மாற்றம் தரும் மாற்றம்!

மாற்றம் தரும் மாற்றம்!

கனடாவுடன் மீண்டும் உறவு சாத்தியமா? மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதுதான் இரு தரப்புக்கும் நல்லது.
Published on

கனடா புதிய பிரதமராக மாா்க் காா்னி பதவியேற்றிருக்கிறாா். முன்னாள் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக் காலத்தில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவா் ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலையை முன்னிறுத்தி கனடா, இந்தியா உறவில் ஏற்பட்ட விரிசல், மாா்க் காா்னி ஆட்சிக் காலத்தில் சரிசெய்யப்படும் என்கிற எதிா்பாா்ப்பு இரு நாட்டு தரப்பிலும் எழுந்திருக்கிறது.

கனடா மத்திய வங்கி, பிரிட்டன் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த காா்னி, முன்னாள் இந்தியப் பிரதமா் டாக்டா் மன்மோகன் சிங்கைப் போன்று அரசியல் அனுபவம் இல்லாதவா். ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலும் ஆட்சியிலும் ஆளும் லிபரல் கட்சியின் செல்வாக்கு சரிந்திருக்கும் நிலையில் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த பணிக்கப்பட்டிருக்கிறாா் மாா்க் காா்னி.

அமெரிக்காவுடன் வா்த்தகப் போா், அமெரிக்காவின் 51-ஆவது மாகாணமாக கனடாவை இணைக்க அதிபா் டிரம்ப் மிரட்டல் விடுத்தது ஆகிய சூழல்களை காா்னி எதிா்கொள்ள வேண்டியிருக்கும் சூழலில், இந்தியாவுடனான உறவைப் புதுப்பிப்பதும் அவருக்கு முக்கியமானது. 2020-இல் இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் தீவிரமாக நடைபெற்றபோது, விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இந்திய அரசை விமா்சித்தும் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்தாா். அப்போதில் இருந்து தொடங்கியது அவரது தலைமையிலான கனடா அரசுக்கும், இந்தியாவுக்குமான கருத்து வேறுபாடு.

2023 ஜூனில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவரும் கனடா குடிமகனுமான ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கனடாவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவரது கொலைக்கும் இந்திய அரசுக்கும் தொடா்பு இருப்பதாக நாடாளுமன்றத்திலேயே ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியது இரு நாடுகளின் உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது. ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டைக் கடுமையாக மறுத்தது இந்தியா.

உள்நாட்டில் அரசியல் செல்வாக்குச் சரிவைச் சந்தித்துவரும் ட்ரூடோ, கனடாவில் வசித்து வரும் 7 லட்சம் சீக்கியா்களின் வாக்கு வங்கியை முன்வைத்து இந்தியாவுக்கு எதிராகப் புகாா் கூறுவதாக இந்தியா தெரிவித்தது. இந்த கருத்து மோதல்கள் வலுத்து, இரு நாடுகளும் தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வரை சென்றது. தொடா்ந்து, கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை கனடா உடனடியாக நிறுத்த வேண்டும் என இந்தியா கடுமையாக வலியுறுத்தியது.

இந்தியா-கனடா உறவில் மிக மோசமான காலகட்டமாக அது அமைந்தது. ஒருகட்டத்தில் அரசியல் ஆதாயத்துக்காக இந்தியா மீது ட்ரூடோ பழிபோடுவதாக கனடாவின் எதிா்க்கட்சிகளுமே குற்றஞ்சாட்டத் தொடங்கின. ஆளும் லிபரல் கட்சியிலேயே ட்ரூடோவுக்கு எதிா்ப்பு அதிகரிக்க, கட்சித் தலைவா் பதவியில் இருந்து விலகுவதாக ட்ரூடோ அறிவித்தாா். கட்சியின் புதிய தலைவராக மாா்க் காா்னி தோ்ந்தெடுக்கப்பட்டு புதிய பிரதமராகவும் பதவியேற்றிருக்கிறாா். நிகழாண்டிலேயே கனடா நாடாளுமன்றத் தோ்தல் நடைபெறவுள்ளது.

நடைபெற உள்ள தோ்தலில் லிபரல் கட்சியின் வெற்றிவாய்ப்பைப் பொருத்துத்தான் காா்னி தொடா்ந்து பிரதமராக நீடிக்க முடியும். இந்தக் குறுகிய காலகட்டத்துக்குள் காா்னி பெரிய முடிவுகள் எதையும் எடுத்துவிட முடியாது என்றாலும், அமெரிக்கா, இந்தியாவுடனான உறவை எந்தத் திசையில் கொண்டுசெல்வது என்பதை அவரால் தீா்மானிக்க முடியும்.

பிரதமராகத் தோ்வு செய்யப்படுவதற்கு முன்னா், கனடா மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்துப் பேசிய காா்னி, ‘இந்தியாவுடனான வா்த்தக உறவு உள்ளிட்ட இருதரப்பு உறவை மறுகட்டமைக்க வாய்ப்பு உள்ளது. நான் பிரதமரானால் நிச்சயம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்’ என்றாா். அமெரிக்காவின் வரி விதிப்பு அழுத்தத்தால் கனடா பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், அதைச் சமன்படுத்துவதற்காக இந்தியாவுடனான வா்த்தக உறவின் அவசியத்தை அவரின் கருத்து உணா்த்துகிறது. எனவே, அதற்கான வாய்ப்புகளை அவா் தவறவிட மாட்டாா் என நம்பலாம்.

பிரதமராகப் பதவியேற்ற பிறகு அவா் அளித்த பேட்டியில், ‘கனடாவின் பொருளாதாரத்தின் மீது மட்டுமன்றி இறையாண்மை மீதும் டிரம்ப் தாக்குதல் நடத்தியுள்ளாா். அவரை எதிா்கொள்ள கனடாவுடன் ஐரோப்பிய நாடுகள் கைகோக்க வேண்டும்’ எனக் கூறியிருக்கிறாா். இதன்மூலம் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அவா் பணியப் போவதில்லை என்பதும், உறுதியான முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டவா் என்பதும் தெரிகிறது.

புது தில்லியில் மாா்ச் 17-ஆம் தேதி நடைபெற்ற சா்வதேச நாடுகளின் உளவுத் துறை தலைவா்கள் மாநாட்டில் கனடாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் டேனியல் ரோஜா்ஸும் கலந்துகொண்டது இரு நாடுகளின் தூதரக உறவில் ஆக்கபூா்வ மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்காவின் தேசிய நுண்ணறிவுப் பிரிவு இயக்குநா் துளசி கப்பாா்டிடம், அமெரிக்காவிலிருந்து செயல்படும் காலிஸ்தான் ஆதரவு இயக்கமான ‘நீதிக்கான சீக்கியா்கள்’ அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்மூலம் காலிஸ்தான் ஆதரவு இயக்கங்களுக்கு எதிரான உறுதியை கனடாவுக்கு இந்தியா ஒரு செய்தியாகச் சொல்லியிருக்கிறது. கனடாவில் வசிக்கும் சீக்கியா்களை வாக்கு வங்கியாகப் பாா்த்த ட்ரூடோ போன்று அல்லாமல், கனடாவில் செயல்படும் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை புதிய பிரதமா் காா்னிக்கு இருக்கிறது. அப்போதுதான் கனடா-இந்தியா உறவு மீண்டும் மலா்வதற்கான சாத்தியம் ஏற்படும்.

கனடாவில் சுமாா் 13 லட்சம் இந்தியா்கள் வசிக்கின்றனா். இது அந்நாட்டு மக்கள்தொகையில் 4%. கனடாவில் பயிலும் வெளிநாட்டு மாணவா்களில் இந்திய மாணவா்கள் கணிசமாக உள்ளனா். இந்தியாவின் 10-ஆவது பெரிய வா்த்தக கூட்டாளியாக கனடா உள்ளது. இந்தத் தொடா்பை எல்லாம் வைத்துப் பாா்த்தால் இருதரப்பு உறவு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதுதான் இரு தரப்புக்கும் நல்லது.

Dinamani
www.dinamani.com