தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

பிடிவாதம் நியாயமல்ல!

அமெரிக்காவும் ஈரானும் வறட்டுப் பிடிவாதம் பிடிப்பது எந்த வகையிலும் நியாயம் அல்ல.

News image
Updated On :5 ஜூன் 2026, 6:21 am IST

அமெரிக்கா-ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்த பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும்போதே, மறுபுறம் ஈரானும், அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலில் ஈடுபடுவது மேற்காசிய பதற்றத்தைத் தணிப்பதில் முட்டுக்கட்டை போடுவதாக அமைந்திருக்கிறது. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போரால் உலக நாடுகள் சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாக எரிபொருள் தட்டுப்பாட்டால் தவித்துவரும் சூழலில், இடைக்கால போர் நிறுத்தத்துக்கும் உலை வைப்பதாக இருக்கின்றன இந்தத் தாக்குதல்கள்.

அமெரிக்கா- ஈரான் இடையே கடந்த ஏப்ரல் 8 முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ளது. அதையொட்டி, இஸ்ரேலுக்கும், லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையேயும் ஓர் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், அந்தப் போர் நிறுத்தத்தை ஹிஸ்புல்லா அமைப்பினர் பலமுறை மீறியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றஞ்சாட்டி வந்தார்.

இதன் ஒரு பகுதியாக லெபனானில் உள்ள பாதுகாப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பியூபோர்ட் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது. இதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்ததால் போர் நிறுத்த நீட்டிப்பு பேச்சுவார்த்தையில் தடை ஏற்படத் தொடங்கியது.

பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச கடல் பகுதியில் பறந்த அமெரிக்க ட்ரோன் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து, ஈரானின் ரேடார் மற்றும் ட்ரோன் தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் கடந்த வார இறுதியில் தாக்குதல் நடத்தியது.

இதற்குப் பதிலடியாக, குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார்; 63 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தொடங்கியதில் இருந்து, வளைகுடா நாடுகளில் நிலவி வரும் பதற்றம் காரணமாக இதுவரை உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.

உலக சந்தைகளிலிருந்து 20 சதவீதம் அளவுக்கு எரிபொருள் ஹோர்முஸ் நீரிணை வழியாகத்தான் பல்வேறு நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. அதனால், மேற்காசிய பதற்றத்தால் கடந்த மூன்று மாதங்களாக ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.

நாள்தோறும் சுமார் 100 சரக்குக் கப்பல்கள் இந்த நீரிணை வழியாகச் சென்று கொண்டிருந்த நிலையில், போருக்குப் பிறகு அது முற்றிலும் முடங்கியது. இப்போது இடைக்கால போர் நிறுத்தம் அமலில் உள்ளபோதிலும் நாள்தோறும் சுமார் ஐந்து, ஆறு கப்பல்கள்தான் நீரிணையைக் கடந்து செல்கின்றன.

அமெரிக்கா-ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்தை மேலும் 60 நாள்களுக்கு நீட்டிக்கவும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் அண்மையில் ஓர் உடன்பாடு எட்டப்பட்டது. டிரம்ப் மற்றும் ஈரான் தலைவர்களின் ஒப்புதலுக்காக அது காத்திருக்கிறது.

அந்த உடன்பாடு அமலுக்கு வந்தால் மேற்காசிய விவகாரத்துக்கு தற்காலிக தீர்வு காண்பதில் பெரும் பங்கு வகிப்பதாக இருக்கும். ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடு அற்றதாக இருக்க வேண்டும் என அமெரிக்காவும், ஹோர்முஸ் நீரிணையை ஓமனுடன் இணைந்து நிர்வகிக்கப்போவதாக ஈரானும் தொடர்ந்து கூறிவரும் சூழலில் இந்த உடன்பாடு எட்டப்பட்டிருப்பது மிகவும் வரவேற்புக்குரியது.

உடன்பாடு குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும் அமெரிக்கா அல்லது ஈரான் இரண்டில் ஏதோ ஒரு தரப்பு இறங்கி வந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடையின்றி தொடர ஈரான் ஒப்புதல் அளித்தது என்றால், அதற்குப் பிரதிபலனாக ஈரான் துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகையை அமெரிக்கா விலக்கிக் கொள்ள சம்மதித்திருக்கக்கூடும். மேற்காசிய விவகாரத்தின் மையப்புள்ளியாக ஹோர்முஸ் நீரிணை ஆகிவிட்டது என்பதால், அதுதொடர்பாக ஒரு முடிவுக்கு வராமல் ஓர் உடன்பாட்டை அமெரிக்காவும், ஈரானும் எட்டியிருக்க வாய்ப்பு இல்லை.வழக்கம்போல இந்த உடன்பாடு குறித்த தகவலை ஈரான் மறுத்திருக்கிறது. "உண்மையில் ஓர் உடன்பாடு இறுதி செய்யப்பட்டிருந்தால், அதை பாகிஸ்தானிய மத்தியஸ்தர்களிடமும் மக்களிடமும் ஈரான் அறிவிக்கும். அதுவரை மேற்கத்திய தரப்பிலிருந்து வெளியாகும் எந்த ஒரு தகவலும் செல்லாது' என்பது ஈரான் தரப்பின் கருத்து.

ஏப்ரல் 8-ஆம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வருவதற்கு சில நாள்கள் முன்புவரை அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என்றே ஈரான் கூறிவந்தது. ஆனால், பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவுக்கு தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு பேச்சுவார்த்தை தொடங்கியது. இப்போது ஈரான் மறுத்திருப்பதற்கு அதன் உள்நாட்டு நெருக்கடி காரணமாக இருக்கலாம்.

இடைக்கால போர் நிறுத்தத்தை மீறி அவ்வப்போது நடத்தப்படும் தாக்குதலால் ஈரானுடனான பேச்சுவார்த்தை பாதிக்கப்படாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். இப்போதும் மூன்றாம் தரப்பு மூலமாகத்தான் அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்றன.

பேச்சுவார்த்தையில் வெளிப்படைத்தன்மை இல்லாததும், பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை எப்போதுமே ஈரான் மறுத்துச் சொல்வதுமே அமைதி உடன்பாடு கையொப்பமாகாததன் காரணம். இந்தப் போரால் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஆகியவை நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்றால், அதே அளவுக்கு பொருளாதார பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன உலக நாடுகள். இனியும் அமெரிக்காவும் ஈரானும் வறட்டுப் பிடிவாதம் பிடிப்பது எந்த வகையிலும் நியாயம் அல்ல.

பகைஎன்னும் பண்பு இலதனை ஒருவன்

நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிரித்துப் பொழுதுபோக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.

திருக்குறள் (எண் 871) அதிகாரம்: பகைத்திறம் தெரிதல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.