
இந்தியாவில் எண்ம வர்த்தகம் கடந்த சில ஆண்டுகளில் அபரிமித வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதில் பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட நாட்டின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்கள் தடம்பதித்து கோலோச்சி வருகின்றன. இணையம், அறிதிறன்பேசி பயன்பாடு அதிகரித்த நிலையில், எண்ம வர்த்தகமும் நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது.
மேலும், சில இடங்களில் மட்டுமே கிடைக்கும் பொருள்களைத் தேடிச் சென்று வாங்க வேண்டிய நிலை மாறி, நாம் இருக்கும் இடத்திலேயே அதைத் தேர்வு செய்து பெற்றுக்கொள்ளும் வசதியும் எண்ம வர்த்தகத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தது. விற்பனையாளருக்கும், வாடிக்கையாளருக்கும் இடையே தரகர்போல செயல்படும் இந்த எண்ம வர்த்தக நிறுவனங்கள் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்து வரும் நிலையில், விதிமீறல்களிலும் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்திய தர நிர்ணய பணியக (பிஐஎஸ்) அதிகாரிகள் நாட்டின் பல நகரங்களில் உள்ள சில பன்னாட்டு எண்ம வர்த்தக நிறுவனங்களின் கிடங்குகளில் அண்மையில் சோதனை நடத்தினர். இதில் பொம்மைகள், நெகிழிப் புட்டிகள் மற்றும் ஒலிபெருக்கி போன்ற மின்னணு சாதனங்களின் தரம் குறைவான தயாரிப்புகளைப் பறிமுதல் செய்தனர். இந்தப் பொருள்களில் பிஐஎஸ் தரக் குறியீடு இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இது இந்திய தர நிர்ணய பணியக சட்டம் 2016}ஐ மீறும் செயலாகும்.
தரம் குறைந்த இந்தப் பொருள்களைப் பறிமுதல் செய்வதன் மூலம், பாதுகாப்புத் தரங்களை நிறைவு செய்யும் தயாரிப்புகள் மட்டுமே நுகர்வோருக்கு விற்கப்படுவதை பிஐஎஸ் உறுதிசெய்கிறது என்று எக்ஸ் சமூக வலைதள பதிவில் தேசிய தர நிர்ணய அமைப்பு தெரிவித்திருந்தது.
உத்தர பிரதேச மாநிலம், லக்னெüவில் பன்னாட்டு எண்ம வர்த்தக நிறுவனக் கிடங்கில் பிஐஎஸ் சான்று இல்லாமல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. சென்னை அருகே கடந்த வாரம் இரு பன்னாட்டு எண்ம வர்த்தக நிறுவனக் கிடங்குகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஃபிளாஸ்குகள், மின்விசிறிகள், உலோக குடிநீர் புட்டிகள் உள்பட ரூ.36 லட்சம் மதிப்புள்ள சான்றளிக்கப்படாத 3,376 பொருள்கள் கண்டறியப்பட்டன. பெங்களூரில் உள்ள அந்த நிறுவனங்களின் கிடங்குகளில் நடத்தப்பட்ட சோதனையிலும் தரச்சான்று இல்லாத பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கட்டாய பிஐஎஸ் சான்றிதழ் தேவைப்படும் இந்தப் பொருள்கள் அந்த தரநிலைக் குறியீடு இல்லாமல் சேமிக்கப்பட்டு, தரக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறி விற்கப்படுவது தெரியவந்தது. இந்தப் பொருள்களை வாங்கிப் பயன்படுத்தும் நுகர்வோர் தரமின்மையால் சில அபாயங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இவ்வாறு பொருள்களை விற்போர் மீது வழக்குப் பதிந்து 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது 10 மடங்கு அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.
இந்த நிறுவனங்கள் தேவையான தரச் சான்றிதழ்கள் இல்லாத தயாரிப்புகளைச் சேமித்து வைத்ததன் மூலம் இந்திய தரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சந்தையில் பொருள்களை விற்பனைக்கு பட்டியலிடும் முன்பாக, விற்பனையாளர்கள் குறித்தும், பொருள்களின் தரம் குறித்தும் மதிப்பாய்வு செய்ய பல்வேறு செயல்முறைகளை தங்கள் நிறுவனங்கள் கொண்டுள்ளதாகவும், இதற்காக பல்வேறு தணிக்கைகளை நடத்திய பிறகே அந்தப் பொருள்களின் விற்பனை தொடர்பாக இணையத்தில் காட்சிப்படுத்துவதாகவும் எண்ம வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், இந்தச் சோதனை எண்ம வர்த்தக நிறுவனங்களின் நம்பகத்தன்மையில் சிறு சறுக்கல் ஏற்பட்டிருப்பதைக் காட்டுகிறது. மேலும், கடந்த ஆண்டில் இரு பன்னாட்டு எண்ம வர்த்தக நிறுவனங்கள் தங்கள் வலைதளங்களில் குறிப்பிட்ட சில விற்பனையாளர்களுக்கு முன்னுரிமை அளித்ததும், இதன்மூலம் சட்ட விதிகளை மீறிச் செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
மக்களிடம் நுகர்வுக் கலாசாரம் அதிகரித்துவரும் நிலையில், இளம் தலைமுறையினர் பலரும் எண்ம வர்த்தகத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இதை சரியாகப் பயன்படுத்தி தங்களது வியாபாரக் களத்தை பெரிய நிறுவனங்கள் விரிவுபடுத்தி வருகின்றன. இதனால், உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக வர்த்தக சங்கங்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன.
வீட்டு உபயோக, கைப்பேசி விற்பனைக் கடைகளில் பொருள்களை வாங்கச் செல்வோர் தாங்கள் வாங்க நினைக்கும் பொருள்களைத் தேர்வு செய்துவிட்டு, எண்ம வர்த்தக நிறுவனங்களின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்தப் பொருள்களின் விலையைக் காட்டி பேரம் பேசுகின்றனர் என்று வியாபாரிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாலும், போட்டி நிறைந்த வியாபார யுகத்தில் தரமான பொருள்களைத் தேர்வு செய்வதில் நுகர்வோரின் உரிமையும் மதிக்கப்பட வேண்டும்.
தரமான பொருள்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்ற நம்பிக்கையை எண்ம வர்த்தக நிறுவனங்கள் ஏற்படுத்தியிருந்த வேளையில், அவற்றில் சில நிறுவனங்களின் கிடங்குகளில் கைப்பற்றப்பட்ட தரம் குறைவான பொருள்கள் நுகர்வோர் மத்தியில் அதன் நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்கியுள்ளது. எண்ம வர்த்தக தளங்கள் மூலம் பாதுகாப்பற்ற, சான்றளிக்கப்படாத தயாரிப்புகளின் விற்பனை, விநியோகத்தைத் தடுக்கும் விதமான இந்த நடவடிக்கை வரவேற்புக்குரியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.