

கொல்கத்தாவில் கடந்த திங்கள்கிழமை (ஜன. 26) நிகழ்ந்த தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தது நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. மேற்கு வங்க மாநிலம், மத்திய கொல்கத்தாவில் புர்ராபஜார் பகுதியில் உள்ள உணவகத்தில் கடந்த 2025 ஏப்.29-ஆம் தேதி நிகழ்ந்த தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். நெரிசல் மிகுந்த கொல்கத்தாவில் இதுபோன்ற தீ விபத்துகள் வழக்கமானது ஆகிவிடுமோ என்ற அச்சம் இப்போது உண்மையாகிவிட்டது.
கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான நஜிராபாதில் உள்ள சேமிப்புக் கிடங்கில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு சேமிப்புக் கிடங்குகள், அங்கு செயல்பட்டு வந்த மோமோ தின்பண்ட நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவிலும் தீ பரவியது. அதில் ஒரு சேமிப்புக் கிடங்கு திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு அலங்காரம் செய்யும் நிறுவனத்தினுடையது என்பதால் அதில் துணிகள், நாற்காலிகள், அது தொடர்பான பொருள்கள் இருந்துள்ளன.
12 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டும் செவ்வாய்க்கிழமை மதியம்தான் (ஜன. 27) தீயைக் கட்டுப்படுத்த முடிந்தது என்பதில் இருந்து பாதிப்பை நம்மால் அறிந்து கொள்ள முடியும். இந்த விபத்தில் கட்டட இடிபாடுகளை அகற்றி, மீட்புப் பணிகள் 4 நாள்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதுவரையிலும் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் பூர்வ (கிழக்கு) மேதினிபூர் போன்று மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பிழைப்பு தேடி வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர்.
இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகி உள்ளதால் மரபணு சோதனை மூலம் அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் அதிக அளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததும், தீயணைப்புக்கான வசதிகள் இல்லாமல் கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தன என்பதும் சொல்லாமலே விளங்கும். கிடங்குகள் தீயணைப்பு பாதுகாப்புச் சான்று பெறவில்லை என்று மாநில தீயணைப்புத் துறை இப்போது அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அந்த மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், இந்த விபத்து அரசியல் ரீதியாக பற்றி எரிகிறது. உயிரிழந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகையை மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தை ஆளுங்கட்சி அடக்கி வாசிக்கிறது என்றால், எதிர்க்கட்சிகள் போர்க்கோலம் பூண்டுள்ளன. விபத்து தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நமது நாட்டில் இதுபோன்று தீ விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் பொழுதுபோக்கு பூங்காவில் கடந்த 2024 மே 25-ஆம் தேதி நிகழ்ந்த தீ விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 33 பேர் உயிரிழந்தனர். அதே நாளில் கிழக்கு தில்லி விவேக் விஹாரில் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து, பிறந்து சில நாள்களே ஆன 7 பச்சிளம் குழந்தைகளின் உயிரைப் பறித்தது.
கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவிபெறும் பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்து எளிதில் மறக்க முடியாதது. பள்ளியின் சமையலறையில் 2004 ஜூலை 16-ஆம் தேதி ஏற்பட்ட தீ, 94 குழந்தைகளின் உயிரைக் குடித்தது. அதே ஆண்டு (2004) ஜனவரி 23-ஆம் தேதி, ஸ்ரீரங்கம் பத்மபிரியா திருமண மண்டபத்தில் விடியோ கேமராவின் அதிக வெப்பம் காரணமாக பந்தல் தீப்பிடித்து மணமகன் உள்பட 62 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்தது.
2001 ஆக. 6-இல் ஏர்வாடியில் மொய்தீன் பாதுஷா மனநல இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மனநலன் பாதிக்கப்பட்ட 28 பேர் கட்டி வைக்கப்பட்டு இருந்ததால் பரிதாபமாக இறந்தனர்.
ஹரியாணா மாநிலம், சிர்ஸா மாவட்டத்தில் ராஜீவ் திருமண மண்டபத்தில் 1995 டிச. 23-இல் 500-க்கும் மேற்பட்டோரும், தில்லி உபஹார் திரையரங்கில் 1997 ஜூன் 13-இல் 59 பேரும் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் விருதுநகரில் ஓம்சக்தி பட்டாசுத் தொழிற்சாலையில் கடந்த 2012 செப். 5-ஆம் தேதி நிகழ்ந்த தீ விபத்து, 39 தொழிலாளர்களின் உயிரை விழுங்கியது.
இது தவிர, அவ்வப்போது சிவகாசி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் பட்டாசுத் தொழிற்சாலைகள், நாட்டின் பல பகுதிகளில் சிறிய அளவிலான தீ விபத்துகளில் ஓரிருவர் உயிரிழப்பது தொடர்கதையாகவே ஆகிவிட்டது.
ஒவ்வொரு முறை இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போதும் மத்திய, மாநில அரசுகள் நிவாரணத் தொகை அளிக்கின்றன. ஓரிரு நாள்கள் பேசப்பட்டு பிறகு மறக்கப்பட்டு விடுகிறது. நாட்டின் எல்லா நகரங்களிலும் குறுகலான தெருக்கள், நெரிசலான வீடுகள் என்பது எழுதப்படாத விதியாகவே மாறிவிட்டது. 90 சதவீதத்துக்கும் அதிகமான தெருக்களில், பகுதிகளில் தீயணைப்பு வாகனங்கள் எளிதில் செல்ல முடியாத நிலையே உள்ளது.
தீயணைப்பு விதிகள் எல்லாம் சரியாகவே வகுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் செயல்பாட்டில்தான் பிரச்னை நிலவுகிறது. எந்தவொரு சம்பவத்துக்கும் எந்த அரசு அதிகாரியும் பொறுப்புடைமை ஆக்கப்படுவதில்லை. பொதுமக்களும் லஞ்சம் கொடுத்து விதிமீறலில் ஈடுபட்டு கட்டடங்களைக் கட்டுகின்றனர். தீ விபத்துகளில் இருந்து பாடம் கற்காமல், இதுபோன்ற நிலை மாறாத வரை அப்பாவிகளின் உயிர் பறிபோவதை யாராலும் தடுக்க முடியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.