தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

சட்டம் இருந்தும் என்ன பயன்?

போதிய சட்டப் பாதுகாப்பு இருக்கிறது. ஆனால், குடும்ப வன்முறைகள் தொடர்கின்றன என்றால் சட்டம் இருந்தும் என்ன பயன்? என்பதைப் பற்றி...

News image
Updated On :15 ஜூன் 2026, 4:10 am IST

நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இருக்கும் மதிப்பு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் இல்லத்தரசிகளுக்கு இல்லை என்கிற பொதுவான எண்ணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம். 'இல்லத்தரசிகள்தான் நாட்டைக் கட்டமைப்பவர்கள்; அவர்களது பணிக்கு மாதம் ரூ.30,000 மதிப்பு' என்று உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் அண்மையில் தெரிவித்த கருத்து பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

பஞ்சாபை சேர்ந்த நபர் ஒருவரின் மனைவி கடந்த 2001-ஆம் ஆண்டு வாகன விபத்தில் உயிரிழந்தார். அந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள். இழப்பீடு கோரி கணவரும் மூன்று குழந்தைகளும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம், அவர்களுக்கு ரூ.2.42 லட்சம் இழப்பீடு அளிக்க உத்தரவிட்டது. இந்தத் தொகை போதாது எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பஞ்சாப்- ஹரியாணா உயர்நீதிமன்றம், ரூ.8.43 லட்சம் இழப்பீடு, அதனுடன் 7.5 சதவீத வட்டி வழங்க ஆணையிட்டது.

உயர்நீதிமன்றம் வழங்க உத்தரவிட்ட தொகை போதாது எனவும், கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோதுதான் நீதிபதிகள் சஞ்சய் கரோல், என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தனர். இல்லத்தரசியானவர் கணவரின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது, தேசத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பு செய்கிறார் எனத் தெரிவித்த நீதிபதிகள், இல்லத்தரசியின் இழப்பால் ஏற்படும் வீட்டு பராமரிப்புச் செலவுக்கான இழப்பீடாக குறைந்தபட்ச தொகையாக மாதம் ரூ.30,000-ஆக நிர்ணயம் செய்தனர். 'பொதுவாக இல்லத்தரசி என்பவர், வீட்டில் சம்பளம் ஈட்டுவோரைச் சார்ந்திருப்பதை போலத் தெரியும். உண்மையில் இல்லத்தரசியைச் சார்ந்தே அந்த வீடு உள்ளது.

Story image

எதிர்காலத்தில் இல்லத்தரசிகளின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இல்லத்தரசி அல்லது வீட்டு பொறுப்பாளர் என்ற சொல், தேசத்தைக் கட்டமைப்பவர் என்று பயன்படுத்தப்படும் என நம்புகிறோம்' என நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் ஒட்டுமொத்த பெண் இனத்துக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளன.

பெண்களின் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகள், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் 15 முதல் 17 சதவீதம் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவற்றுக்கு ஊதியம் அளிக்கப்படாமலும், அங்கீகாரம் இல்லாமலும் இருக்கின்றன என்றும் தெரிவித்த நீதிபதிகள், விபத்து இழப்பீடுகளைக் கணக்கிடும்போது இதைக் கவனத்தில்கொள்ள வேண்டும் என வழிகாட்டுதலையும் வழங்கியுள்ளனர்.

மக்கள்தொகையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு பலமும் பலவீனமும் அதுதான். ஆனால், மனிதவளத்தைத் திறமையாகப் பயன்படுத்துவதில் இந்தியா சிறப்பாகவே செயல்படுகிறது. அதிலும், உழைக்கும் வர்க்கம், இளைஞர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு இருக்கும் ஓர் உணர்வுபூர்வ பாதுகாப்பு வேலைக்குச் செல்லாமல் குடும்பத்தினரை கவனித்துக் கொள்ளும் இல்லத்தரசிகளுக்கு இல்லை என்பதுதான் உண்மை.

இல்லத்தரசிகளுக்கு உரிய மதிப்பை வழங்காதது ஒருபுறம் இருக்க, குடும்ப வன்முறை என்கிற பெயரில் பெரும் கொடுமைகளுக்கும் அவர்கள் உள்ளாகின்றனர். 2024-ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரப்படி இந்தியாவில் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்பாக 4.41 லட்சம் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில், 1.20 லட்சம் வழக்குகள் குடும்ப வன்முறை வழக்குகள். கணவர் அல்லது உறவினர்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள்தான் குடும்ப வன்முறை என்கிற வரையறைக்குள் வருகின்றன.

அந்த வகையில், உத்தர பிரதேசம் 21,266 வழக்குகளுடன் குடும்ப வன்முறையில் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கம் 19,330 வழக்குகளுடன் உள்ளது. தமிழகத்தில் 3,344 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 2,042 வரதட்சிணைக் கொடுமை வழக்குகளும், வரதட்சிணைக் கொடுமையால் 34 பெண்கள் உயிரிழந்த வழக்குகளும் அடங்கும்.

இல்லத்தரசிகள் தற்கொலையிலும் இந்தியாவிலேயே தமிழகம் நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பது பெரும் அவலம். 2021-இல் நாடு முழுவதும் தற்கொலை செய்துகொண்ட இல்லத்தரசிகளின் எண்ணிக்கை 23,179 என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது; இதில் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்ட இல்லத்தரசிகளின் எண்ணிக்கை 3,221. 2022-இல் இந்தியா முழுவதும் தற்கொலை செய்துகொண்ட இல்லத்தரசிகளின் எண்ணிக்கை 25,309 என்றால் தமிழகத்தில் 3,093 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

2023-இல் இந்த எண்ணிக்கை இந்தியாவில் 24,048 என்றால், தமிழகத்தில் 3,080. 2024-இல் நாட்டில் 22,113 இல்லத்தரசிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்; தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 2,821. இந்தியாவில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005 அமலில் உள்ளது. மிரட்டுவது, உடல்ரீதியாக காயப்படுத்துவது, பாலியல் தொல்லை, உணர்வு ரீதியாக துன்புறுத்துவது, இழிவுபடுத்துவது, பொருளாதார ரீதியாகத் துன்புறுத்துவது, வரதட்சிணை தொடர்பான சித்திரவதைகள் ஆகிய குற்றங்கள் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வருகின்றன. போதிய சட்டப் பாதுகாப்பு இருக்கிறது. ஆனால், குடும்ப வன்முறைகள் தொடர்கின்றன என்றால், சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை என்றுதானே பொருள்?

********

வான்நோக்கி வாழும் உலகெல்லாம்; மன்னவன்

கோல்நோக்கி வாழும் குடி.

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நோக்கி வாழ்கின்றன; அதுபோல் குடிகள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.

திருக்குறள் (எண் 542) அதிகாரம்: செங்கோன்மை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.