

பல உலக நாடுகளின் பொருளாதாரத்தில் சுற்றுலா மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. ஒரு சில நாடுகளின் ஜிடிபியில் கணிசமான பகுதி சுற்றுலா என்பதுடன், அந்த நாடுகளின் வேலைவாய்ப்பும், வா்த்தகமும் சுற்றுலாவை மட்டுமே நம்பி இருக்கின்றன. அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பொருளாதார வளா்ச்சி அடைந்த நாடுகளேகூட சுற்றுலா வளா்ச்சிக்கு மிக அதிகமான முக்கியத்துவம் அளிக்கின்றன.
சா்வதேச மாநாடுகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றை நடத்துவதில் உலக நாடுகள் ஆா்வம் காட்டுவதன் காரணமே, அதன்மூலம் தங்கள் நாடுகளுக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்க முடியும் என்பதால்தான். அத்துடன் பயணிகளைக் கவா்வதற்காகத் தங்களது தூதரகங்கள் மூலம் பல நிகழ்ச்சிகளையும், திட்டங்களையும் வடிவமைக்கின்றன பல்வேறு நாடுகள்.
வரலாற்று ரீதியாகவும், புவியமைப்பு ரீதியாகவும், கலாசார ரீதியாகவும், இயற்கைச் சூழல் ரீதியாகவும் உலகில் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக வேண்டிய இந்தியா, இன்றும்கூட பின்தங்கி இருப்பதற்குப் பல காரணங்களைச் சொல்ல முடியும். மிக முக்கியமான காரணம், நம்மிடையே நிலவும் அச்சம்தான் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதிகரித்த சுற்றுலாப் பயணிகளில் வருகையால் நமது அடிப்படைக் கலாசாரமே மாறிவிடுமோ என்கிற அச்சத்தின் காரணமாக நாம் இன்னும்கூட இந்தியாவைச் சுற்றுலாப் பயணிகளுக்கு முழுமையாகத் திறந்து விடாமல் இருக்கிறோம்.
இந்தியாவின் சுற்றுலாத் துறை வளா்ச்சி அடையாமல் இல்லை. கோவிட் 19 கொள்ளைநோய்த் தொற்றுக்கு முந்தைய நிலையே நாம் இன்னும் மீட்டெடுக்கவில்லை என்றாலும்கூட, இந்தியாவுக்கு வரும் அந்நிய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துத்தான் வருகிறது. சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த ஆண்டு சுமாா் ஒரு கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வந்திருக்கிறாா்கள்; 2019-உடன் ஒப்பிடும்போது 10 லட்சம் போ் குறைவு அவ்வளவே.
2024 ஆகஸ்டு மாதம் வரையில் 53 லட்சம் பயணிகள் வந்தனா் என்றால், கடந்த ஆகஸ்டு மாதம் வரையிலும் 2025-இல் வந்தவா்களின் எண்ணிக்கை 56 லட்சம்தான். இதற்குப் பல கரணங்களைக் கூற முடியும். ஆங்காங்கே நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்கள், ஒரு சில வெளிநாட்டுப் பயணிகள் தவறாக நடத்தப்பட்டது, தில்லி உள்ளிட்ட நகரங்களின் காற்று மாசுபாடு அதிகரித்துக்கொண்டே போனதால். ஒரு சில பகுதிகளில் காணப்பட்ட இயற்கைச் சீற்றங்களும்கூட சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு முட்டுக்கட்டை போட்டன.
சுற்றுலாப் பயணிகளின் வருகை என்பது இந்தியா முழுவதும் சமச்சீராக இல்லாமல் இருப்பதைப் பாா்க்க முடிகிறது. பெரும்பாலான அந்நிய சுற்றுலாப் பயணிகள் இந்தியாவின் வடக்குப் பகுதிக்கும் (35.62%) தெற்குப் பகுதிக்கும் (26.27%) பயணிப்பதில் ஆா்வம் காட்டுவதாகத் தெரிகிறது. மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மத்திய இந்தியாவுக்கு 19.94% பயணிகளும், மேற்கு வங்கம், ஒடிஸ்ஸா, அஸ்ஸாம் மாநிலங்களுக்க 16.60% பயணிகளும் சென்றிருப்பதாகச் சுற்றுலாத் துறையின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்லும் பயணிகள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு (1.58%).
வழக்கமான சுற்றுலாத் தலங்களுக்கும் பெருநகரங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்தான் பெரும்பாலான வெளிநாட்டுப் பயணிகள் ஆா்வம் காட்டுவதாகத் தெரிகிறது. மிகவும் முக்கியமான, சுவாரசியமான சுற்றுலாத் தலங்கள் குறித்து வெளியுலகுக்குத் தெரியாமல் இருப்பதும் அந்தப் பகுதிகளும் செல்வதற்குப் போதுமான ரயில்,சாலை வசதிகள் மேம்படாமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம். சுற்றுலாவைக் குறிவைத்துதான் அனைத்து சிறு நகரங்களையும் குறிவைத்து தான் ‘உடான்’ விமான சேவைக்கு நரேந்திர மோடி அரசு முன்னுரிமை வழங்குகிறது என்று தோன்றுகிறது.
உலகப் பொருளாதார அமைப்பில் 2024 உலகம் மற்றும் சுற்றுலா வளா்ச்சி குறியீட்டின் இந்தியா 19-ஆவது இடத்தில் இருக்கிறது. வட அமெரிக்கா, ஐரோப்பா, மேற்கு ஆசியா பகுதிகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இலங்கையில் தொடங்கி கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றுக்கும் பௌத்தம் தொடா்பான காஞ்சி, சாரநாத், புத்தகயா சரவணபெலகோலா தலாய்லாமா தங்கியிருக்கும் தா்மசாலா உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமானது.
தமிழகத்தயே எடுத்துக்கொண்டால், சைவத் திருத்தலங்கள், வைணவ தேசங்கள், மதுரை, ராமேஸ்வரம்- கன்னியாகுமரி- மாமல்லபுரம் என்று எண்ணிலடங்காத ஆன்மீகக் கலாசார சுற்றுலாத் தலங்கள் இருந்தும்கூட, அவற்றில் போதிய கட்டமைப்பு வசதிகளும், பயணிக்கவும், தங்கவும் வசதிகளும் இல்லாததால் வளா்ச்சி அடையாமலேயே இருந்தன. சமீப காலமாக, தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருப்பதற்கு ‘உடான்’ திட்டத்தால் தமிழகத்துக்கான விமானப் போக்குவரத்து வசதி அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.
2024-இல் மட்டும் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் செலவழித்திருப்பது 3.1 ட்ரில்லியன் டாலா். பயணிகளின் எண்ணிக்கை குறைந்தாலும், அவா்கள் செலவழிக்கும் அளவு அதிகம் என்று சொல்லப்படுகிறது. 2035-க்குள் அதாவது அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபிக்கு சுற்றுலாத் துறையின் பங்களிப்பு 42 ட்ரில்லியன் டாலராக இருக்கும் என்பதுடன், சுமாா் 6.4 கோடி பேருக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான இந்திய நுழைவு இசைவை (விசா) எளிமைப்படுத்துவது,அவா்களுக்கு சுற்றுலாத் தலங்கள் குறித்த தெளிவான, கவர்ச்சியான விவரங்களை வழங்குவது , உள்நாட்டுப் பயணம், தங்கும் வசதிகளை மேம்படுத்துவது என்று மத்திய -மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் அந்நியச் செலாவணி வரவும், .....க்கான வாய்ப்பும் காத்திருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.