/

முறைப்படுத்தப்பட வேண்டும்!

இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் என்பது அனைத்து நகரங்களிலுமே பெரும் பிரச்னையாக மாறிவிட்டது.

News image

பைக்-டாக்ஸி - IANS

Updated On :49 வினாடிகள் முன்பு

இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் என்பது அனைத்து நகரங்களிலுமே பெரும் பிரச்னையாக மாறிவிட்டது.

மக்கள் தொகை அதிகரிப்பு, சாலைகளில் ஆக்கிரமிப்பு, தனிநபர் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என இதற்குப் பல காரணங்களைக் கூற முடியும்.

பொதுப் போக்குவரத்து வாகனங் களிலும் அளவுக்கு அதிகமான கூட்டம் இருக்கும் நிலையில், பைக் டாக்ஸி சேவை செல்ல வேண்டிய இடத்துக்கு விரைவாகச் செல்வதற்கான வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

செயலி சார்ந்த சேவை நிறுவனங்களான ரேபிடோ, ஓலா, ஊபர் போன்றவை இந்த பைக் டாக்ஸி சேவையை வழங்குகின்றன. பெருநகரங்கள் மட்டுமன்றி இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களிலும் பைக் டாக்ஸி சேவை தவிர்க்க இயலாததாக மாறி வருகிறது.

ஆனால், பைக் டாக்ஸிக்கு பல மாநிலங்களில் அரசின் அனுமதி இல்லாததால் ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், சில இடங்களில் தகராறு ஏற்படுவதும் தொடர்கதையாகி இருக்கிறது.

தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு அனுமதி இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழக அரசுத் தரப்பில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது. பைக் டாக்ஸி சேவையை முறைப்படுத்துவதற்கான அமைப்பை உருவாக்கவும், சட்டப்படி உரிமம் வழங்கி இந்தச் சேவையை நடத்த அனுமதிப்பதற்கான விதிகளை உருவாக்கவும் உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவுக்கு பதிலளித்தபோது அரசுத் தரப்பு மேற்கண்ட தகவலைத் தெரிவித்தது.

'பைக் டாக்ஸிக்கு அனுமதி இல்லையென்றால், அதை பொதுமக்கள் அறியும் வகையில் ஏன் விளம்பரப்படுத்தவில்லை, ஏதேனும் விபத்து நிகழ்ந்தால் யார் பொறுப்பு?' என நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு அரசுத் தரப்பில் பதில் இல்லை.

கர்நாடக மாநிலத்திலும் பைக் டாக்ஸி பிரச்னை சட்டப் போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறது. பைக் டாக்ஸிக்கு அனுமதி அளித்து கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அந்த மாநில அரசு மனு தாக்கல் செய்திருக்கிறது. அதில், மோட்டார் சைக்கிள்களில் பயணிகளின் பாதுகாப்புக்கு அவசியமான அம்சங்கள் இல்லை என்றும், அவற்றை பைக் டாக்ஸியாக பயன்படுத்துவது விபத்து அபாயம், காப்பீட்டு வசதி மற்றும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை எழுப்புவதாகவும் தெரிவித்திருக்கிறது.

மோட்டார் வாகனச் சட்டப்படி மோட்டார் சைக்கிள்களில் வாடகைக்கு பயணியை ஏற்றிச் செல்ல அனுமதி இல்லை. இருப்பினும், பைக் டாக்ஸிகளை இயக்க அனுமதிப்பது தொடர்பான சட்ட அம்சங்களை அரசுத் துறைகள் நீண்டகாலமாகப் பரிசீலித்து வந்தன. அதன் தொடர்ச்சியாக, மோட்டார் சைக்கிள்களை போக்குவரத்து வாகனங்களாகப் பயன்படுத்தவும், அவ்வாறே அவற்றைப் பதிவு செய்யவும் மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்மூலம் மோட்டார் சைக்கிள்களில் வாடகை அடிப்படையில் பின் இருக்கைப் பயணியை ஏற்றிச் செல்ல அனுமதி கிடைத்தது.

பைக் டாக்ஸிகளுக்கு மாநில அரசுகளே அனுமதி அளிக்க அதிகாரம் வழங்கும் வகையில், திருத்தப்பட்ட மோட்டார் வாகன சேவை வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது. இதன் அடிப்படையில் மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பைக் டாக்ஸி சேவைக்கு அனுமதி அளித்துள்ளன. இந்த மாநிலங்களில் பாதுகாப்பு பிரச்னைகள் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

பைக் டாக்ஸிகள் நியாயமான கட்டணத்தில் விரைவான பயணத்தை வழங்குகின்றன. இருப்பினும், பெண்களை ஏற்றிச் செல்லும் சில பைக் ஓட்டுநர்களின் அத்துமீறல், விரும்பத்தகாத தொடுதல், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், பயணிகள் காப்பீடு தொடர்பான சட்ட சிக்கல்கள் போன்ற பிரச்னைகள் இருக்கின்றன. இவற்றை இந்தச் சேவையை வழங்கும் செயலி சார்ந்த சேவை நிறுவனங்கள் கவனத்தில் கொள்ளவில்லையா என்றால், இல்லை என்று சொல்லிவிட முடியாது. விதிமுறைகளின்படி நடந்தால்தான் இந்த பிரச்னைகளுக்கே இடமிருந்திருக்காதே.

அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலுக்கு பைக் டாக்ஸிகள் ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருப்பதை மறுக்க முடியாது. அதேவேளையில், தமிழகத்தில் சட்டப்படி அனுமதி இல்லாத நிலையிலும் பைக் டாக்ஸிகள் தொடர்ந்து இயங்குவதை அனுமதிப்பதையும் ஏற்க இயலாது.

ஆட்டோ, டாக்ஸிகள் போன்று பயணிகளின் பாதுகாப்புக்கு பொறுப்புடைமையாக்கி, பைக் டாக்ஸிகளை அனுமதிப்பது தொடர்பாக அரசு விரைவில் கொள்கை முடிவெடுப்பது வரவேற்புக்குரியதாக இருக்கும்.

பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி இல்லாத நிலையில், விதியை மீறிச் செயல்படுவதாக ஏராளமான பைக் டாக்ஸிகளை கர்நாடக மாநில போக்குவரத்துத் துறை பறிமுதல் செய்து நடவடிக்கைக்கு உட்படுத்தியிருக்கிறது. ஆட்டோ, டாக்ஸி இருமடங்கு அதிகரித்திருக்கின்றன. பைக் டாக்ஸிகளால் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது.

ஆட்டோ, டாக்ஸிகளில் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் அனுமதி இல்லாவிட்டாலும் பொதுமக்கள் பைக் டாக்ஸியை நாடுவது தொடர்கிறது. போதிய பாதுகாப்பும், விதிமுறைகளும் உறுதிப்படுத்தப்பட்டு பைக் டாக்ஸி இயக்கப்படுவதுதான் இதற்குத் தீர்வாக இருக்கும்.

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்

படுபயனும் பார்த்துச் செயல்,

செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்.

திருக்குறள் (எண் 676) அதிகாரம்: வினைசெயல்வகை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.