
அறிதிறன்பேசி வாயிலாக இணையப் பயன்பாடு ஏற்பட்டதையடுத்து, செயலிகள் சார்ந்த சேவைத் தொழில்கள் அதிகரித்திருக்கின்றன. இதனால், ஏராளமானோர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். செயலி அடிப்படையில் இயக்கப்படும் வாடகை வாகனங்கள் பெருநகரங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
24 மணி நேரமும் கிடைக்கும் வாடகை கார், ஆட்டோ சேவையின் அடுத்தகட்டமாக நாம் செல்லும் இடத்துக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் "பைக் டாக்ஸி' எனப்படும் இரு சக்கர வாகனச் சேவையும் செயலி அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், உரிய நேரத்தில் சென்றடைய முடிவதால் பைக் டாக்ஸி வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ இந்தத் தொழிலில் ஈடுபட அவர்களுக்கு தனியாக முதலீடு தேவையில்லை. தாங்கள் பயன்படுத்தும் இரு சக்கர வாகனத்தைக் கொண்டே இந்த பைக் டாக்ஸி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகை சேவையால் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனக் கூறி, நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூரில் 1.20 லட்சம் பைக் டாக்ஸிகள் இயக்கப்பட்ட நிலையில், ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அதேவேளையில், பைக் டாக்ஸியில் பயணித்த பெண்களிடம் பாலியல் அத்துமீறல் சம்பவங்களும் நிகழ்ந்தன. 2021-ஆம் ஆண்டு கடும் கட்டுப்பாடுகளுடன் பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பாலியல் அத்துமீறல் புகாரையடுத்து, 2024-இல் அனுமதியை திரும்பப் பெற்ற கர்நாடக அரசு, அதற்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பைக் டாக்ஸி நிறுவனங்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. 1.20 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், கார், ஆட்டோக்களைவிட இரு சக்கர வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகவும் உள்ளதால் பைக் டாக்ஸிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, அனுமதியளிக்க வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், பைக் டாக்ஸி தடையை அங்கீகரித்து கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் 16-ஆம் தேதி உத்தரவிட்டது.
பைக் பார்சல், மோட்டோ கூரியர் என்று செயலிகளில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பைக் டாக்ஸிகள் இயக்கப்படுகின்றன. அவ்வாறு இயக்கப்பட்ட பைக் டாக்ஸிகளை போலீஸôர் பறிமுதல் செய்கின்றனர். கர்நாடக மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சம் பேர் பைக் டாக்ஸி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தடையை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பைக் டாக்ஸி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இணையம் சார்ந்த செயலி அடிப்படையிலான வாடகை வாகனங்களை அந்த நிறுவனங்களுடன் இணைந்து இயக்கும் ஆட்டோ, கார் ஓட்டுநர்களும் அவ்வப்போது எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். வாகனங்களுக்கான முதலீடு எதுவும் இல்லாமல் ஒருங்கிணைப்புப் பணிகளை மட்டும் செய்துகொண்டு, தங்களுக்கு குறைந்த லாபத்தை அந்தச் செயலி நிறுவனங்கள் அளிக்கின்றன என்பது அவர்களது குற்றச்சாட்டு. இந்த வகை வாகன சேவைக்கு பொதுமக்கள், இளைஞர்கள் மத்தியில் உள்ள வரவேற்பால் தங்களால் தனித்துச் செயல்பட முடியாத நிலை உருவாகி உள்ளதாகவும் வாடகை வாகனத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுபோன்ற செயலி அடிப்படையிலான போக்குவரத்துத் தொழிலுக்கு கோவா மாநில அரசு தடை விதித்துள்ளது. சுற்றுலாவே பிரதானமாக உள்ள அந்த மாநிலத்தில், பயணிகள் பாதுகாப்பை முன்வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அந்த மாநில வாடகை ஆட்டோ, கார் உரிமையாளர்களின் எதிர்ப்பால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு வாடகை வாகன உரிமையாளர்கள் கொடுத்த அழுத்தமும் அரசின் இந்த நடவடிக்கைக்கு மற்றொரு காரணம்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ, கார் போன்ற வாடகை வாகனங்கள் இயக்கம் இல்லாதபோது, கிராமப்புறங்களில் வில்லு வண்டிகளும், நகர்ப்புறங்களில் கை ரிக்ஷாக்களும், அதைத் தொடர்ந்து சைக்கிள் ரிக்ஷாக்களும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தச் சேவையை வழங்கி வந்தன. அதைத் தொடர்ந்து, மோட்டார் வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்க தொடங்கிய நிலையில், பெரு நகரங்களில் வாடகை ஆட்டோ, கார் சேவைகள் சைக்கிள் ரிக்ஷாக்களை பின்னுக்குத் தள்ளின. ஒருகட்டத்தில் அவை இல்லாத நிலையை வாடகை வாகனங்கள் ஏற்படுத்தின.
காலமாற்றத்துக்கேற்ற வளர்ச்சியாக செயலிவழி பைக் டாக்ஸி கருதப்பட வேண்டும். தற்போது செயலி அடிப்படையிலான வாடகை வாகனங்களுக்கு வரவேற்பு நாளுக்குநாள் பெருகிவருகிறது. இதை முழுவதும் தடை செய்துவிட முடியாது. ஆனால், அவற்றை முறைப்படுத்தி கண்காணிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க முடியும்.
வாடகை வாகன தொழிற்சங்கத்தினரும் இது தொடர்பாக தொடர் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். கர்நாடகத்தில் தினமும் 8 லட்சம் நடைகள் பைக் டாக்ஸிகள் இயக்கப்படுகின்றன. இதனால், அரசுக்கு சரக்கு, சேவை வரியும் கிடைக்கிறது. கர்நாடகத்தைப் போலவே, ஏனைய பெருநகரங்களிலும் இதனால் சரக்கு சேவை வரி கிடைக்கிறது. செயலிகளைக் கண்காணித்து முறைப்படுத்த கொள்கை முடிவுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.