இயற்கை இடிதாங்கி!

மின்னல் தாக்குதல் மரணங்களுக்கும், பனைமரங்களுக்கும் தொடர்பு இருப்பது இப்போது தெரியவந்திருக்கிறது.
பனை மரங்கள்
பனை மரங்கள்
Published on
Updated on
2 min read

ஆண்டுதோறும் இந்தியாவில் 2,000க்கும் அதிகமானோர் மின்னல் பாய்ந்து உயிரிழக்கிறார்கள் என்பது அதிகம் கவனம் பெறாத உண்மை. மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகிறவர்கள் பெரும்பாலும் விவசாயிகளாகவும், அவர்களின் குடும்பத்தினராகவும்தான் இருக்கிறார்கள். நேரம் காலம் பார்க்காமல் கொட்டும் மழையில்கூட அவர்கள் குடும்பத்தினருடன் விவசாயப் பணியில் ஈடுபடுவதுதான் மின்னல் தாக்கப்பட்டு உயிரிழப்பதற்கான முக்கியக் காரணம்.

2006-2015 இடையேயான 10 ஆண்டுகளில் வெள்ளப்பெருக்காலும், புயலாலும் உயிரிழந்தோரைவிட மின்னல் பாய்ந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகம். முறையான மின் இணைப்பு இல்லாதது, அலுமினியம், தகரக் கூரைகளாலான குடியிருப்புகள் ஆகியவை மின்னல் பாய்வதற்கு முக்கியக் காரணங்கள்.

இடி, மின்னல் குறித்து முன்னெச்சரிக்கை வழங்க "தாமினி' என்கிற செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்னும் பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக கிராமப்புற ஏழை விவசாயிகள் மத்தியில் இப்படியொரு செயலி இருப்பது குறித்த புரிதல் இல்லை.

கடந்த 2016-ஆம் ஆண்டுமுதல் நிகழாண்டு ஏப்ரல் மாதம் வரை பிகாரில் 2,446 பேர் மின்னல் பாய்ந்து உயிரிழந்துள்ளதாகவும், இதில் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே அதிகம் என்றும் அந்த மாநில பேரிடர் மேலாண்மைத் துறையின் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. பிகாரின் தென் மத்திய பகுதியே மின்னல் மரணங்கள் அதிகம் நிகழ்ந்த பகுதியாக அந்த மாநில அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.

2024-ஆம் ஆண்டில் மட்டும் பிகாரில் 303 பேர் மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்தனர். இவர்களில் 219 பேர் அந்த மாநிலத்தின் தென் மத்திய பகுதியைச் சேர்ந்தவர்கள். இடி, மின்னலுடன் மழை பெய்தபோது இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்ததும் ஆய்வில் தெரியவந்தது.

மின்னல் தாக்குதல் மரணங்களுக்கும், பனைமரங்களுக்கும் தொடர்பு இருப்பது இப்போது தெரியவந்திருக்கிறது. பிகாரில் கடந்த 2016-ஆம் ஆண்டு மதுவிலக்கு அமலுக்கு வந்ததையடுத்து, கள் இறக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டது. பிகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கள் வியாபாரம் முடிவுக்கு வந்துவிட்டதால், பனைகள் மீதான ஆர்வம் குறைந்து மரத்தடிகளுக்காக அவற்றை வெட்டும் முடிவுக்கு பலரும் வந்துவிட்டனர். கடந்த 9 ஆண்டுகளில் பிகாரில் பனந்தோப்புகளின் பரப்பளவு 40% அளவுக்கு குறைந்துவிட்டது.

நன்கு உயர்ந்து வளர்ந்த பனைமரங்கள் ஈரத் தன்மையுடன் இருப்பதால், மழைக் காலங்களில் அதன் மீது மின்னல் பாயும்போது, அதை ஈரப்பதம் உள்வாங்கி தரைக்குள் அனுப்பி பாதிப்பில்லாமல் செய்துவிடும். தற்போது, பனைகள் வெட்டப்படுவதால் மின்னல் பாய்ந்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பனைகள் வெட்டப்படுவதை சாதாரணமான விஷயமாகக் கடந்து செல்லக் கூடாது, அது பேரழிவை ஏற்படுத்தும் என்று வேளாண் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பனைமரத்தின் தண்டு, வேர் பகுதி இயற்கையாகவே ஈரப்பதத்தைக் கொண்டவை. அது மின்சாரத்தை (மின்னலை) தடையின்றி கடத்தும் தன்மை கொண்டது. மின்னல் மரணங்களைத் தடுக்க பெரிய அளவில் பனை சாகுபடியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளதாக வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பனை விதைகளை நட்டு பனைமரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும் என்று கிராம மக்களுக்கு பிகார் பேரிடர் மேலாண்மை ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. பனை விதைகளை அடர்த்தியாக நடவு செய்து, பனந்தோப்புகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான், மின்னல் தாக்கும் வாய்ப்பை அவை வெகுவாகக் குறைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, கள் இறக்கும் பருவத்தில் "நீரா' பானம் (மது அல்லாத சாறு) உற்பத்தி, விற்பனையை ஊக்குவிக்கும் திட்டத்தையும் பிகார் அரசு தொடங்கியுள்ளது. இதனால், சுமார் 20,000 பனை விவசாயிகளின் நலன் காக்கப்படுவதுடன், பனைமரங்களும் பாதுகாக்கப்படும் என அரசு கருதுகிறது. இந்த நடவடிக்கையை பனைத் தொழிலில் ஈடுபடும் பாசி சமுதாய மக்கள் வரவேற்றுள்ளனர்.

மின்னல் மரணங்களால் மத்திய பிரதேசம், ஒடிஸô மாநிலங்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. ஒடிஸô மாநில அரசு கடந்த ஆண்டுமுதல் பனைமரங்கள் வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. அதன்படி, 19 லட்சம் பனை மரக் கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளது.

வங்கதேசத்திலும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த பனைமரங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், மின்னல் மரணங்கள் குறையவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது நடப்படும் பனங்கன்று மின்னலை எதிர்கொள்ளும் அளவுக்கு வளர்வதற்கு சுமார் 12 ஆண்டுகள் ஆகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

பனைமரங்களை வெட்டுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது மின்னல் பாய்ந்து ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற்கான நேர்மறை நடவடிக்கையாகும். நகர்ப்புற கட்டடங்களில் இடி, மின்னல் பாதிப்புகளைத் தடுக்க இடிதாங்கியை நிறுவுவதுபோல, ஊரகப்புற திறந்தவெளிகள், மேய்ச்சல் பரப்புகளில் மனித உயிர்களைக் காக்கும் வகையில் பனைமரங்கள் நடப்படுவது நல்லது.

அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ச்சி பெறாத காலத்திலேயே மின்னல் மரணங்களைத் தடுக்க இயற்கை மின்கடத்தியான பனைமரங்களை நம் முன்னோர் வளர்த்திருக்கிறார்கள். மக்களை மின்னல் மரணங்களில் இருந்து காக்கும் இயற்கை இடிதாங்கிகளாக இருக்கும் பனைமரங்களை அழிவின் பிடியில் இருந்து காப்பது நமது கடமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com