
நடுக்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பயணிகளும், சரக்குகளுமாக 22,000 டன் எடை காணப்பட்டது. அவ்வளவு பெரிய கப்பலில் இந்தியர்களிடம் இருக்கும் தங்க நகைகள் அனைத்தையும் ஏற்றிவைக்க முடியுமா என்பது சந்தேகம்தான். 'மோர்கன் ஸ்டான்லி' நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, இந்தியர்களின் தனிச் சொத்தாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தங்கத்தின் அளவு சுமார் 35,000 டன். உலகிலேயே அதிக அளவில் தங்கம் வைத்திருப்பது இந்தியர்கள்தான் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டில், அதாவது 2000-க்கும் 2025-க்கும் இடையே மட்டும் நாம் 507 பில்லியன் டாலர் மதிப்பிலான சுமார் 700 டன் தங்கம் இறக்குமதி செய்திருக்கிறோம். கடத்தி வரப்பட்டது, பயணிகள் அணிந்து வந்தது உள்ளிட்டவற்றையும் சேர்த்தால் நமது இறக்குமதி மதிப்பு மேலும் அதிகரிக்கும். நமது நிதி நிர்வாகக் கட்டமைப்புகளுக்கு வெளியே குடும்ப சேமிப்புகளாகத் தனியாரிடம் இருக்கும் சுமார் 35,000 டன் தங்கத்தின் சந்தை மதிப்பு 5 டிரில்லியன் டாலரிலும் அதிகம்.
கடந்த நிதியாண்டில் இந்தியா 72 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை இறக்குமதி செய்தது. நமது தங்கத்துக்கான இறக்குமதி அளவு கடந்த மூன்றாண்டுகளில் இரட்டிப்பாகி இருக்கிறது. கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக, இறக்குமதிகள் மூலம் நமது அந்நியச் செலாவணியின் மீது அழுத்தம் ஏற்படுத்துவது தங்கம்தான். அதனால்தான் பிரதமரும், நிதியமைச்சரும் தங்கம் வாங்குவதைக் கட்டுப்படுத்தும்படி கோரிக்கை விடுத்தார்கள்.
தங்கம் என்பது இறக்குமதி செய்யப்பட வேண்டிய அத்தியாவசியப் பொருளல்ல. உற்பத்தி தொடர்பான பயன்பாடு என்று எடுத்துக் கொண்டால் வெறும் 13% மட்டுமே தங்கத்தின் பங்களிப்பு. 2024 முதல் தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியபோது, பலரும் தங்கத்தில் முதலீடு செய்யத் தலைப்பட்டனர். அதனால் தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகளுக்கான கேட்பு (டிமாண்ட்) கணிசமாக அதிகரித்து விட்டது.
அதிகமான கலால் வரி விதிப்பதன்மூலம் ஓரளவுக்குத் தங்கத்தின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த முடியும் என்றாலும், அதையும் மீறி இந்தியாவின் தங்க இறக்குமதி அதிகரித்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தினுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் 5%-ஆக இருந்த தங்கத்துக்கான இறக்குமதி வரி 14%-ஆக அதிகரித்தது. இதனால், தங்கத்தின் இறக்குமதி சற்று குறைந்தது உண்மை. இறக்குமதி வரி 9% அளவில் அதிகரித்திருப்பதன்மூலம் சுமார் 9 பில்லியன் டாலர் வரை அந்நியச் செலாவணி மிச்சப்படலாம்; அதே நேரத்தில் தங்கம் கடத்தப்படுவது அதிகரிக்கக்கூடும் என்பதையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.
இந்தியாவில் உள்ள தங்கத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவது சமூக, கலாசாரம் தொடர்பானது. திருமணம், சமயச் சடங்குகள், அட்சய திரிதியை போன்ற தங்கம் வாங்கும் சம்பிரதாய நாள்கள் உள்ளிட்ட காரணிகளுக்காக நகைக் கடைகள் மூலம் ஆபரணத் தங்கம் வாங்கப்படுகிறது. 2026 நிதியாண்டில் இதன் தேவை 32%-இல் இருந்து 124% வரை காணப்பட்டது. இந்தப் பயன்பாட்டை நாம் கட்டுப்படுத்த முடியாது, கூடாது.
அதே நேரத்தில் முதலீட்டுக்காக தங்கத்தை வாங்கி வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள். இது ஆபரணத் தங்கத்தைப்போல, உணர்வு தொடர்பானதல்ல. தங்கக் கட்டிகள், நாணயங்கள் சார்ந்த இந்த தங்கத்துக்கான தேவை கடந்த நிதியாண்டில் 32%-இல் இருந்து 62%-ஆக அதிகரித்தது. இந்த நிதியாண்டிலும் இந்தப் போக்கு குறைந்தபாடில்லை. இதைக் கட்டுப்படுத்துவதுதான் இந்திய நிதி நிர்வாகம் எதிர்கொள்ள இருக்கும் மிகப் பெரிய சவால்.
மார்ச் 2026 அளவில் இந்தியாவின் முதலீட்டுத் தங்கத்தின் அளவு சுமார் 115 டன்; அவற்றின் மதிப்பு சுமார் ரூ. 1.7 டிரில்லியன் அல்லது 18.5 பில்லியன் டாலர். இத்தகைய தங்கம் இறக்குமதி வரி செலுத்தி, காப்பீடு செய்யப்பட்டு, பாதுகாப்பதற்குக் கட்டணம் செலுத்தப்பட்டு பெட்டகங்களில் முடங்கிக் கிடக்கிறது.
நம்மிடம் இருக்கும் தங்கத்தை உலகச் சந்தையில் விற்க முற்பட்டால், நமது அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை முற்றிலுமாக அகன்றுவிடும். கடந்த நான்கு ஆண்டுகளில் உலகின் பல்வேறு நாடுகளுடைய மத்திய வங்கிகள் சுமார் 3,500 டன் தங்கத்தை வாங்கி இருக்கின்றன. இந்தியாவிடம் எந்தவிதப் பயன்பாடும் இல்லாமல் முடங்கிக் கிடக்கும் 35,000 டன் தங்கத்தில் வெறும் 10% தங்கத்தை நாம் டாலராக்க முற்பட்டாலே போதும், நமது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அகன்றுவிடும்.
சர்வதேசச் சந்தையில் தங்கத்தை விற்பதால், நமது பொருளாதாரம் பலவீனமாக இருக்கிறது என்ற தோற்றம் ஏற்படக்கூடும் என்று பயப்படுகிறது அரசு. அரசியல் ரீதியாகப் பின்விளைவை ஏற்படுத்தும் என்றும் கருதுகிறது. பொது வெளியில் எதிர்மறைக் கருத்து வராமல், கையிருப்புத் தங்கத்தை சர்வதேசச் சந்தையில் இந்தியா விற்க முற்படுமானால், தங்கத்தின் விலை வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்து, தங்கத்தின் மீது காதல் கொண்ட இந்தியப் பெண்களை மகிழ்விக்கும்; அரசும், நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை எதிர்கொள்ள முடியும்!
அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
இது செய்வதற்கு அருமையானது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும்; அதைச் செய்வதற்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.
திருக்குறள் (எண் 611) அதிகாரம்: ஆள்வினை உடைமை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







