இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலமாக தமிழகம் தொடர்வது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்சிஆர்பி) தரவுகளின்படி 2024-ஆம் ஆண்டு இந்தியாவில் 4.95 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. 2023-இல் 4.91 லட்சம் விபத்துகள் நிகழ்ந்தன.
தமிழகத்தில் 2024-இல் 69,828 சாலை விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. 2023-ஆம் ஆண்டு நிகழ்ந்த 69,491 சாலை விபத்துகளுடன் ஒப்பிடுகையில், 2024-இல் சற்று அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் நிகழ்ந்த விபத்துகளில் 71,868 பேர் காயமடைந்திருக்கின்றனர். விபத்து மரணங்கள் என்ற வகைப்பாட்டில் சாலை விபத்துகளால்தான் 42.6 சதவீத மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
சாலை விபத்துகளில் நாடு தழுவிய அளவில் 1.99 லட்சம் உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. சராசரியாக தினமும் 546 உயிரிழப்புகள், 2023-இல் 1.98 லட்சம் உயிரிழப்புகள் நிகழ்ந்தன. தமிழகத்தில் 2024-இல் நிகழ்ந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 20,390. தேசிய அளவிலான சாலை விபத்து உயிரிழப்புகளில் இது 10.2%, சாலை விபத்து உயிரிழப்புகளைப் பொருத்தவரை 2024-இல் 27,071 உயிரிழப்புகளுடன் உத்தர பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகம் 20,390 உயிரிழப்புகளுடன் இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரம் 19,475 உயிரிழப்புகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. நாடு முழுவதுமான மொத்த உயிரிழப்புகளில் இந்த மூன்று மாநிலங்களின் பங்கு மட்டும் 33.6%.
இந்த சாலை விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், பாதசாரிகளும். இந்தியாவில் இருசக்கர வாகன விபத்துகளில் 84,599 பேரும், கார் விபத்துகளில் 23,739 பேரும் உயிரிழந்துள்ளனர்; பாதசாரிகள் உயிரிழப்பு எண்ணிக்கை 25,769.
இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் இருசக்கர வாகன விபத்துகளில் 11,786 பேர் உயிரிழந்துள்ளனர்; பாதசாரிகளில் 4,176 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்; இது தேசிய அளவிலான உயிரிழப்புகளில் 16.2%.
2024-இல் நிகழ்ந்த சாலை விபத்து உயிரிழப்புகளில் 58% உயிரிழப்புகளுக்கு அதிக வேகம்தான் காரணம். அதிக வேகம் காரணமாக நிகழ்ந்த விபத்துகளில் தமிழகத்தில் 13,765 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவும் இந்தியாவிலேயே அதிகம்.
அபாயகரமாகவும், கவனக்குறைவாகவும் வாகனங்களை இயக்கியதால் ஏற்பட்ட விபத்துகளில் 26.3% உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. காலநிலை காரணிகள் 2.9% விபத்துகளுக்குக் காரணமாகியிருக்கின்றன என்றால், மது அருந்திவிட்டு அல்லது போதையுடன் வாகனங்களை இயக்கியதால் ஏற்பட்ட விபத்துகளில் 1.9% உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.
மாநில நெடுஞ்சாலைகளில் நடைபெற்ற விபத்துகளில் இந்தியா முழுவதுமான உயிரிழப்பு விகிதம் 22%. பிற சாலைகளில் ஏற்பட்ட விபத்து மரணங்கள் 48.2% மாநில நெடுஞ்சாலை விபத்து மரணங்களில் தமிழகம் (21,688) முதலிடத்தில் உள்ளது. இந்த விபத்துகளில் 6,099 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநில நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த விபத்துகளில் உத்தர பிரதேசத்தில் 6,359 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவின் சாலைக் கட்டமைப்பில் தேசிய நெடுஞ்சாலைகளின் பங்கு 2.1 சதவீதம்தான். ஆனால், இவை 29.8% சாலை விபத்துகளுக்கு காரணமாகியிருக்கின்றன.
ஆண்டுதோறும் சாலை விபத்து மரணங்கள் அதிகரித்துக் கொண்டே செல்வது, இது தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்வதற்கான அவசியத்தை ஏற்படுத்துகிறது. அதிக வேகம், ஆக்ரோஷமாக வாகனங்களை இயக்குதல், சாலைப் போக்குவரத்து விதிகளை மீறுதல் போன்றவைதான் சாலை விபத்துகளுக்கான பிரதான காரணங்கள்.
இளைஞர்கள் மத்தியில் 'பைக் ரேஸ்' எனப்படும் மோகம் அனைத்து நகரங்களிலும் அதிகரித்து வருகிறது. தடையை மீறி 'ஆட்டோ ரேஸ்' போன்றவையும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து நடக்கின்றன.
இரவு மற்றும் அதிகாலை நேரங்களில்தான் அதிக விபத்துகள் நடக்கின்றன. அதற்குக் காரணம் வாகனத்தை இயக்கும்போது ஓட்டுநர்கள் தூங்கிவிடுவதுதான். நீண்ட தொலைவு பயணங்களின்போது ஓட்டுநர்கள் போதிய ஓய்வெடுத்து வாகனத்தை இயக்க வேண்டும், சொந்த வாகனமாக இருந்தாலும் குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பை ஒழுங்காக மேற்கொள்ள வேண்டும் போன்ற அறிவுரைகளை சாலைப் போக்குவரத்துத் துறை வழங்குகிறது. ஆனால், இந்த அறிவுரைகளை எத்தனை பேர் பின்பற்றுகின்றனர் என்பது கேள்விக்குறிதான்.
ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பெயருக்குச் சேர்ந்து, வட்டார சாலைப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு சுற்று வாகனத்தை இயக்கினாலே இருசக்கர வாகனம் என்றாலும், நான்கு சக்கர வாகனம் என்றாலும் எளிதாக ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றுவிட முடிகிறது. வாகனத்தை முறையாக இயக்கத் தெரியாமல் விபத்தை ஏற்படுத்துவது இந்தப் புள்ளிவிவரங்களில் தனியாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அந்த மாதிரியான விபத்துகளும் அதிகமாக நடக்கத்தான் செய்கின்றன. அதற்குக் காரணம் ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் கவனக்குறைவு காணப்படுவதை சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.
சாலைப் போக்குவரத்து விதிமீறல், சட்ட அமலாக்கத்தில் தீவிரத்தன்மை இல்லாமை, மோசமான சாலைக் கட்டமைப்புகள் உள்ளிட்டவை சாலை விபத்துக்கான இன்னபிற காரணங்கள். போக்குவரத்து விதிகளை மதித்தல், வாகனங்களை இயக்கும் போது மிதமான வேகம், போக்குவரத்து விழிப்புணர்வு உள்ளிட்டவை பேணப்பட்டால்தான் சாலை விபத்துகளைக் குறைக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெவ்வேறு சாலை விபத்துகளில் மூவா் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் பலி

வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

பாகிஸ்தான்: ரமலான் விடுமுறை விபத்துகளில் 40 போ் உயிரிழப்பு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

