காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

தள்ளிவைப்பது நல்லது!

விவசாயிகளின் வாழ்வாதார சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, மேட்டூர் அணை திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்பதைப் பற்றி...

விவசாயிகளுடன் முதல்வர் விஜய்.

Published On :51 வினாடிகள் முன்பு

மேட்டூர் அணை நிகழாண்டு டெல்டா பாசனத்துக்காக தமிழக முதல்வரால் செவ்வாய்க்கிழமை (செப்.1) திறந்து விடப்படும் என்கிற அரசின் அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக அதிருப்தியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு இடையில் 2024-ஆம் ஆண்டைத் தவிர மற்ற ஆண்டுகளில் குறுவை சாகுபடிக்காக தடையின்றி வழக்கமான ஜூன் 12-இல் அணை திறக்கப்பட்டு வந்தது. அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அணை திறக்க வேண்டிய அந்த நாளில் நீர்மட்டம் 79.56 அடியாகவும், நீர் இருப்பு 41.52 டி.எம்.சி.யாகவும், நீர்வரத்து விநாடிக்கு 540 கன அடியாகவும் மட்டுமே இருந்ததால் அணை திறக்கப்படவில்லை.

இம்மாதம் முதல் வாரத்தில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததால் கர்நாடகத்தின் கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகள் நிரம்பியதில் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது.

அத்துடன், கர்நாடகத்திலிருந்து நிகழாண்டு பெற வேண்டிய காவிரி நீரை பெறுவதற்கு தமிழக அரசு மேற்கொண்ட சட்ட மற்றும் நிர்வாக ரீதியிலான நடவடிக்கையின் பயனாக வெவ்வேறு காலகட்டங்களில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 3,500 கன அடி, 9,000 கன அடி மற்றும் 12,000 கன அடி நீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 90.47 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு சுமார் 9,035 கன அடியாகவும் இருந்தது. அணையின் நீர்மட்டம் வரும் நாள்களில் அதிகரிக்கும் என்பதை உத்தேசித்து டெல்டா பாசனத் தேவைக்காக செப்டம்பர் 1-இல் அணையைத் திறப்பது என தமிழக அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது. அணையிலிருந்து, நீர்வரத்தைப் பொருத்து அடுத்த 45 நாள்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இங்குதான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறுகிய கால நெல் ரகத்தை பயிரிட்டால் சுமார் 110-120 நாள்களுக்கும், மத்திய கால ரகமாக இருந்தால் சுமார் 135-140 நாள்களுக்கும் தண்ணீர் தேவை. அணை தண்ணீர் 45 நாள்கள் மட்டுமே கிடைக்கும் என்றால் அதைக் கொண்டு பயிர்களுக்கு முழுமையான பாசனம் சாத்தியமில்லை.

பயிர்கள் கதிர்விடும் நேரத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். அதனால் பயிர் விளையாமல் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். அடுத்து, தற்போது அணையிலிருந்து நாளொன்றுக்கு விநாடிக்கு சுமார் 10,000 கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தேசித்துள்ளதாகத் தெரிகிறது.

அவ்வாறு திறந்துவிட்டால் அந்தத் தண்ணீர் கடைமடை வரை சென்று சேருவது சிரமம். சுமார் 15,000 முதல் 18,000 கன அடி திறந்து விட்டால் மட்டுமே கடைமடை விவசாயிகளும் பயன்பெற முடியும். அணை திறப்பு காலதாமதம் ஏற்படும் ஆண்டுகளில் விவசாயிகள் மத்திய கால ரகங்களை நேரடியாக விதைப்பு செய்து மகசூல் பெறுவது வழக்கம். அவ்வாறு இந்த ஆண்டு செய்தாலும், 45 நாள்களுக்குப் பிறகு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நேரத்தில் அக்டோபர்-நவம்பர் மாதத்தில் வட கிழக்குப் பருவ மழை

பெய்தால் மட்டுமே பயிர்களைக் காப்பாற்றலாம். அதேநேரத்தில் மழைப் பொழிவு அதிகமானால் பயிர்ச் சேதம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இந்த ஆண்டு எல்-நினோ தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் பருவ மழைக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை விவசாயிகளை அச்சம் கொள்ளச் செய்கிறது. மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பாக வழக்கமாக

விவசாயிகள் மற்றும் அதிகாரிகளை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி குறுவை சாகுபடி முன்னேற்பாடு திட்டங்கள், இடுபொருள்கள் கையிருப்பு, பாசனக் கால்வாய்கள் சீரமைப்பு, வேளாண் கடன், நெல் கொள்முதல் உள்ளிட்டவை குறித்து சம்பந்தப்பட்ட துறையினருடன் கலந்து ஆலோசிப்பது வழக்கம். இந்த ஆண்டு அந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவில்லை.

அணையை காலதாமதமாகத் திறக்க முடிவு செய்ததற்கு முன்பாக விவசாயிகளைக் கலந்தாலோசிக்காமல் அணை திறப்பு அறிவிப்பை வெளியிட்டது கள நிலவரத்தை அறியாமல் எடுத்த நடவடிக்கையாகவே கருத வேண்டியதாக இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டிய பிறகு, நீர்வரத்தும் 8 ஆயிரம் கன அடி முதல் 12 ஆயிரம் கன அடி வரை கிடைக்கும் என்பதை உறுதி செய்த பின்னர் அணையை செப்டம்பர் 10-ஆம் தேதியோ அல்லது அதற்குப் பிறகோ திறந்தால் ஒரு போக சம்பா சாகுபடியையாவது முழுமையாகச் செய்ய முடியும்.

அணை கடந்த ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படாததால், டெல்டா மாவட்டங்களில் ஆழ்குழாய் மோட்டார் வசதியுள்ள விவசாயிகள் மட்டுமே தற்போது குறுவை பருவ நெல் சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்தாண்டு சுமார் 5.66 லட்சம் ஏக்கரில் செய்யப்பட்ட குறுவை சாகுபடி, நிகழாண்டு அணை ஜூன் 12-இல் திறக்கப்படாததால் சுமார் 3.78 லட்சம் ஏக்கராகக் குறைந்துள்ளது. அரசியல் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் விவசாயிகளின் வாழ்வாதார சிக்கல்களைக் கருத்தில் கொண்டு அரசு அணை திறப்பை தள்ளி வைப்பதே நலம் என சொல்லத் தோன்றுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.