இந்தியாவின் 100-ஆவது ராம்சர் தளமாக உத்தர பிரதேசத்தில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அறிவியல், புத்தாக்கம், விழிப்புணர்வு முன்னெடுப்புகள் மூலம் கடந்த சில ஆண்டுகளாக ஈரநிலங்களின் பரப்பைப் பாதுகாக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் பலனாக இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. உலக சுற்றுச்சூழல் தினமான கடந்த ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு உற்சாகம் அளித்திருப்பதுடன் பசுமையான எதிர்காலத்துக்கான உத்தரவாதமும்கூட.
ஈரநிலங்களைப் பாதுகாக்கும் நோக்கில் கடந்த 1971-ஆம் ஆண்டு, ஈரானில் உள்ள ராம்சர் நகரில் நடைபெற்ற மாநாட்டில் சர்வதேச நாடுகள் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டன. இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நாடுகள் ஈரநிலம் என வரையறுக்கப்படும் பகுதிகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 173 நாடுகள் கையொப்பமிட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில் 1982, பிப்ரவரி 1-ஆம் தேதி இந்தியா கையொப்பமிட்டது.
ராம்சர் ஒப்பந்தத்தின் கீழ் முதல் ராம்சர் தளமாக ஆஸ்திரேலியாவின் கோபர்க் தீபகற்பம் 1974-இல் அங்கீகரிக்கப்பட்டது. பிரேஸிலில் உள்ள 1.20 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட ரியோ நீக்ரோ தளம் ராம்சர் தளங்களிலேயே மிகப் பெரியது.
அதிகபட்சமாக பிரேஸிலில் 2.67 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவு, ராம்சர் தள ஒப்பந்தத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன. அடுத்தபடியாக பொலிவியா, கனடா, சாட், காங்கோ, காங்கோ ஜனநாயக குடியரசு, ரஷிய கூட்டமைப்பு ஆகியவை தலா ஒரு லட்சம் சதுர கி.மீ. பரப்பளவு ராம்சர் தளங்களைக் கொண்டுள்ளன.
ஆசியாவிலேயே அதிக ராம்சர் தள எண்ணிக்கையுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் பிரிட்டன் (176), மெக்ஸிகோ (144) ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக மூன்றாவது அதிக ராம்சர் தளங்களை இந்தியா கொண்டிருக்கிறது. இந்தியாவில் ராம்சர் தளங்களின் எண்ணிக்கை 26-லிருந்து கடந்த 11 ஆண்டுகளில் 100-ஆக அதிகரித்திருக்கிறது; இவற்றில் 58 தளங்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
உத்தர பிரதேசத்தின் 13-ஆவது ராம்சர் தளமாக உருவெடுத்துள்ள ஜெயபிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம், உலகின் 2,595-ஆவது ராம்சர் தளமாகும். பலியா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தப் பறவைகள் சரணாலயத்தில் உள்ள ஏரி இயற்கையின் கொடை. மத்திய ஆசிய பறவைப் பாதையில் பயணிக்கும் பறவை இனங்களுக்கு முக்கியமான குளிர்காலத் தங்குமிடமாகத் திகழ்கிறது இந்த ஏரி.
அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கும் ஒரு முக்கிய நீர்ப்பாசன மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டல் ஆதாரமாகவும் இது விளங்குகிறது. பருவமழைக் காலத்தில் இதன் 25,000 ஹெக்டேர் நிலப்பரப்பு நீரில் மூழ்கி, பரந்த அளவிலான இயற்கையான வாழ்விட விரிவாக்கத்தை உருவாக்கும் மிகச் சிறந்த சதுப்பு நிலமாகத் திகழ்கிறது.
இந்தியாவில் உள்ள 100 ராம்சர் தளங்களில் 20 தளங்களுடன் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்பது நமது மாநிலத்துக்குக் கிடைத்துள்ள பெருமை. கடைசியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாக்கரகோட்டை, தீர்த்தங்கல் ஆகிய இரு பறவைகள் சரணாலயங்கள் ராம்சர் தளங்களாக அங்கீகரிக்கப்பட்டன.
தமிழகத்தின் முதல் ராம்சர் தளமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்கரை பறவைகள் சரணாலயம் 2002-இல் அங்கீகரிக்கப்பட்டது. அதுமுதல் சதுப்புநில பாதுகாப்பில் தமிழகம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு இந்தியாவுக்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
பல்லுயிர்ப் பெருக்கத்தையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாக்கும் நீர்நிலைகளைப் பாதுகாக்க ராம்சர் தள அங்கீகாரம் உதவுகிறது. இந்த சரணாலயங்கள் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு சூழல் கல்வி வாய்ப்புகளையும், இயற்கை ஆர்வலர்களுக்கு சூழல் சுற்றுலா வாய்ப்புகளையும் வழங்குகின்றன. அதேநேரத்தில் நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல், வேளாண்மை விரிவாக்கம், போதுமான உள்கட்டமைப்பு இல்லாமை ஆகியவற்றால் நாடு முழுவதும் சில ராம்சர் தளங்கள் குறிப்பிடத்தக்க தொடர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன.
உலகின் சூழல் மண்டலத்தில் அதிக அச்சுறுத்தலை சதுப்புநிலங்கள்தான் எதிர்கொண்டு வருகின்றன. 1970-ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை 40 கோடி ஹெக்டேர் சதுப்புநிலங்கள் அழிவைச் சந்தித்திருக்கின்றன. எஞ்சியிருப்பவற்றில் கால் பகுதி சிதைந்த நிலையில் உள்ளன என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
சர்வதேச அங்கீகாரமே பெற்றிருந்தாலும், ராம்சர் தளங்களைப் பாதுகாப்பது பெரும் சவாலாக மாறியிருக்கிறது. ராம்சர் தளமாக வரையறுக்கப்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு, ராம்சர் தளங்களுக்கு நீர் வரும் ஓடைகளில் வீடுகளின், தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பு, பாதுகாப்பில் முறையான திட்டமிடல் இன்மை என அவலங்கள் தொடர்கின்றன.
சதுப்பு நிலங்கள், சதுப்பு நிலக் காடுகள், அலையாத்திக் காடுகள் போன்ற ஈரநிலங்கள் பூமியின் நீரை வடிகட்டி தூய்மைப்படுத்துவதால் "பூமியின் சிறுநீரகங்கள்' என அழைக்கப்படுகின்றன. சிறுநீரகங்கள் கெட்டுப்போனால் மனிதர்களுக்கு அழிவு; ஈரநிலங்கள் கெட்டுப்போனால் பூமிக்கு அழிவு.
பருவமழையைப் பாதிக்கும் எல்நினோ, பருவநிலை மாற்றம் என உலகம் எதிர்கொண்டுவரும் சூழல் சிக்கல்களைத் தணிப்பதில் சதுப்பு நிலங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல்லுயிர்ப் பெருக்கத்துக்கும், கரியமில வாயுவை ஈர்த்து காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கும் சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பது மிக அவசியம்.
பகுத்துஉண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல், அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
திருக்குறள் (எண் 322) அதிகாரம்: கொல்லாமை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவின் 100-ஆவது ராம்சா் தளம்: பிரதமா் அறிவிப்பு

மந்த கதியில் களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயில் திருப்பணிகள்: விரைவுபடுத்த பக்தா்கள் கோரிக்கை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் பொறுப்பேற்பு!

திருவள்ளூா்: பலத்த மழையால் குளிா்ந்த சூழல்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


