மக்களின் வாழ்வியல் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் நாட்டில் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்துவருகிறது. அதேநேரத்தில், சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள மேம்பாடு காரணமாக தொற்றுநோய்களின் ஆதிக்கம் வெகுவாக குறைந்துள்ளது ஆறுதல் அளிக்கிறது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் அண்மையில் வெளியிட்டுள்ள 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை உள்ள ஓராண்டுக்கான தேசிய மாதிரி கணக்கெடுப்பு தரவுகள் மூலம், இந்தியாவில் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், அதிலுள்ள குறைபாடுகள் வெளிப்பட்டுள்ளன. இந்தியாவில் சுகாதார காப்பீடு பெறுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது. மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவம் 96 சதவீதத்தை எட்டியுள்ளது. பிரசவத்துக்கு முன்னும், பின்னும் தாய்மைப் பராமரிப்பில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெரும்பாலானோர் இலவசமாக அல்லது குறைந்த செலவில் சிகிச்சை பெறுகின்றனர். தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும், ஆரம்ப கண்டறிதல் மேம்பட்டுள்ளதால், தொற்றுநோய்களால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்துள்ளன என்று "குடும்ப சமூக நுகர்வு: சுகாதாரம்' அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த 2017-18-இல் நடைபெற்ற கணக்கெடுப்புக்குப் பிறகு, சுமார் 7 ஆண்டுகள் கழித்து தற்போது 2025-இல் இந்தக் கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.
இந்தப் புள்ளிவிவரங்கள் இரண்டு விஷயங்களை நமக்குத் தெளிவாக்குகின்றன. ஒன்று, கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் இன்றும்கூட குறைந்தபட்ச ஆரோக்கியத்துடன் உள்ளனர் என்பது. மற்றொன்று, இதய- ரத்தநாள நோயான உயர் ரத்த அழுத்தம் மற்றும் சுரப்பி/சர்க்கரை மாற்றச் செயலியல் எனப்படும் சர்க்கரை நோய் (தொற்றா நோய்கள்) ஆகியவை 30 வயதுக்குப் பிறகு உள்ளவர்களிடம் அதிகம் உள்ளதாகக் காணப்படுவது தெரியவந்திருக்கிறது.
இந்த இரண்டு நோய்களுக்கும் முக்கியக் காரணங்களாக இருப்பது (உயர் ரத்த அழுத்தம்) குடும்பச் சூழல், பொருளாதாரச் சூழல், பணிச்சூழல், உணவுப் பழக்கம், சரியான உடலுழைப்பு, உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு இல்லாமை போன்றவையே. இவை அனைத்தும் கடந்த 50 ஆண்டுகளுக்குள்ளாக நம் அதீத ஆசை மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் நாமே தேடிக் கொண்டவை என்பதைச் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.
இந்தக் கணக்கெடுப்பில் நமக்குத் தெரியவந்துள்ள முக்கிய செய்தி மகப்பேறு துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள். கடந்த ஆண்டில் (2025) நாடு முழுவதும் நடைபெற்றுள்ள பிரசவங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் 95.6%, நகர்ப்புறங்களில் 97.8% என சராசரியாக 96.2% பிரசவங்கள் மருத்துவமனைகள் அல்லது சுகாதார நிலையங்களில் நடைபெற்றுள்ளன.
கிராமப்புற பிரசவங்களில் 4.4% வீடுகளில் நடைபெறும் நிலையில், 28.8% தனியார் மருத்துவமனைகளிலும், எஞ்சியுள்ள 66.8% அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் நடைபெறுகின்றன. அதேநேரத்தில், நகர்ப்புறங்களில் 2.2% வீடுகளிலும், 47% அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களிலும், எஞ்சியுள்ள 50.8% தனியார் மருத்துவமனைகளிலும் பிரசவங்கள் நடைபெறுகின்றன. நகர்ப்புறங்களில் சரிபாதி பேர் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லும் நிலையில், கிராமப்புறங்களில் 71% பேர் இன்னும் அரசு நிறுவனங்களை மட்டுமே நம்பி உள்ளனர்.
அதேபோல, இந்த அறிக்கையில் கவனத்தை ஈர்த்துள்ள இன்னொரு முக்கிய அம்சம், சுகாதாரக் காப்பீடு. கடந்த தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி, கிராமப்புற மக்கள் 14.1 சதவீதமும், நகர்ப்புற மக்கள் 19.1 சதவீதமும் (சராசரியாக 16.6%) காப்பீடு செய்திருந்தனர். தற்போதைய புள்ளிவிவரப்படி, கிராமப்புறங்களில் 47.4 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் 44.3 சதவீதம் பேரும் (சராசரியாக 45.85%) காப்பீடு பெற்றுள்ளனர்.
மக்கள்தொகையில் 45.85% பேர் சுகாதாரக் காப்பீடு பெற்றிருந்த போதும், நேரடி மருத்துவச் செலவுகள் அதிகமாகவே உள்ளன. உயர்ந்துவரும் மருத்துவச் செலவுகளில் இருந்து மக்களை காப்பீடு முழுமையாகப் பாதுகாக்கவில்லை. பகுதி காப்பீடு, விலக்குகள் மற்றும் தனியார் வழங்குநர்களின் ஆதிக்கம் போன்றவை மக்களுக்கு கிடைக்கும் பலன்களைக் குறைக் கின்றன.
பொது சுகாதார வசதிகள் மக்களுக்கு இன்னும் ஒரு பாதுகாப்புத் தளமாகவே செயல்படுகின்றன. என்றாலும், அவற்றை அணுகுவதற்கான வாய்ப்பு சமமாக இல்லை. சுகாதாரக் காப்பீட்டுக்காக செலுத்தப்படும் மொத்த பிரீமியங்கள், அரசின் சுகாதாரச் செலவுகளை மிஞ்சியுள்ளதை சமீபத்திய நிதித் தரவுகள் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சுகாதாரப் பிரச்னைகளில் இருந்து மக்களைக் காப்பதை, அரசு முதன்மைப் பொறுப்பாக ஏற்கும் நிலையில் இருந்து, குடும்பங்கள் அதிகமாக காப்பீட்டுச் சந்தைகளின் வழியாக மருத்துவ சிகிச்சைக்கு நகர்த்தப்படுகின்றன. இது மேற்கத்திய நாடுகளின் அரசு நிர்வாகம் மற்றும் சந்தை நிர்வாகத்தை நகல் எடுத்ததுபோல உள்ளது.
வளர்ந்துவரும் இந்தியாவில், காப்பீடற்ற சரிபாதி மக்கள் சுகாதாரப் பிரச்னைகளுக்காக அரசின் நேரடி அணுகலை எதிர்பார்த்தே உள்ளனர். அதிலிருந்து அரசு விலகிச் செல்வது சரியல்ல. அரசு மருத்துவமனைகளின் மேம்பாடுதான் இதற்குச் சரியான தீர்வாக இருக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!

எலவந்தி வடுகபாளையத்தில் தீ தொண்டு நாள் வார விழா

மணிப்பூா் துப்பாக்கிச்சூடு: மேலும் ஒருவா் உயிரிழப்பு
சமூக மாற்ற அவலம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


