இன்றைய உலகமயச் சூழலில் பன்னாட்டு பெருவணிக (கார்ப்பரேட்) நிறுவனங்களுடன் கூட்டுறவு அமைப்புகள் போட்டியிட்டு தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியுமா என்கிற கேள்விக்குப் பதில் அளித்திருக்கிறது "அமுல்' நிறுவனம். குஜராத் கூட்டுறவு பால் விற்பனை நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்படும் "அமுல்' பால் பொருள்களின் விற்பனை 2025 -26 -ஆம் நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாயை (10.75 பில்லியன் டாலர்) தாண்டி இருக்கிறது.
இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் விவசாயிகளால் நடத்தப்படும் மிகப் பெரிய பால் கூட்டுறவுச் சங்கமாக அது உயர்ந்திருக்கிறது. இடைத்தரகர்களுக்கு இடம் அளிக்காமல் ஒரு லட்சம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலை நேரடியாக நுகர்வோருக்குக் கொண்டு சேர்க்கும் அவர்களது கூட்டுறவு முயற்சியின் வெற்றியைப் பார்த்து ஒட்டுமொத்த உலகமும் வியப்பில் சமைகிறது.
பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் ஆண்டு முழுவதும் அன்றன்றைக்கான பால் உற்பத்தியில் வருமானம் ஈட்டுகிறார்கள். மூன்றரை கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்து தங்களது கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நுகர்வோருக்கு விநியோகம் செய்யும் அந்தப் பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் மாட்டுத் தீவனம் வழங்குவதுடன், கால்நடை மருத்துவ உதவியும் கைரா கூட்டுறவுச் சங்கத்தால் வழங்கப்படுகிறது.
"அமுல்' என்கிற இலச்சினையைக் கொண்ட அந்த கூட்டுறவுச் சங்கத்தின் வளர்ச்சி ஒரே நாளில் ஏற்பட்டு விடவில்லை. அதற்கு பின்னால் உழைப்பு, ஒற்றுமை, இலக்கு, தளராத தன்னம்பிக்கை, அரசியலுக்கு இடம் அளிக்காத மனத் துணிவு எல்லாமே இருந்தன. தங்களிடம் பால் கொள்முதல் செய்து லாபம் ஈட்டும் இடைத்தரகர்கள் தகுந்த விலையையோ, அதற்கான பணத்தையோ தராமல் இருந்தபோது எழுந்த விவசாயிகளின் போராட்டம்தான், தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்ற பால் விற்பனை கூட்டுறவுச் சங்கமாக அந்த அமைப்பு உயரக் காரணமாகி இருக்கிறது.
1946 - இல் குஜராத் மாநிலத்தில் உள்ள கைரா என்கிற மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களைச் சேர்ந்த பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளால் தொடங்கப்பட்டதுதான் கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம். நாளொன்றுக்கு வெறும் 250 லிட்டர் பால் கொள்முதல் செய்து விநியோகித்த அந்த அமைப்பு, இப்போது நாள் ஒன்றுக்கு 350 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்வதுடன், 18,600 கிராம கூட்டுறவுச் சங்கங்களை இணைத்துக் கொண்டு உலகின் மிகப் பெரிய கூட்டுறவுச் சங்கமாகவும் உயர்ந்திருக்கிறது.
1955 -இல் ஆனந்த் என்ற இடத்தில் பால் பதப்படுத்தும் ஆலையை நிறுவியது; 1957 -இல் "அமுல்' என்கிற இலச்சினையை உருவாக்கிக் கொண்டது; 1966 -இல் அமுல் சிறுமி அதன் அடையாளமானது; 1970 - இல் வர்கீஸ் குரியனின் தலைமையில் தேசிய பால்வள வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் வெண்மைப் புரட்சி மூலம் "ஆபரேஷன் ஃப்ளட்' முன்னெடுக்கப்பட்டது; 2000 -இல் உலகின் மிகப் பெரிய பால் விற்பனையாளராக சாதனை புரிந்தது; 2010 -இல் 50 -க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பால், பால் சார்ந்த பொருள்களை ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் முதன்மையான உணவுப் பொருள் ஏற்றுமதியாளரானது - இப்படி "அமுல்' கடந்துவந்த "மைல்கல்'கள் ஏராளம்.
ஐரோப்பா, வளைகுடா நாடுகள், ஏன் அமெரிக்கா உள்பட பல நாடுகளில் வரவேற்பு பெற்றிருக்கும் "அமுல்', இப்போது வெளிநாடுகளில் உள்ள பல பால் உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்களுடன் வர்த்தகப் பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்குத் தனது தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு உயர்ந்திருக்கிறது. 2024 -இல் அமெரிக்காவின் மிஷிகன் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் இணைந்து தனது பால் சார்ந்த உற்பத்திகளை அமெரிக்காவில் சந்தைப்படுத்தத் தொடங்கியது. இப்போது, அந்த நாட்டின் 35 மாநிலங்களில் "அமுல்' தனது செல்வாக்கை நிலைநாட்டி இருக்கிறது. அதன் "அட்டர்லி பட்டர்லி டெலிஷியஸ்' என்கிற பரப்புரை முழக்கம், இப்போது உலகின் பல நாடுகளிலும் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.
கடந்த 2024 -25 -ஐவிட 11% அதிகரித்த வளர்ச்சியை 2025 - 26 - இல் அடைவதற்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல், உலகளாவிய அளவில் தனது பால் சார்ந்த பொருள்களின் விற்பனையை அதிகரிக்க "அமுல்' எடுத்துக்கொண்ட முனைப்புதான் காரணம். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் 50,000 பேருக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரத்தில் எல்லாம் "அமுல்' பால் இப்போது விற்பனை செய்யப்படுகிறது.
"அமுல்' அடைந்திருக்கும் வெற்றியை தமிழகத்தின் "ஆவின்', கர்நாடகத்தின் "நந்தினி', ஆந்திரத்தின் "விஜயா', தில்லியின் "மதர் டெய்ரி' உள்ளிட்டவை அடைய முடியவில்லை என்று குறை கூறுவது தவறு. "அமுல்' தங்களது வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது என்கிற குற்றச்சாட்டும் ஏற்புடையதல்ல. சர்வதேசச் சந்தையில் அமுலுக்குப் போட்டியாக இந்தியாவின் ஏனைய கூட்டுறவுச் சங்கங்களும் போட்டியிட விழைவதுதான் அவர்களது எதிர்வினையாக இருக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வாரம் கலாரசிகன் - 19-04-2026

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு!

வெற்றியைத் தீா்மானிக்கும் தவெக வாக்குகள்? வேளச்சேரி தொகுதி அலசல்!
தொகுதி அறிமுகம்: ஸ்ரீபெரும்புதூா் (தனி)!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


