FOLLOW US

ON GOOGLE DISCOVER

கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

கடிவாளம் தேவைதான்!

உலகம் முழுவதும் வாட்ஸ்ஆப் செயலியை சுமார் 300 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஜூலை 2026, 6:14 am IST

தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ்ஆப், பொழுதுபோக்கு செயலியான இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் செயல்பாடுகள் தொடர்பாக அவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு மத்திய அரசு கடந்த வாரம் அடுத்தடுத்து தாக்கீது (நோட்டீஸ்) அனுப்பியது பரவலான விவாதப் பொருளாகி இருக்கிறது. புதிதாக பயனர் பெயர் (யூஸர் நேம்) வசதியை வாட்ஸ்ஆப்பில் அறிமுகம் செய்யும் விவகாரம் தொடர்பாகவும், பாலியல் ரீதியில் சிறார் துன்புறுத்தப்படுவதை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியானது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கம் கேட்டும் இந்த தாக்கீதை அனுப்பியது.

உலகம் முழுவதும் வாட்ஸ்ஆப் செயலியை சுமார் 300 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். உலகின் மக்கள்தொகையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா, 80 கோடி பயனர்களுடன் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துவதிலும் முதலிடத்தில் உள்ளது. பிரேஸில் (14 கோடி), இந்தோனேசியா (11 கோடி), அமெரிக்கா (10 கோடி), பிலிப்பின்ஸ் (8.8 கோடி) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இன்ஸ்டாகிராமிலும் 55 கோடி பயனர்களுடன் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா (20 கோடி), பிரேஸில் (15 கோடி), இந்தோனேசியா (11 கோடி), ஜப்பான் (6.4 கோடி) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

உலகளாவிய பொருள்களுக்கான சந்தையாக இந்தியா இருப்பது போலவே இணையவெளிச் சந்தையிலும் இந்தியா முக்கிய இடத்தை வகிப்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. அதனால், எல்லையில்லா இணையத்தைப் பயன்படுத்தி பயனர்களை அதிகரித்துவரும் செயலிகளுக்கு கடிவாளம் போடுவது அவசியமாகிறது. அந்த வகையில், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் செயலிகளுக்கு மத்திய அரசு தாக்கீது அனுப்பியிருப்பது வரவேற்புக்குரியது.

தற்போது வாட்ஸ்ஆப்பில் தகவல் பரிமாறுகையில், பயனர்களின் கைப்பேசி எண்ணைத் தெரிந்து கொள்ள முடியும். இதற்கு மாற்றாக கைப்பேசி எண்களைப் பகிராமலேயே "பயனர் பெயர்' மூலம் தகவல் பரிமாறும் வசதியை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய வசதி, போலிக் கணக்குகள் மற்றும் இணைய மோசடிக்கு வழிவகுக்கும் என்ற அடிப்படையில், "பயனர் பெயர்' வசதியில் உள்ள அம்சங்கள் குறித்த முழு விவரங்களை மத்திய அரசு வாட்ஸ்ஆப்பிடம் கோரியுள்ளது.

"புதிய வசதியில் பயனர்களின் பாதுகாப்புக்கும், போலிக் கணக்குகள் தொடங்கப்படுவதைத் தடுக்கவும், மோசடிகள் நடைபெறுவதைத் தவிர்க்கவும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. வாட்ஸ்ஆப் செயலிக்கு பயனர்கள் நிச்சயம் தங்களது கைப்பேசி எண்ணை உள்ளிட வேண்டும். புதிதாக யாரும் யாருக்கும் செய்தி அனுப்ப வேண்டுமெனில், சம்பந்தப்பட்டவரின் சரியான பயனர் பெயரை அவர்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். வேறொருவரின் பயனர் பெயரைப் பயன்படுத்த திரும்பத் திரும்ப யாரும் முயன்றால் தானாக அது முடக்கப்பட்டுவிடும்' என்று வாட்ஸ்ஆப் அளிக்கும் விளக்கம் ஏற்புடையதாக இல்லை. அதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகமே. அதிகரிக்கும் தொழில்நுட்ப வசதிகளுக்கேற்ப அவற்றைப் பயன்படுத்தி மோசடிகளும் அதிகரிப்பது வாடிக்கையாகிவிட்டது.

இந்தியாவில் வாட்ஸ்ஆப், டெலிகிராம் செயலிகள் மூலம் இணையவழி முதலீட்டு மோசடிகள் அதிகரித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்திருக்கிறது. சந்தை நிபுணர்கள் போல தங்களைக் காட்டிக் கொள்ளும் சைபர் குற்றவாளிகள், குறிப்பிட்ட பயனர்களைக் குறிவைத்து போலியான முதலீட்டு யோசனைகளை வாட்ஸ்ஆப் மூலம் தெரிவித்து அவர்களை அபாயம் நிறைந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய வைக்கின்றனர் அல்லது போலியான இணைப்பை அனுப்பி அதைப் பதிவிறக்கம் செய்ய வைத்து பண மோசடியில் ஈடுபடுகின்றனர்.

வாட்ஸ்ஆப் இப்போது அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ள பயனர் பெயர் வசதியின் மூலம் நம்மை வாட்ஸ்ஆப் மூலம் தொடர்பு கொள்ளும் நபரின் கைப்பேசி எண்களை அறிய முடியாது. அந்தப் பயனரின் பெயர் மிகவும் பரிச்சயமானதுபோல் தோன்றினால் அதை நம்புவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எண்மக் கைது (டிஜிட்டல் அரஸ்ட்) மூலம் மோசடி நபர்களால் பறிக்கப்படும் பணத்தை முதலீடு செய்வதற்காக பலர் தங்களது வங்கிக் கணக்கையே வாடகைக்கு விடும் காலம் இது. அதனால், கைப்பேசி எண் தெரியாத வாட்ஸ்ஆப் தொடர்பு என்பது ஆபத்தானது.

இன்ஸ்டாகிராமை பொருத்தவரை, அதன் தாய் நிறுவனமான மெட்டாவால் பரிந்துரைக்கப்பட்ட இந்த வழிமுறை (அல்கோரிதம்), சிறார்களைப் பாலியல் ரீதியில் துன்புறுத்தும் விடியோக்கள் பகிரப்படுவதை ஊக்கப்படுத்துவது தெரியவந்துள்ளது.

அதேபோல், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இத்தகைய விளம்பர விடியோக்கள் பகிரப்பட்டிருப்பதும் ஓர் ஆங்கிலத் தொலைக்காட்சி சேனலின் ஆய்வுச் செய்தி மூலம் தெரியவந்துள்ளது.

சமூக ஊடகங்கள் புற்றீசல்போல கிளம்பி இருக்கும் நேரம் இது. வர்த்தக நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடமிருந்து பெறும் கைப்பேசி எண்களைக்கூட விற்பனை செய்யும் காலம். அப்படிப்பட்ட பின்னணியில் வாட்ஸ்ஆப் , இன்ஸ்டாகிராம் செயலிகளுக்கு மட்டுமல்ல, இணையவழி ஊடகங்களுக்கேகூட கடிவாளம் போடுவதில் தவறில்லை.

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்

படுபயனும் பார்த்துச் செயல்.

செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்தபோது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

திருக்குறள் (எண் 676) அதிகாரம்: வினைசெயல்வகை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.