள்ளன. சிறு தெய்வமான காத்தவராயன் கதை, காணிக் கதை, வங்களரசன் கதை ஆகியவையும் ஒரு வகையில் ஆணவக் கொலையில் பிறந்தவையே. கல்வி, சமூகம், பொருளாதாரம் மேம்பட்டுவிட்ட 21-ஆம் நூற்றாண்டிலும் ஆணவக் கொலைகள் தொடர்வதும், அவற்றைத் தடுக்க முடியாமல் போவதும் ஆட்சியாளர்களின் மெத்தனத்தைக் காட்டுகிறது.
தனி மனித சுதந்திரத்தை உறுதி செய்யும் அரசமைப்புச் சட்டம் 21-ஆவது பிரிவானது ஒருவர் தனது விருப்பப்படி துணையைத் தேர்ந்தெடுப்பது, சுதந்திரமாக வாழ்வது உள்ளிட்ட உரிமைகளை அளிக்கிறது. ஆனால், இறுக்கமான ஜாதிய கட்டமைப்பு கொண்ட சமுதாயம் அதை ஏற்றுக்கொள்ள மறுப்பதன் வெளிப்பாடுதான் ஆணவக் கொலைகள்.
2018-இல் சக்திவாகினி எதிர் மத்திய அரசு வழக்கில், ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ஏழு ஆண்டுகள் ஆகியும் இதுவரை மத்திய அரசோ, ராஜஸ்தானைத் தவிர மற்ற மாநில அரசுகளோ எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.) கீழ் வழக்கமான கொலை வழக்காகப் பதிவு செய்து மேற்கொள்ளப்படும் விசாரணைகளால் ஆணவக் கொலைகள் பூசி மெழுகப்படுகின்றனவே தவிர அவற்றைத் தடுக்க முடிவதில்லை.
தமிழ்நாட்டில் பட்டியலின உரிமைகளுக்காக போராடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த 2022-இல் தமிழக முதல்வரிடம் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்ட முன்வடிவு நகல் ஒன்றை அளித்தன. அதன் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் அவசியம்தான் என்றாலும், இறுக்கமான ஜாதிய கட்டமைப்பும், அதன் மீதான மூர்க்கத்தனமான பற்றுதலும் இருக்கும்வரை ஆணவக் கொலை
களைத் தடுக்க முடியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.