பெற்றோரைப் புறக்கணிக்கும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகளின் ஊதியத்தில் 15 சதவீதம் அல்லது ரூ.10,000 (இரண்டில் எது குறைவோ) பிடித்தம் செய்து பெற்றோருக்கு வழங்க வகை செய்யும் மசோதா தெலங்கானா சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 29-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுபோன்ற மசோதா நிறைவேற்றப்படுவது நாட்டிலேயே இதுவே முதல் முறையாகும். தெலங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. இந்த மசோதா குறித்து பேரவையில் பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளை சமுதாயம் புறக்கணிக்கும் சூழல் ஏற்பட வேண்டும் என்றது கவனத்தில் கொள்ளத்தக்கது. அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் பெற்றோரைப் புறக்கணிப்பவர்கள் குறித்து விசாரணை நடத்த நியமன அதிகாரி அமைப்பு மாநில அரசால் அமைக்கப்படும்.
பிள்ளைகளால் புறக்கணிக்கப்படுபவர்கள் இந்த அமைப்பிடம் புகார் அளிக்கலாம். அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மட்டுமின்றி எம்எல்ஏ, எம்எல்சி, மாநகராட்சி உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்தச் சட்டம் பொருந்தும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான ஆணையத்தை கேரள அரசு கடந்த 2025 செப்டம்பரில் அமைத்துள்ளது.
இழிவுபடுத்தப்படுதல், கைவிடப்படுதல், சொத்துப் பிரச்னை போன்றவற்றில் மூத்த குடிமக்களுக்கு இந்த ஆணையம் சட்ட உதவி அளிக்கும். அவர்களின் நல்வாழ்வுக்கான கொள்கைகளை இந்த ஆணையம் பரிந்துரைக்க உள்ளது. மத்திய அரசும் மூத்த குடிமக்களுக்காக சில திட்டங்களைச் செயல்படுத்துகிறது. மாநில அரசுகளின் பங்களிப்புடன் இந்திரா காந்தி தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 200 முதல் ரூ.1,000 வரை வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் ரூ. 5 லட்சம் வரை காப்பீடு பெறக் கூடிய ஆயுஷ்மான் பாரத் திட்டம் மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மாநில அரசுகள், நகராட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படும் 'அடல் வயோ அப்யுதய் யோஜனா' பரவலாகப் பொதுமக்களைச் சென்றடையவில்லை. வாழ்க்கை முறை மாற்றங்களால் இன்று கூட்டுக் குடும்பங்கள் சுருங்கிவிட்டன. மற்றொருபுறம், சொத்துகளைப் பறித்துக் கொண்டு தங்களைப் பிள்ளைகள் கைவிட்டுவிட்டனர் என்று ஆட்சியர்களிடம் மனு அளிக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மூத்த குடிமக்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
முதியோரைப் பாதுகாப்பதற்காகவே டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 'பெற்றோர்களின் பராமரிப்பு, நல்வாழ்வு, மூத்த குடிமக்கள் சட்டம்' நிறைவேற்றப்பட்டது.
தெலங்கானா அரசின் மசோதா மாத ஊதியம் பெறும் ஊழியர்களை மட்டுமே கட்டுப்படுத்தும் என்பதால், ஏற்கெனவே கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டத்தின் வரம்பு விரிவானது. மத்திய அரசின் சட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட பெற்றோர், இணை ஆட்சியர் அல்லது துணை ஆட்சியர் அதிகாரத்தில் உள்ள அதிகாரியின் தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசால் அமைக்கப்பட்டிருக்கும் ஆணையத்தில் புகார் அளிக்கலாம்.
அந்த ஆணையம் வழங்கும் உத்தரவுக்கு குடிமையியல் நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியாது என்பதால், அந்தச் சட்டம் தெலங்கானா சட்டத்தைவிடக் கடுமையானது. தெலங்கானா மாநிலத்தில் இப்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் மசோதாவின்படி, ஆட்சியர் உள்ளிட்ட நியமிக்கப்பட்ட அதிகாரிகள், பிள்ளைகளின் ஊதியத்தில் பிடித்தம் செய்து அதைப் பெற்றோரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க உத்தரவிட முடியும். அந்த உத்தரவுக்கு நீதிமன்றத்தில் தடையோ, நிவாரணமோ பெற வழிவகை செய்யப்படவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.
மேற்கத்திய நாடுகள் பலவற்றில் மூத்த குடிமக்கள் பராமரிப்பு என்பது அரசைச் சார்ந்ததாக உள்ளது. காரணம், அங்கு ஒரே கணவன் - மனைவி பல பத்தாண்டுகள் சேர்ந்து வாழ்வது அரிது. அதனால், அவர்களுக்கான ஓய்வூதியம், மருத்துவ சேவை போன்றவற்றுக்காக பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களை அரசு செலவழிக்கிறது.
உலகிலேயே தங்கள் குழந்தைகளின் கல்விக்காகவும், நல்வாழ்வுக்காகவும் சம்பாதித்ததை எல்லாம் பெற்றோர் செலவு செய்யும் பழக்கம், தெற்காசியாவுக்கு மட்டுமே உரித்தான தனித்தன்மை. வீடு கட்டுவது, சேமிப்பது என்று தங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகக் குழந்தைகளின் நல்வாழ்வை மட்டுமே கருத்தில் கொண்டு பெற்றோர் இயங்குகிறார்கள். இந்தியாவில் பெற்றோரின் முதுமைக் காலக் காப்பீடு என்பதே பிள்ளைகள்தான்.
கூட்டுக் குடும்பமுறை சிதைந்து, கணவர்-மனைவி என்பதுடன் ஒரே குழந்தை என்று சுருங்கி விட்டிருக்கும் நிலையில், பெற்றோரைப் பேண வேண்டிய பிள்ளைகள், தங்கள் நல்வாழ்வு தேடி வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பறந்துவிடும் சூழலில், முதுமையில் தனிமையும், முதுமையில் ஆதரவின்றிக் கவலைப்படுதலும் அதிகரிப்பதைத் தவிர்க்க இயலாது. சட்டம் மட்டுமே இதற்குத் தீர்வாகாது.
குழந்தைகள் பெற்றோரைப் பேணுவதைக் கடமையாகக் கருத வேண்டும். பெற்றோரும் மேலை நாட்டவர்போல, அளவுக்கு மீறி பிள்ளைகள் மீது பாசம் செலுத்தாமல், சற்று சுயநலமாகத் தங்களது முதுமையைத் திட்டமிட்டுக் கொள்ளப் பழக வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உச்சநீதிமன்றத் தீா்ப்பை செயலிழக்க செய்யும் சிஏபிஎஃப் மசோதா: எதிா்க்கட்சிகள் விமா்சனம்

பெற்றோரை பராமரிக்க தவறினால் ஊதியத்தில் ரூ. 10,000 பிடித்தம்: தெலங்கானாவில் மசோதா நிறைவேற்றம்

தில்லி சுற்றுலா வாரியம் மசோதா: பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல்
தினப்பலன்கள் - துலாம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

